
சாதனையாளர்கள் பக்கம்
மதுரை.ஆர்.கணேசன்
உலக அளவிற்கு மேலோங்கும் கல்வியில் அதன் பாடத்திட்டங்களும், அதனைக் கையாளும் எண்ணிலடங்கா ஆசான்களும், கற்கும் மாணவர்களும் இணைந்து எத்தனையோ பெருமைக்குரிய தமிழகமாக மாற்றியிருக்கிறார்கள்.. மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்..!
அந்த வகையில் எம்.தட்சிணாமூர்த்தி என்னும் இளைஞர், தமிழ் இலக்கியம் மற்றும் பேராசிரியர் தகுதி பெற்ற மாணவர், சமூக வலைதளங்கள் வழியாக படிக்கும் போதே ஆன்மிகத் திருத்தலங்களின் வழிகாட்டியாகயும் வலம் வந்து கொண்டிருக்கிறார்..!
இனி நம்மோடு எம்.தட்சிணாமூர்த்தி..,
“..எனக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தையடுத்து உள்ள வெண்ணந்தூர், நாங்கள் சாதாரண நெசவுத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
எங்க ஊரிலே உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயின்றேன், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தேன்.
அரசுக் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) சேலம் 2017-2020ல் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்தேன்.
2021–-2023 கல்வியாண்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியமும் படித்து முடித்திருக்கிறேன்.
முனைவர் பட்ட ஆய்வினை ஒப்பிலக்கிய நோக்கில் செய்ய வேண்டும் என்று அமரராகியுள்ள பேராசிரியர் முனைவர்.கி. பெருமாள் அவர்கள் எம்மை வழிநடத்தினார்.
அவரின் கட்டளையின் பேரில் தமிழ் – தெலுங்கு மொழிகளுக்கிடையே எனது ஒப்பிலக்கிய ஆய்வினை நிகழ்த்துவதற்காக மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் ஓராண்டு 2023– – 2024 தெலுங்கு பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பித்தேன்.
மத்திய கல்வி நிறுவனத்தில் தெலுங்கு பட்டயம் பயில வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. கடுமையான நிதிப் பற்றாக்குறை சூழலிலும் இப்படிப்பை செவ்வனே நிறைவு செய்தேன்.
இதற்கிடையில் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் பேராசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன்.
