
நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
‘‘நம்பினார் கெடுவதில்லை’’. கடவுளை நம்பினார் கெடுவதில்லை… சரி!
கயவர்களை நம்பினால்…? நல்லவர் யார்? ெகட்டவர் யார்…?
எப்படிக் கண்டு பிடிப்பது?
‘‘மக்களே போல்வர் கயவர்’’ – என்கிறார் திருவள்ளுவர்.
நடையுடை பாவனையெல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனால் நாடி நரம்பெல்லாம் நயவஞ்சகமாத்தான் இருக்கும். இவங்களை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது?
சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும்தான் மனிதனை நல்லவனா, நம்பிக்கைத் துரோகியான்னு அடையாளம் காட்டும். நமக்கு நன்கு தெரிந்தவர்களையும், பழகியவர்களையும் நம்புவதா, வேண்டாமா…?
யார் யாரை எந்த அளவுக்கு நம்ப வேண்டும் என்று நமது மனதுக்குள்ளே ஒரு வரையறை வகுத்துக்கொள்ள வேண்டும்.
சிலரை வெளித்திண்ணையில் உட்கார வைக்க வேண்டும். சிலரை ‘வெராண்டா’ வரைக்கும் வந்து உட்கார வைக்கலாம். சிலரை ‘ஹால்’ வரைக்கும், சிலரை ‘டைனிங்’ வரைக்கும் உட்கார வைக்கலாம். ஆனால்,
எக்காலத்தும், எக்காரணம் கொண்டும் எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும்கூட, ‘பெட்ரூமுக்கு’ மட்டும் யாரையும் வரவழைத்துப் பேசக்கூடாது.
‘‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம், மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்’’ – என்கிறது ‘உலக நீதி’.
‘‘ஒன்னாரைத் தேறேல்’’ – (பகைவர்களை ஒருபோதும் நம்பாதே) என்கிறார் ஒளவையார்.
‘‘நம்பக் கூடாதவனிடம் நம்பிக்கை வைக்கக் கூடாது… நம்பக் கூடியவனிடமும் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது. பெண்கள், போக்கிரிகள், சோம்பேறிகள், பயந்தவர்கள், கொடுமைக்காரர்கள், கர்வம் கொண்டவர்கள், திருடர்கள், நன்றி மறந்தவர்கள், நாத்திகர்கள் முதலியவர்களிடத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது’’ – என்கிறது ‘விதுர நீதி’.
‘‘அரசனையும், பெண்ணையும், குதிரையையும் அப்படியே நம்பிவிடக்கூடாது’’ – என்கிறது பாரசீகப் பழமொழி.
‘‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’’ – என்பது நம்மூர் பழமொழி.
‘‘கேப்பையில் நெய் வடியுதுன்னா கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு, அவன் எப்படி நம்பலாம்’’-னு சொல்வாங்க.
‘‘அதைத்தான் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு குரு, உலகத்துல இருக்கிற எல்லா உயிர்களும் தெய்வத்தோட அம்சம்தான்-னு சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
சீடர்களில் ஒருவன், குரு எது சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை நம்புறவன்.
ஒரு நாள் அவன், தெரு வழியா வந்து கிட்டிருந்தப்போ, திடீர்னு எதிர்த்தாப்புல, அந்த ஊர் கோயில் யானை மதம் புடிச்சு பயங்கரமா ஓடி வந்தது. தெருவுல போனவங்க அங்கயும் இங்கயும் பதறியடிச்சு ஓட, இவன் மட்டும், ‘‘இந்த யானையும் தெய்வத்தோட அம்சம்தானே’’-ன்னு கும்பிட்டுகிட்டே போனான்.