‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
நம்பிக்கையே வாழ்க்கை!

நம்புனதுல (எதிர்பார்த்ததுல) பாதி கை கூடணும், மீதி அப்படியும் இப்படியுந்தான் அமையணும்; அப்பத்தான் வாழ்க்கையில் ஒரு திரில் இருக்கும். பந்தயத்துல கலந்துகிட்டவங்க எல்லாருமே முதல் பரிசு வாங்கிட்டா பாக்கிறவங்களுக்குப் போரடிக்காதா?

முன்னாலயும் பின்னாலயும் ஓடி வந்துகிட்டிருந்தாத் தானே ‘‘கமான், கமான்’’-ன்னு உற்சாகமா குரல் கொடுக்க முடியும்.

சரி… இது ஒரு புறம் இருக்கட்டும்.  மத்தவங்களை நம்பணும்… வாஸ்தவம்தான்.

நம்புனவங்க எல்லோரும் நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்குவாங்களா…?

இல்லியே…! அப்படி நடந்துகிட்டா… அப்புறம் போலீஸ் எதுக்கு? கோர்ட்டு, கேஸ், பஞ்சாயத்து எல்லாம் எதுக்கு?

நம்பிக்கைத் துரோகம் பண்றதுக்குன்னே பாதிபேர் பொறந்துருக்காங்களே.
இவன் நல்ல பையன், இவனை நம்பி இதை ஒப்படைக்கலாம்னு, ஒரு பொறுப்பைக் கையில குடுத்தா நூத்துக்கு அஞ்சுபேர்தான், மனசாட்சியோட, நம்பிக்கைக்குப் பாத்திரமா நாணயமா… நடந்துக்குறாங்க. மீதி 95 சதவீதம் சுருட்டுறதுலதான் குறியா இருக்காங்க.

அப்படியே அவன் நல்லவனா இருந்தாக்கூட, ‘‘என்னடா… நீ இன்னும் அங்கதான் வேலை பாக்கிறியா… அதே குமாஸ்தா வேலைதானா… கல்லாப் பெட்டி சாவி வரைக்கும் உங்கிட்டதான இருக்கு… இன்னும் பிழைக்கத் தெரியாதவனாவே இருக்கியே… அவனைப் பாரு… அவன் ரெண்டே வருஷத்துல சொந்தமா கடை வச்சுட்டான்… இவனைப் பாரு… இவன் ஆறே மாசத்துல அவனுக்குன்னு ஒரு வழியத் தேடிகிட்டான். நீயும்… இருக்கியே… நீயெல்லாம் என்னத்த உருப்படப் போறே’’ன்னு முதலாளிக்கு வேண்டாத பய இவன் மனசுல நஞ்சக் கலந்துருவான்.

அப்புறம்… பிள்ளைப் பூச்சியா இருந்த இவனும் குளவியா மாறிடுவான்.
இது, மத்தவங்கதான் இவன் மனசைக் கெடுக்கணுங்கிறதுல்ல, பெத்த தாய் தகப்பனே, ‘‘டேய்… பிழைக்கிற வழியப்பாரு… எதுவந்தாலும் நான் பாத்துக்கிறேன்’’-னு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘‘அப்படி நம்பிக்கைத் துரோகம் பண்ணுனவங்க, நரக வாழ்க்கைதான் வாழ்வாங்க, நாசமாய் போயிடுவாங்கன்னு’’ பெரியவங்க சொல்வாங்க.

அது உண்மைதான்! அதனால்தான் மகாகவி பாரதியார், ‘‘‘படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால், போவான் ஐயோன்னு போவான்’’ – என்கிறார்.

அப்படின்னா யாரைத்தான் நம்புவது…? யாரையாவது நம்பித்தானே பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டியதிருக்கிறது…!

வாஸ்தவம்தான்.

அதுக்குத்தான் திருவள்ளுவர் நமக்கு ஐடியா கொடுக்கிறார்.

‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’’ – என்கிறார்.

‘‘இந்தத் தொழிலை, இன்னன்ன திறமைகளால் இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அதன்பிறகு அந்தத் தொழிலை அவனை நம்பி ஒப்படைக்க வேண்டும்.’’
சரி, ஒப்படைச்சாச்சு… இனி அவன் பாத்துக்குவான்னு முழுசுமே நம்பி விட்டுறலாமா…?
கூடாது.

என்னதான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானாலும் அவன் மீது ஒரு கண் இருக்க வேண்டும். அவனது நடவடிக்கைகளை நாம் பல திசைகளில் இருந்தும் கண்காணிக்க வேண்டும் என்கிறார்.
ஒருவர் சொன்னதைக்கூட இன்னொருவரை வைத்துச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.