கலாமைக் கொண்டாடுவோம் 
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

அப்துல் கலாமின் அண்ணன் மகள் முனைவர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் (பகுதி-2)

அப்துல் கலாம் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பராமே? அப்படியா?
உண்மை தான். நான் அவரிடமே அதற்கான காரணத்தைக் கேட்டேன். தயாராகி விட்டோமா என்பதை உறுதிப் படித்திக்கொள்ளத்தானே என்றேன்? சிரிப்பு தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. அவருடைய தயாரிப்புக்கான ஏற்பாடாகவே அவர் அதைக் கருதினார் என்பதை உணர முடிந்தது.

சொந்த ஊரை விட்டு வேறு இடத்தில் பணியாற்றுகிறவர்கள், குடும்ப உறவுகளைப் பேணுவது சிரமமானது. திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், புதுதில்லி எனப் பல இடங்களில் பணியாற்றிய அப்துல்கலாம் எப்படி குடும்ப உறவுகளைக் காத்துக் கொண்டார்?

சென்னையில் தங்கிப் படித்த காலத்தில் வாரம் ஒரு முறை கடிதம் எழுதுவார். தாத்தா பதில் போடுவார். மாடு கன்னு போட்டது, உறவினரின் திருமணம் என எல்லா ஊர்ச் செய்திகளும் உடனுக்குடன் அவரிடம் சென்று சேர்ந்தன.

வேலையில் சேர்ந்த பிறகு, ஊருக்கு வரும்போது, கல்யாணவீடு, துக்கவீடு சென்று விசாரித்து வருவார். பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் விருப்பத்தை அறிந்து அதை அவர் நிறைவேற்றினார்.

தொலைபேசி வந்த பிறகு அடிக்கடித் தொலைபேசியில் பேசுவார். உறவினர்களின் எண்களை வாங்கி அவர்களுடன் பேசுவார். வேலை பரபரப்புகளுக்கிடையே, குடும்ப உறவுகளை பேணிக் காத்து எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

கலாமின் தொலைபேசி அழைப்புகளில் நீங்கள் தான் பேசுவீர்கள். அண்ணனுக்கு செவிக் குறைபாடு இருந்ததால், அண்ணன் – தம்பிக்கு தொலைபேசியில் செய்தி பரிமாற்றப் பாலமாக இருந்தவர் நீங்கள். அந்த அனுபவம் பற்றி?

அப்துல் கலாம் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்தே எல்லா முடிவுகளையும் எடுப்பார். அண்ணனிடம் ‘அரசு என்னைக் குடியரசுத் தலைவராக்கும் முடிவில் இருக்கிறது’ என்ற செய்தியைப் பகிர்ந்தார். இறைவனைப் பிரார்த்தித்து, ‘இது நல்ல வாய்ப்பு. உன்னால் திறமையாகச் செயல்பட முடியும்’ என்றார் அப்பா.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ‘அம்மா, நான் பாஸ்’ என்று தொலைபேசியில் ஒரு குழந்தையைப் போல அவர் கூறிய செய்தி, என் மனதில் இனிப்பான செய்தியாக இன்னமும் இருக்கிறது.

‘என அப்பா ஊர் பிரசிடெண்ட் ஆக இருந்தார். நான் கோர்ட் பிரசிடெண்டாக இருந்தேன். என் தம்பி நாட்டுக்குப் பிரசிடெண்ட்!’ எனச் சிரிப்போடு அப்பா கூறிய காட்சியை வாழ்நாளில் மறக்க முடியாது.

பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாக அப்துல் கலாம் உருவெடுத்தப்பின், வீட்டுக்கு வந்து தங்கிய அனுபவம் பற்றி…

பாதுகாவலர்கள் புடைசூழ அவர் வீட்டிற்கு வரும் நிகழ்வு சிறப்புக்குரியது. 1990 களில் ஒரு திருமணத்தில் பங்கேற்க வந்திருந்து நான்கு நாட்கள் வீட்டில் தங்கியிருந்தார். இரவு, வீட்டின் கூடத்தில் அப்பாவும், சித்தப்பாவும் உறங்கினார்கள். வெளியே திண்ணையில், அவரது பாதுகாவலர்கள் இருந்தனர். உறக்கத்தில் தலையணை விழுந்து, அருகிலிருந்த நாற்காலி சரிந்து பெருத்த ஓசை எழுந்தது. உடனே அவரது பாதுகாப்பு வீரர்கள் உள்ளே வந்தனர். அப்துல் கலாம் அவர்களிடம் ‘ஒன்றுமில்லை. நீங்கள் இன்னும் உறங்கவில்லையா?’ என்று பரிவுடன் கேட்டு, அவர்கள் உறங்கப்பணித்தார்.

தனது கடைசிப் பயணமான ஷில்லாங்கில், தனக்குப் பாதுகாப்பு அளித்த வீரரைஅழைத்து அவர் நன்றி கூறிய செய்தியையும் அறிந்தோம்.

இப்படிப்பட்டவரின் ரத்த உறவு என்பதில் பெருமைப்படுகிறேன்.