
முயற்சி தரும் முன்னேற்றம்!
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
உலகப் புகழ்பெற்ற இசைமேதை மொசார்ட்டை 16 – வயதில் வியன்னா நகரில் சந்தித்தார் இளைஞர் பீத்தோவன். அப்போது மொசார்ட்டின் வயது முப்பத்து ஒன்று. பீத்தோவன் தனது பியாேனாவை வாசித்துக் காட்டினார். அந்த வாசிப்பைக் கண்ட மொசார்ட் மயங்கிப் போனார். அங்கிருந்தவர்களிடம் ‘‘இசைத்துறையில் எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டத்தக்க மாற்றத்தையும், புகழினையும் இந்த இளைஞன் கொண்டு வருவான். இது நிச்சயம் நடைபெறும். இதைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிப் பாராட்டினாராம்.
இசைமேதை மொசார்ட்டுடன் தங்கி இசையின் மேன்மையை இன்னும் கற்றுக்கொள்ள பீத்ேதாவன் ஆசைப்பட்டார். ஆனால், அவரது தாயாருக்கு உடல்நலமில்லை என்ற செய்தி கேட்டுத் தன் தாய்வீடு திரும்பினார். அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் வீட்டில் தங்கிவிட்டார். அதன்பிறகு வியன்னா சென்ற போது மொசார்ட் என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். ஒருவேளை மீண்டும் மொசார்ட்டும், பீத்தோவனும் சந்தித்திருந்தால் இசை உலகம் இன்னும் பல புதுமைகளைக் கண்டிருக்கும்.
கடந்த 20 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் ஒரு திட்டம் தீட்டியது. அதாவது தங்கள் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பல சாதனையாளர்கள் அவர்களின் இறப்புக்குப் பின் பல நாடுகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களது எச்சங்களைக் கொண்டு வந்து வியன்னா நகரின் ஒரு மையப் பகுதியில் கல்லறை அமைத்து அந்தச் சான்றோர்களுக்குப் புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அப்படிக் கொண்டுவரப்பட்ட சான்றோர்களில் மிக முக்கியமானவர் லூட்விக் வான் பீத்தோவன்.
56 – ஆண்டுகளே வாழ்ந்திட்ட பீத்தோவன் ஒன்பது சிம்பொனிகளை வழங்கியவர். ஏராளமான இசைக் கருவிகளால் இசை விருந்தினை உலகிற்குத் தந்தவர். இன்று உலகின் தலைசிறந்த இசைமேதை என்று இணையத்தில் தேடினால் முதலில் வந்து நிற்பவர் பீத்தோவன்.
அவரது ‘ஃபர் எலிஸ்’ என்ற இசையமைப்பானது, அவரது இறப்புக்குப் பின்பு வெளியிடப்பட்டது. ெஜர்மானிய மொழியில் எலிஸ்ஸுக்காக என்ற அர்த்தத்தில் அமைந்த இந்தப் பாடலின் இசை நாம் எல்லோரும் பலமுறை கேட்ட இசையாக இருக்கும். பீத்தோவன் இறந்து 40 – ஆண்டுகள் கழித்து 1867 – இல் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ‘ஃபர் எலிஸ்’ (Fur Elise) என்ற இசையை வாசகர்கள் கேட்டுப் பாருங்கள். பீத்தோவனின் புகழ் நமக்குப் புரியும்.
லுட்விக் வான் பீத்தோவன்
1770 – ஆம் ஆண்டு. டிசம்பர் மாதம் 16 – ஆம் ேததி பிறந்தவர். தந்தை ஒரு இசைக்கலைஞர். தாய் மிகுந்த ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுத்தவர். பீத்தோவனுக்கு இரண்டு தம்பிகளும் இருந்தனர்.
பீத்தோவனின் தந்தை நல்ல இசைஞானம் கொண்டிருந்தவர். அதேசமயம் அதிகமாகக் குடிக்கும் கெட்ட பழக்கம் கொண்டவர். குடும்பத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர். அதேசமயம், பீத்தோவனுக்கு நல்ல இசை ஆர்வம் இருப்பதைத் தெரிந்து கொண்டதால், அவரே பியானோ மற்றும் வயலின் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். தன் மகன் அப்போது புகழின் உச்சியில் இருந்த மொசார்ட்டைப் போல வரவேண்டும் என்று ஆவல் கொண்டார்.
