
நீ என்னவாகப் போகிறாய்..?
கவிஞர் மு.முருகேஷ்
‘‘குளத்தில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது’’, இப்படியொரு சொல்வழக்குத் தமிழில் உண்டு. நீச்சல் கற்றுக்கொள்ள மட்டுமல்ல; எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கான களத்தில் இறங்கிச் செயலாற்றாமல் வெற்றி கிட்டாது. வெறும் சொல்லால் மட்டுமோ, அந்தச் செயல் பற்றிய அறிவினால் மட்டுமோ இலக்கை அடைந்துவிட முடியாதல்லவா..!
அந்தக் கிராமத்தில் பெரிய குளமொன்று இருந்தது. அதன் அருகிலிருந்த பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புப் படித்துவந்தார்கள் வெற்றியும், மதியும்.

அந்தக் குளத்தில் நீச்சல் தெரியாத ஒருவர் கால் இடறி, விழுந்துவிட்டார். தண்ணீரில் தத்தளித்தார். மூழ்கி மூழ்கி எழுந்தார். நல்லவேளை, அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துவிட்டு, அவரைக் கரைக்கு இழுத்து வந்தார்கள். நிறையவே தண்ணீர்க் குடித்துவிட்டார் போலும்; வயிறு பானை போல் பெரிதாக இருந்தது. மூச்சுவிட முடியாமல் திணறினார். அவரை ஒருக்களித்து படுக்க வைத்தனர். பிறகு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிப்போயினர். இதை வெற்றி, மதி இருவருமே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
அன்றிலிருந்தே குளத்துப்பக்கம் போவதை முற்றாகத் தவிர்த்தான் வெற்றி. யாராவது கூப்பிட்டாலும், “யப்பா, நா வர்லே. எனக்கு நீச்சல் தெரியாது…” என்று ஒதுங்கிக்கொண்டான்.
ஆனாலும், அந்தக் குளத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அந்த ஊரிலுள்ள பெரியவர்கள் மூலமாகக் கேட்டறிந்துகொண்டான்.
அந்தக் குளம் யாரால் எப்போது அமைக்கப்பட்டது, அதன் அகலம் என்ன, ஆழம் எவ்வளவு, குளத்தில் என்னென்ன உயிரினங்கள் உள்ளன உள்ளிட்ட பல விஷயங்களை ஆர்வத்தோடு கேட்டுத் தெரிந்துகொண்டான். ஆனால், நீச்சலடிக்க மட்டும் வெற்றிக்குத் தெரியாது.
வெற்றியின் நண்பர்கள் பலரும் ஆர்வத்தோடு நீச்சல் கற்றுக்கொண்டனர். வெற்றியையும் கூப்பிட்டார்கள். “அய்யோ… நா அந்தப் பக்கமே வர மாட்டேன்” என்று பயந்தொதுங்கிக்கொண்டான்.
சிறுவயதில் தான் பார்த்த ஒரு சம்பவம், வெற்றியை ரொம்பவே பாதித்தது. அன்றிலிருந்து குளம் குறித்த அச்சம் அவன் மனதில் குடியேறிவிட்டது. குளத்தில் விழுந்தால் மூழ்கி விடுவோம் என்று பயந்தான். இனிமேல் குளத்துப் பக்கம் போகக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.
அதே சம்பவத்தை அருகிருந்து பார்த்த மதியோ, வேறொன்றை உறுதியெடுத்துக்கொண்டான். “சீக்கிரமே நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்” என்று. வீட்டிற்கு வந்ததும் தந்தையிடம் தனது விருப்பத்தைச் சொன்னான். அவரும் ‘சரி’யென்றார்.
அடுத்த நாளிலிருந்து தினமும் காலையில் தந்தையோடு சேர்ந்து குளத்திற்குச் சென்றான் மதி. தந்தை இரு கைகளையும் முன்பக்கமாக நீட்டுவார். அதில் படுத்துக்கொண்டு, கைகளையும் கால்களையும் வேகமாக அசைப்பான். மதிக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தந்தை அருகிலிருக்கிறார் என்பதே அந்தப் பயத்தைப் போக்கியது. கொஞ்சம் நாளிலேயே நீச்சலடிக்கக் கற்றுக்கொண்டான் மதி.
வெற்றி, மதி இருவருமே பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தான். என்றாலும் இருவரும் பார்த்த ஒரே சம்பவம், எப்படி இருவரின் மனதிலும் இரு வேறு தாக்கங்களை உண்டாக்கி இருக்கிறது.
ஒரு பொருள் குறித்த அறிவு நம்மிடம் இருக்கிறது என்பது நல்லதுதான். ஆனால், அந்த அறிவு மட்டுமே போதுமானதல்ல. அதனைச் செயலாற்றிட வேண்டும். குளம் பற்றிய அறிவார்ந்த விஷயங்கள் வெற்றிக்குத் தெரியும்; ஆனால், அவனுக்கு நீச்சல் தெரியாது. குளம் பற்றிய விஷயங்கள் எதுவும் மதிக்குத் தெரியாது; ஆனால் மதிக்கு நீச்சலடிக்கத் தெரியும். இதில், அறிவு பெரிதா, செயல் பெரிதா என்கிற விவாதம் முக்கியமல்ல; எந்த அறிவையும் செயலாக்கத்தின் வழியாக மட்டுமே வெற்றியாக மலர்த்திட முடியும்.
வாழ்க்கையில் முயற்சியை மேற்கொள்ளும் எல்லோருமே வெற்றிப்பெற்று விடுவதில்லை. எத்தனை முறை தோல்வியைத் தழுவினாலும், மனம் சோராமல், தான் செய்யும் தவறுகளைக் கண்டறிந்து, அதைத் திருத்திக்கொண்டு, விடாமுயற்சியோடு தொடர்ந்து களமாடுபவர்களே வெற்றியாளர்களாகப் பரிணமிக்கிறார்கள். அப்படியான ஓர் ஆளுமையைப் பற்றி அறிந்துகொள்வோமா..!
காவிரி பாய்ந்தோடிய தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சிற்றூர் சோழன்குடிக்காடு.
அந்தக் கிராமத்தில் பிறந்த மாணவன் ஒருவனுக்குப் படிப்பின்மேல் மிகுந்த ஈடுபாடு இருந்தது. காலத்தின் விளையாட்டில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த அவனது தந்தை கந்தசாமி இறந்துபோகவே, அந்த மாணவனின் கல்விக்கனவு, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியாமல் நின்றுபோனது.
தனது தாயாருடன் சேர்ந்து விவசாய வேலைகளில் ஈடுபட்டார். உடன் பிறந்தோர் மூன்று சகோதரிகள். கிடைத்த வருமானத்திற்குள் சிக்கனமாகக் குடும்பத்தை நடத்திவந்தார் தாயார்.
‘பணியில் இருக்கும்போதே இறந்துபோன தந்தையின் பணியை கருணை அடிப்படையில் பெறலாமே..!’ என்கிற எண்ணத்தில் விண்ணப்பித்தார் அந்த மாணவர். தொடர் முயற்சிகள், அடுத்தடுத்த அலைக்கழிப்புகள், அதிகாரிகளின் இழுத்தடிப்பு என எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு முயற்சிகளை மேற்கொண்டார். பலனளிக்கவில்லை. விண்ணப்பத்தோடு சேர்ந்து மாணவனின் கல்விச் சான்றிதழும் அலுவலகக் கோப்புகளில் இருந்துவிட்டதால், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆசையும் கைகூடாமல் போயிற்று.
