அறிவியலின் கதை
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

நாம் எப்போதும் விஞ்ஞானிகள் எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அறிவியல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் கி.பி. 476 – இல் ரோமப் பேரரசு வீழ்ந்தபின் பழைய அறிவை நோக்கிப் போக வேண்டும் என்ற பார்வை ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. கிறிஸ்தவம் ரோம ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வ மதமாகியது. புனித அகஸ்டின் போன்றவர்கள் கடவுள் காட்டுவதுதான் உண்மை, மனிதர்கள் கண்டறிவது உண்மையில்லை என்பதுபோன்ற சிந்தனைகளைக் கொண்டு சென்றனர். இதனால் புதிய விஷயங்களைத் தேடிச் செல்லும் அறிவியலாளர்கள் குறைந்தனர். அரிஸ்டாட்டில், கேலன் போன்ற பண்டைய சிந்தனையாளர்களே முக்கியமான எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்டதாகவும், அவர்களை ஆழ்ந்து படிப்பதே அறிவுக்கு வழி வகுக்கும் எனப் பேசத் தொடங்கினர்.

கி.பி. 500 -1000 வரை பழைய ஞானத்தை ஆராய்வதுமே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் பழைய கிரேக்க, லத்தின நூல்கள் எல்லாம் குறைவாகவே ஐரோப்பாவில் இருந்தன. கல்வி அறிவும் குறைவானவர்களுக்கே கிடைத்தது.

இந்தச் சமயத்தில் ஐரோப்பாவில் அறிவியலை முன்நகர்த்தியவர்கள் ஜெர்மனியில் இருந்து ரோம ராஜ்ஜியத்திற்குள் வந்து குடியேறிய பல்வேறு பிரிவினர். இவர்கள் விவசாயத் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். அதிக விளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பயிர்களைப் பயிரிடவும், நிலத்தைச் சீர்ப்படுத்தும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்திருந்தனர். அதேபோல் ஆடைகளை உருவாக்கும் முறைகளையும் கண்டறிந்திருந்தனர்.

அதேசமயம் இந்தக் காலகட்டத்தில்தான் ஐரோப்பாவில் பெரிய அளவில் தேவாலயங்களும், பேராலயங்களும் கட்டப்பட்டன. இதற்கு ஏற்ப பெரிய கற்களையும், மர வேலைப் பாடுகளையும் வைத்து புதுப்புதுக் கட்டடக்கலை நுட்பங்கள் உருவாகின. கோட்பாட்டுச் சிந்தனை மிகவும் பின் தங்கி அன்றாடப் பயன்பாட்டுக்கான அறிவியல் சிந்தனை வளரத் தொடங்கியது.
பல்கலைக்கழகங்களின் தோற்றம்

இதன் அடுத்த நூற்றாண்டில் வந்த புனித தாமஸ் அக்வினாஸ் எனும் சிந்தனையாளர் ஐரோப்பிய சிந்தனையில் மிக முக்கியத் தாக்கத்தைச் செலுத்தினார். இவர் அரிஸ்டாட்டில் போன்றோர் கூறிய பண்டைய அறிவியல் தத்துவங்களையும் கிறிஸ்தவ சிந்தனையையும் இணைக்கத் தொடங்கினார்.

அதேபோல் தேவாலயங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்த பாடங்கள் பல்கலைக்கழகங்களை நோக்கிச் சென்றன. இந்தக் காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகங்கள் உருவாகி கல்வி என்பது முறைப்பட ஆரம்பித்திருந்தது.

ஏற்கெனவே கிரேக்கத்திலும், பாக்தாத் போன்ற இடங்களிலும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் இன்றைக்கு நாம் காணும் பக்கலைக்கழக அமைப்புகள் அப்போதுதான் உருவாகின. சில பல்கலைக்கழகங்களை தேவாலயங்களே உருவாக்கின. சிலவற்றை செல்வந்தர்கள் தங்கள் தேவைக்காக உருவாக்கினர்.

1180 – ஆம் ஆண்டு போலோக்னா பல்கலைக்கழகம் உருவானது. பிறகு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் படுவா பல்கலைக்கழகம், பாரிஸ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்றவை உருவாகின. இந்தப் பல்கலைக்கழகங்கள் சமயம், சட்டம், மருத்துவம், கலைகள் ஆகியவற்றைப் பயிற்றுவித்தன. இதில் சமயத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சமயத்தை அறிவியலின் அரசி என்று அழைத்தார் அக்வினாஸ்.
மருத்துவத்துடன் சேர்த்து ஜோதிடமும் சொல்லித் தரப்பட்டது.

காரணம், மனித ஆரோக்கியத்தையும் நடத்தைகளையும் நட்சத்திரங்கள் பாதிக்கின்றன என அப்போதும் நம்பப்பட்டு வந்தது. அப்போது விஞ்ஞானிகள் என்று கருதப்பட்ட பலரும் ஒன்று மருத்துவர்கள் அல்லது சமய குருக்களாக இருந்தனர். இவர்கள்தான் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வந்தனர். ஆனால் பல்கலைக்கழக கல்வி, ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் இல்லை.

1300 – களில் உடல்கூராய்வு சார்ந்து படிப்பவர்களுக்கு மனித உடலை வெட்டி உள்ளுறுப்புகள் பற்றி பாடம் சொல்லித்தரப்பட்டது. அரசப் பரம்பரையில் யாரும் இறந்தாலோ அல்லது மர்மமான முறையில் இறப்புகள் ஏற்பட்டாலோ மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் செயல்கள் மனித உடலமைப்பு பற்றிய அறிவை வளர்த்தது.