
வரலாறு பேசுவோம்-09
திரு.முகில்
அந்த ஆற்றின் நீர் தெளிவாக இருந்தது. நீரோட்டம் அவ்வளவு வேகமாக இல்லை. அதனுள் நின்று கொண்டிருந்தார் முராமஸா. அவர் கையில் ஒரு வாள். பல நாள்கள் தூங்காமல் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய கூர்மையான முனை கொண்ட வாள். முராமஸா, வாளின் முனை தரையை நோக்கிப் பாயுமாறு நீரினுள் போட்டார். அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸூக்…’ என காற்றைக் கிழிக்கும் சத்தத்துடன், நீரைத் துளைத்துக் கொண்டு, இடைப்பட்ட இலைகளை எல்லாம் சரசரவெனக் கிழித்துக்கொண்டு, எதிர் வந்த மீன்களையெல்லாம் மளமளவெனத் துண்டாக்கியபடி ஆற்றின் அடித்தரையில் குத்தி நின்றது. ரத்தம் நீரினுள் பரவ முராமஸாவின் முகத்தில் பெருமிதம்.
அவருக்கு அருகில் மஸாமுனே நின்று கொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு வாள் இருந்தது. பல நாள்கள் உழைப்பில் அவரே செதுக்கிய அந்த அழகான வாளை, நீரினுள் இட்டார். அது காற்றை மென்மையாகத் தழுவியபடியும், நீரின் ஓட்டத்தைப் பாதிக்காதபடியும் தன்மையாக இறங்கியது. இலைகள் வாளின் கூர்மையால் கிழிந்தன. ஆனாலும் அடுத்த விநாடியே ஒட்டிக் கொண்டன. வாள், மீன்களை எந்தவிதத்திலும் பாதிக்காமல் ஆற்றின் தரையைச் சென்றடைந்தது. மஸாமுனேவின் முகத்தில் சாந்தமான புன்னகை.
யாருடைய வாள் சிறந்தது என்ற போட்டிதான் அங்கே நடந்து முடிந்தது. முடிவை அறிவிக்கும் பொறுப்பு துறவி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் துறவி முடிவைச் சொன்னார்.
‘முராமஸாவின் வாள் ரத்த வெறி பிடித்தது. எதை வெட்டுகிறோம், யாரை வெட்டுகிறோம் என்று பிரித்துணரத் தெரியாத தீய வாள். அது ஒரு பட்டாம்பூச்சியைக்கூட எதிரியின் தலையைப்போல வெட்டிவிடும். மஸாமுனேவின் வாளுக்கு எதை வெட்ட வேண்டும், யாரை வெட்ட வேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. அப்பாவி உயிர்களை எந்தவிதத்திலும் பாதிக்காத அற்புதமான வாள், மஸாமுனேவினுடையதே!’ என்றார் துறவி.
மஸாமுனே பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். ஜப்பானின் சரித்திரத்திலேயே சாமுராய்களுக்கான வாள் செய்வதில் மிகச்சிறந்தவர் என்ற பெயர் மஸாமுனேவுக்குத்தான் உண்டு. முராமஸா, அவரது சீடர்தான். குருவுக்கும் சிஷ்யனுக்கும் நடந்த போட்டியில் குருவே வென்றார். ஏனென்றால் மஸாமுனே தயாரித்த வாள்கள் எதிரிகளிடத்தில் வீரத்துடனும், மற்ற உயிர்களிடத்தில் அன்புடனும் நடந்து கொண்டன. ஹோஞ்ஜோ, ஃப்யூடோ, முஸாஷி, ஹோச்சோ, கோடேகிரி – இவையெல்லாம் மஸாமுனே தயாரித்த சரித்திரப் புகழ்பெற்ற சாமுராய் வாள்கள். இவை ஒவ்வொன்றும் பல போர்க்களங்களைக் கண்டவை. அவற்றில் மஸாமுனே, தன் பெயரையும் பொறித்திருந்தார்.
இவற்றில் மிக முக்கியமான வாள், ஹோஞ்ஜோ. ஜப்பானில் இதுவரை தயாரிக்கப்பட்ட வாள்களிலேயே மிகவும் நேர்த்தியுடன் அழகாகவும் வலிமையானதாகவும் உருவாக்கப்பட்ட வாள் என்ற பெருமை ஹோஞ்ஜோவுக்கு உண்டு. இரும்பை உருக்கி, இஷ்டம்போல வளைக்கும் தொழில்நுட்பம் எல்லாம் அதிகம் வளராத அந்தக் காலத்தில், மஸாமுனே இப்படி ஓர் அருமையான வாளைத் தயாரித்தது பேரதிசயமாகக் கருதப்படுகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய ராஜ்ஜியம் ஒன்றின் தளபதியாக இருந்த ஹோஞ்ஜோ என்பவர், போர் ஒன்றில் எதிரி வீரரான உமானோசுகேவின் வாளால் தாக்கப்பட்டார். அந்த வாள் ஹோஞ்ஜோவின் வலிமையான தலைக்கவசத்தை இரண்டாகப் பிளந்தது. அந்த வாளின் வலிமையைக் கண்டு அதிசயித்த ஹோஞ்ஜோ, பின் சுதாரித்துக் கொண்டு எதிரியை அழித்தார். அந்த வாளைத் தனக்கான போர்ப் பரிசாக எடுத்துக் கொண்டார். அந்த வாளைத் தயாரித்தவர் மஸாமுனேதான். பல போர்க்களங்களைக் கண்ட பிறகும், பலரது தலைகளைக் கொய்த பிறகும் கூர்மை குறையாமல் மின்னியது. பின் அந்த வாளுக்கு ‘ஹோஞ்ஜோ மஸாமுனே’ என்ற பெயர் நிலைத்தது.
