
மூளை என்னும் முதல்வன்
திரு. A.மோகனராஜூ, சேலம்
‘‘கற்றுக்கொள்வதை எப்போது நீ நிறுத்துகிறாயோ அப்போது இருந்தே நீ இறக்கத்தொடங்குகிறாய்’’ என்று பேரறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னார். வள்ளுவர் பெருந்தகை “கற்க” எனத் துவங்குகிறார். கல்விக்கு ஒரு அதிகாரம் அமைத்தார். ‘‘கல்வியைக் கற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரு மனிதன் இந்த உலகில் பிறக்காமல் இருப்பதே மேல்’’ என்று பேரறிஞர் பிளேட்டோ சொன்னார்.
விலங்கும் பறவையும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கின்றன. மனிதனும் அப்படித்தான். குழந்தைப் பிறந்தவுடன் அதைப் பேசு, பேசு எழுந்து நட நட என்று உற்சாகப் படுத்தும் சமுதாயம், அது நடந்து பேசத்தொடங்கியதும் உலகைப்புரிந்துகொள்ள குழந்தை கேள்விகளை எழுப்புகிறது, தொனத்தொன எனப் பேசாதே, அங்குமிங்கும் ஓடாதே அமைதியாக அமர்ந்திரு என்று அடித்து அமர வைக்கிறது சமுதாயம். குழந்தை குழப்பமடைகிறது.
என்ன செய்வது என்று பெரியவர்களின் அனுமதிக்காக காத்திருக்கிறது. நல்லதை எல்லாம் சமுதாயம் கற்பிக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு குழந்தை தானாகத்தான் தன் அறிவை இந்த உலகில் தேட வேண்டியிருக்கிறது.
ஒரு பறவை இரவை, புயல் மழையை, பசியை, வலியை எதிர்கொள்கிறது, பொழுது விடிகிறது சூரியன் கதிர்கள் உலகில் படுகிறது, எல்லாம் முடிவிற்கு வருகிறது. மீண்டும் பறவை பறவையாகவே இருக்கிறது. இது இயற்கையின் இயல்பு என்று அறிந்திருக்கிறது. மீண்டும் மகிழ்வுடன் தொடர்ந்து வானில் பறக்கிறது. மனிதனும் புயல் மழையை, பசியை, வலியை எதிர்கொள்கிறான், மனிதனுக்கும் அதே பொழுது விடிகிறது எல்லாம் முடிவிற்கு வருகிறது. ஆனால் மனிதன் மனிதனாய் இருப்பதில்லை மனதால் பாதிப்படைகிறான், எனக்குமட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்கிறான். வேதனைப் படுகிறான் நோய்வாய்ப்படுகிறான். இன்பமும் துன்பமும் இயற்கையின் விதி என்பதை அறியாமல் இருக்கிறான்.
‘‘அறியாமை ஒரு பாவம் என்கிறீர்கள், அனைத்தையும் நாம் அறிந்துகொள்ள முடியுமா?’’ என்று நண்பர் கேட்டார். அனைத்தையும் நாம் அறிந்துகொண்டால் மகிழ்வுதான். உதாரணத்திற்கு, சட்டம் பொதுவாக எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது. ஒரு வழக்கறிஞர் அல்லது நீதிபதி அறியும் அளவிற்கு இல்லாமல் போனாலும் நமக்கு வாழ்க்கைக்குத் தேவையானதை நாம் அறிந்துகொண்டே ஆகவேண்டும்.
ஒருநாள் சேலத்தில் இருந்து சென்னைக்கு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது வண்டியில் ஒருவழிப்பாதையில் சென்றுவிட்டேன். ட்ராபிக் போலிசிடம் மாட்டிக்கொண்டேன். ‘‘ஐயா நான் ஊருக்குப் புதுசு கவனிக்காமல் வந்துவிட்டேன். மன்னித்து விட்டு விடுங்கள்’’ என்றேன். அவர் ‘‘பாதை விதிகளின்படி ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வந்துவிட்டீர்கள் இது குற்றம். இது பாதையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகிவிட்டது. அபராதம் ரூ.200 கட்டியாகவேண்டும். பாதைக்கு வந்துவிட்டால் உங்களுக்குப் பாதைவிதிகள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தெரியாது என்று சொல்கிறீர்கள். உங்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். எனக்கு அதற்கு அரசு சம்பளம் கொடுக்கிறது’’ என்றார்.