இளம் வயதிலிருந்தே இசை மீது அதிக ஆர்வம் கொண்டுவிட்டதால், பீத்தோவனுக்கும் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. குறிப்பாகக் கணிதப் பாடம் அவரைக் குழப்பியது. ‘‘கணிதத்தைத் தொட்டால் இசைக்கான குறிப்புகள் தான் என் கண்முன்னே ஓடுகிறது’’ என்று பீத்தோவன் சொல்ல ஆரம்பித்தார். ஒருவேளை அவருக்குக் கற்றல் குறைபாடு என்கின்ற ‘டிஸ்லக்ஷியா’ இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இப்படிப் படிப்பில் ஆர்வம் காட்டாத மகனை பத்து வயதுக்கு மேல் வீட்டிலேயே வைத்து இசைக்கலைஞராக மாற்றினார் அவரின் தந்தை ஜோஹன் வான். சில சமயம் பீத்தோவனிடம் குரூரமாக நடந்துகொண்டார். அதாவது இசையைத் தீவிரமாகக் கற்க வேண்டும் என்று கூறி அவரை வெளியே செல்லவிடாமல் அறையில் அடைத்துவிட்டு சென்றுவிடுவார் அவரது தந்தை. இப்படித் தனிமை வேதனைகளைப் பலமுறை பீத்தோவன் அனுபவித்துள்ளார். ஆயினும் இசையைக் கற்க சில ஆசிரியர்களை ஏற்பாடு செய்து கொடுத்தார் ஜோஹன். ஐந்து வயதிலிருந்தே பீத்தோவனுக்குப் பல ஆசிரியர்களால் பல்வேறு இசைக்கருவிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பீத்தோவன் 12 – ஆம் வயதில் முதன்முதலில் தனது இசை அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். 22 – வயதில் மீண்டும் வியன்னா சென்ற அவரைப் பல ஆஸ்திரியப் பெரியோர்கள் தத்து எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். காரணம், அவரது இசை அதற்குள் மிகவும் புகழ்பெற்றிருந்தது. ‘ஹைடன்’ என்ற இசைமேதையிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டார் பீத்தோவன்.
சிம்பொனிகளில் பீத்தோவன்
ஒன்பது சிம்பொனிகளைத் தந்த மாபெரும் இசைக் கலைஞர் தான் பீத்தோவன். ஒவ்வொரு சிம்பொனியை வழங்குவதையும் தன் உயிராகக் கொண்டு, அதற்கான இசையை எழுதி வாசித்தார் பீத்தோவன். இன்றைக்கு 250 – ஆண்டுகளுக்கு முன்பு இன்று போல பதிவு செய்திடக் கருவிகள் இல்லை. இன்று போல எளிதில் இயக்கக் கூடிய இசைக்கருவிகள் இல்லை. உடனே சென்று செயலாக்க உதவும் உபகரணங்கள் இல்லை. ஆயினும் ஒரு மனிதர் இத்தனை சிம்பொனிகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும், இன்றைக்கு 250 – ஆண்டுகள் கழித்தும் அது அழியாத இசைப் பேழையாக உலகை ஆண்டு வருகின்றது என்பதும் பீத்தோவனின் புகழை நமக்குச் சொல்லும். ஒன்பது சிம்பொனிகளுக்குப் பின்னே ஒரு உணர்வைச் சுமந்து அவற்றைப் படைத்துள்ளார் பீத்தோவன்.
1800 – ஆம் ஆண்டு முதல் சிம்பொனியைத் தருகின்றார் பீத்தோவன். மொசார்ட்டின் மாணவனாக இருந்த பீத்தோவன் ‘‘நானும் வந்துவிட்டேன்’’ என்று உலகிற்குச் சொன்ன முதல் குறும்புத்தனமான சிம்பொனி தான் முதல் சிம்பொனி (C Major).
இக்காலக்கட்டத்தில் இளம் வயதில் அவருக்கு காது சரியாகக் கேட்கவில்லை. காதில் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்த சமயம், காது கேட்காது என்று மருத்துவர் சொல்லிவிட்டதால் ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்று எண்ணி வருத்தப்பட்டார் பீத்தோவன். 1802 – ஆம் ஆண்டு இப்படி ஒரு கடிதத்தை எழுதுகின்றார். ‘‘என் காது கேளாததால் செவிடன், பைத்தியம் என்று மக்கள் என்னை இகழ்கிறார்கள். ஆனால் நான் இசைக்காக வாழவேண்டும் என்பதற்காகவே சாகவில்லை’’ என்று எழுதுகின்றார்.
1801 – மற்றும் 1802 – இல் தான் தனது இரண்டாவது சிம்பொனியைத் தந்தார். தான் தற்கொலைக் கடிதம் (Heiligenstadt Testament) எழுதிய அதே மாதங்களில் ‘சிரிக்கும் கண்ணீர்’ என்ற பொருள்படும் 2 – ஆம் சிம்பொனியைத் (D-Major) தந்தார். தன் வலியோடு சிரித்து இசையால் மகிழ்ந்தார்.