பின் அந்த வாள் ஹோஞ்ஜோவால் 13 பெரிய தங்கக்காசுகளுக்கு இன்னொருவரிடம் விற்கப்பட்டது. காலப்போக்கில் வேறு வேறு நபர்களிடம் கைமாறியது. இருபதாம் நூற்றாண்டில், டோகுகவா குடும்பத்தினரிடம் அந்த வாள் இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லிமாஸா என்பவர், வாளின் உரிமையாளராக இருந்தார்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பான் சரணடைந்த பின், அமெரிக்க வீரர்கள் அங்கிருந்து ஏகப்பட்ட செல்வங்களைத் தங்களுக்கான போர்ப்பரிசாக எடுத்துக் கொண்டனர். அதில் சாமுராய் வாள்களும் நிறைய உண்டு. லிமாஸா தன்னிடமிருந்த ஹோஞ்ஜோ மஸாமுனே உள்ளிட்ட பல வாள்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாள்கள் செர்ஜண்ட் கோல்டி பைமோர் என்ற அமெரிக்கரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜப்பானியத் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கத் தரப்பில் அப்படி ஒரு வீரர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதற்கான பதிவே இல்லை.
இப்போது அந்த ஹோஞ்ஜோ மஸாமுனே வாள் அமெரிக்காவில் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதற்கான எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்க வீரர்கள் பலர் தாங்கள் கைப்பற்றிய வாள்களை உருக்கி, கோப்பையாகவும் பதக்கங்களாகவும் செய்து கொண்டார்கள். சுமார் 700 வருட வரலாறு கொண்ட ஜப்பானின் அரிய பொக்கிஷமான ஹோஞ்ஜோ மஸாமுனே வாளும் அப்படி உருக்கப்பட்டு மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அது யாரிடம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இப்போதைக்கு ஜப்பானிய கார்ட்டூன் கேரக்டர்கள் மட்டும் மஸாமுனேவின் வாள்களை வீரத்துடன் சுழற்றிக் கொண்டிருக்கின்றன.
திப்பு சுல்தானின் வாள்!
புலி என்றால் திப்பு சுல்தானுக்கு அவ்வளவு பிடிக்கும்! புலியின் வீரம், சாதுர்யமாகப் பதுங்கி, சாமர்த்தியமாகத் தாக்கும் அதன் ஆக்ரோஷம், வேட்டையாடும் திறன், தனக்கென ஓர் எல்லை வகுத்துக் கொண்டு வாழும் அதன் தன்மை என்று புலி குறித்த ஒவ்வொரு விஷயத்தையுமே திப்பு சுல்தான் நுணுக்கமாக அறிந்து வைத்திருந்தார். தனது ரங்கப்பட்டணத்தின் கோட்டையில் ஆறு புலிகள் வளர்த்தும் வந்தார்.
திப்புவின் அரியணையில் புலியின் சிலை ஒன்று கர்ஜித்துக் கொண்டிருந்தது. அவர் பயன்படுத்திய வாள்களின் கைப்பிடிப் பகுதியில் உறுமும் புலியின் தலை செதுக்கப்பட்டிருந்தது. துப்பாக்கியிலும் புலியின் உருவம் இணைக்கப்பட்டிருந்தது. அவரது அரண்மனையின் பல பகுதிகளில் புலிகளின் ஓவியம், புலியின் சிலைகள், சிற்பங்கள் நிறுவப்பட்டிருந்தன.
அவர் பயன்படுத்திய பல்வேறு பொருள்களிலும் கலைப்பொருள்களிலும் புலியின் உருவமோ, தலையோ, அதன் உடலில் காணப்படும் வரிகளோ காணப்பட்டன. அவர் பயன்படுத்திய சில கொடிகள், அவரது ராஜ்ஜியத்தின் சின்னம், படை வீரர்களின் உடைகள் என்ற பலவற்றிலும் புலி நீக்கமற நிறைந்திருந்தது. திப்பு சுல்தானின் செல்லப்பெயரே ‘மைசூரின் புலி’ என்பதுதான். எப்படி அந்தப் பெயர் வந்தது? ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு.