‘‘ஒருவழிப்பாதையில் அனைவரும் வேகமாக வருவார்கள். திடீர் என்று எதிரே உங்களைப் பார்த்தால் அவர்களால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாது, உங்களாலும் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வாகனம் ஓட்டுவதில் மிகவும் திறமைசாலியாக இருக்கலாம். எதிரில் வருபவர் அவ்வளவு திறமையானவராக இருப்பார் என எதிர்பார்க்க முடியாது, விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும் முடியாது.’’ என்று சொல்லிப் பணம் வசூல் செய்துவிட்டார். நாம் வாழ்க்கைப் பாதையில் அமைதியுடன் பயணிக்க அறிய வேண்டியதை கட்டாயம் அறிந்துதான் ஆக வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் ஒரு நாள் போலிசிடம் மாட்டிக்கொண்டேன். விபத்துக்கள் பெரும்பாலும் எதிர் எதிரே வரும் இருவரால் நடக்கிறது. யாரோ ஒருவர் அறியாமையில் செய்யும் தவறுகளால் பாதையில் பலர் உயிர் இழக்க நேரிடுகிறது. நம் தலையில் உள்ள மூளையை நாம் காப்பாற்றவே தலைக்கவசம் அணியச்சொல்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
நல்லவன் வாழ்வான் என்று சொல்கிறார்கள். ‘‘என்னிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. நான் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவன், எல்லாருக்கும் உதவும் எண்ணம் கொண்டவன் எனக்கு இவ்வளவு துன்பமும் வலியுமா?’’ என்று கேட்கிறார் ஒருவர். ‘‘அவர் உண்மையில் நல்ல குணமுடையவர்தான். அவர் அப்பன் செய்த பாவம் இவரைத்தாக்குகிறது’’ என்று ஒருவர் சொன்னார். எய்தவனை விட்டு விட்டு அம்பை ஏன் நாம் வைய வேண்டும். ஒரு மனிதனுக்கு அறியாமையால் தான் செய்யும் தவறுகளால்தான் அடுத்தடுத்த வருத்தமும், துன்பமும் ஏற்படுகிறது என்பதை அவர் அறியவேண்டும்.
வலி, துன்பம், பஞ்சம், பட்டினி, இல்லாமை, இயலாமை, நோய், முதுமை எல்லாம் இறைவன் கொடுத்தது அல்ல நம் அறியாமையால் வந்த விளைவுகள் என்று சொல்கிறார் ஓர் அறிஞர்.
நம்மை வருத்தமடையச் செய்யும் நிகழ்வுகளின் நினைவுகள் நம்மை அதிகம் பாதிப்படையச் செய்கின்றன. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொல்கிறார் சின்ன சின்ன விசயங்களுக்காவும், தவிர்க்கமுடியாத நிகழ்வுகளுக்காகவும், தவறிப்போய் நடந்த நிகழ்வுகளுக்கும் மன அமைதியை நீ இழக்க வேண்டியதில்லை என்று இன்பமும் துன்பமும் இரண்டறக்கலந்ததுதான் வாழ்வு என்று அறிந்துகொண்டால் வாழ்வில் எப்போதும் நிம்மதிதான்.
உலகில் தோன்றிய கோடான கோடி ஜீவராசிகளில் சிந்திக்கும் ஆறறிவு கொண்ட ஒரே இனம் மனித இனம்தான். அப்படி இருக்கும் இந்த வாழ்வில் எத்தனை பேர் இந்த வாழ்க்கை அற்புதமானது விந்தையானது கிடைத்தற்கறியது என்று எண்ணி வாழ்கின்றார்கள் என்று கணக்கிட்டால் நூற்றில் பத்துபேர் கூட தேறாது என்கிறார் “விடாது முயல்வோம்” என்ற புத்தகத்திற்குச் சொந்தக்காரான தகடூர் T.M.சண்முகவேல். மீதமுள்ள 90 சதம் பேர்களும் அறியாமையில் இருக்கிறார்கள். நமக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நாம் அதற்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டும் அப்போது நமது வாழ்வு அற்புதமானதாக விந்தையானதாக மாறுகிறது என்று கூறுகின்றார்.
அறியாமையில்தான் விபத்துகள் நடக்கிறது. அது மனிதர்களைத் துன்பத்தில் வீழ்த்துகிறது. ஒருவரிடம் ‘‘நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். ‘‘அதிகமான விபத்துகள் நடக்கிறது 30000 அடி உயரத்தில் நடக்கும் விபத்திற்கு யார் வந்து உதவமுடியும். நாம் தப்பிக்க வழி ஏதுமில்லை. அதனால் நான் விமானப் பயணத்தைத் தவிர்த்துவிட்டேன்’’ என்று சொன்னார். ஆனால் நிலத்தில் நடக்கும் விபத்துகளில் லட்சத்தில் ஒன்றே வானத்தில் நடக்கிறது. அதையும் முழுவதுமாக நடக்காமல் தடுக்கும் அறிவியல் ஆய்வுகள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
