மூளை என்னும் முதல்வன் -29
திரு. A.மோகனராஜூ, சேலம்

கற்பனை என்பது கண்களுக்குத் தெரியாத அற்புத சக்தி என்று ( Mr. Emma tin) எம்மாடின் என்ற அறிஞர் சொல்கிறார். நியுட்டன் கற்பனையால் இந்த பிரபஞ்சத்தையும் அதன் இடையே எற்படும் விசைகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். மிகத்துல்லியமாக அதைக்கண்டறிந்து ஈர்ப்பு விசையினையும் இயக்க விதிகளையும் உலகிற்குப் பரிசளித்தார். அதனால்தான் “கற்பனை என்பது அறிவை விடச் சிறந்தது” என்று பேரறிஞர் ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்றார்.
“எதை உங்கள் மனம் கருக்கொள்கிறதோ, உருவகப்படுத்துகிறதோ, நம்புகிறதோ அதில் உங்களால் சாதனை செய்துக்காட்ட முடியும்” என்று நெப்போலியன் ஹில்ஸ் சொல்கிறார். நீங்கள் கற்பனை செய்வதைத்தான் இப்படி அவர் சொல்கிறார்.

தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்துப் புதுமையான உபகரணங்களும் இந்தக் கற்பனை என்ற மனதின் திறனைக்கொண்டே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். மனித மூளை எப்படிக் கற்பனை செய்கிறது என்று நம்மால் இதுவரை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அது மிகப்பெரும் பிரபஞ்ச ரகசியமாகவே இருக்கிறது.

அலிபாபாவின் நிர்வாக இயக்குநர் திரு ஜக்மா என்ன சொல்கிறார் என்றால் “நீங்கள் உங்கள் எதிர் காலத்தைப்பற்றி மிகவும் கவலையாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கற்பனை வளமும் தன்னம்பிக்கையும் இல்லை” என்று சொல்கிறார்.

உலகின் தலைசிறந்த 1500 நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களிடம் எந்த வகையான இளைஞர்கள் உங்கள் நிறுவனங்களுக்குத் தற்போது தேவைப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு,

“இந்த 21 – ம் நூற்றாண்டிற்கு நல்ல கற்பனைத்திறனும் ஆக்கப்பூர்வ சக்தியும்கொண்ட இளைஞர்களே எங்கள் நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்களைத் தற்போதைய கல்வி நிறுவனங்களால் உருவாக்கமுடிவில்லை” என்று சொல்கிறார்கள்.

மனித மூளை எப்போதும் புதுமையை நேசிக்கும் பண்புடையது. புதுமையான பொருட்களை நாம் உருவாக்க வேண்டுமானால் கற்பனை வளம் நிறைந்த இளைஞர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். ஒரு புதுமையை உருவாக்கிய மூளையில் அதைத்தொடர்ந்து இன்ப ஹார்மோன் செரடோனின் சுரக்கிறது. எப்போதெல்லாம் ஒரு புதிய பொருளைப் பார்க்கிறோமோ பயன்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் நம் மூளையிலும் மகிழ்ச்சி ஹார்மோன் செரடோனின் தொடர்ந்து சுரந்து மகிழ்வை அதிகமாக்குகிறது.

என் 10 வயது மகனை முதன் முதல் சென்னை மெரினாக் கடற்கரைக்கு அழைத்துச்சென்று காட்டினேன், அதற்குமுன் அவன் கடலை நேரில் பார்த்தது இல்லை. ஐயோ இவ்வளவு தண்ணீரா என்று வாயைப் பிளந்தவன் மூடவே இல்லை. பின் மருத்துவரிடம் சென்றுதான் மூடி விட்டோம். என் மனைவியை சுவிட்சர்லாந்து பனிமலைக்கு அழைத்துச் சென்று காட்டினேன் அசந்துபோனாள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனாள். புதிதாக அதிசயம் ஒன்றை நாம் பார்க்கும்போது நம் மூளையில் மகிழ்வும் புத்துணர்வும் பிறக்கிறது. இது இயற்கையின் அழகு. ஆனால் மனித மூளை இயற்கையே அசந்து பார்க்கும் அழகுப் புதுமைகளை படைத்துக்காட்டும் திறன் கொண்டது. அது இந்தக் கற்பனை வளத்தை அடிப்படியாகக் கொண்டதுதான்.

ஹெலன் கெல்லர் என்ற பெண் அவள் தண்ணீர் பருகும்போது அவளின் ஆசிரியர் அவர் முதுகில் (Water) வாட்டர் என்ற ஆங்கில வார்த்தையை எழுதினார், மீண்டும் பருகும்போது அவரின் முதுகில் ஆசிரியர் மீண்டும் வாட்டர் என்ற ஆங்கில வார்த்தையை எழுதினார் உடனே கெல்லர் தான் பருகுவதின் பெயர் தண்ணீர் என்று கற்பனயில் பதிவு செய்துகொண்டார். இப்படி ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அவரின் ஆசிரியர் அவர் முதுகில் அவர் செய்வதன் வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதினார் அதையே அவரும் அவ்வப்போது கற்பனை செய்துகொண்டார். அந்தக்கற்பனையே உலகைப்புரிந்துகொள்ள, ஒரு இளநிலைப் பட்டதாரியாக உருவெடுக்க ஏதுவாக அமைந்தது. அவள் ஒரு கண்கள் தெரியாத காதுகேட்காத ஊமைப்பெண்.

அதன்பிறகு கெல்லர் சொல்கிறார் “இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது, ஒவ்வொரு பெயரும் ஒரு புதிய யோசனை (Idea) உருவாக வழி வகுக்கிறது” என்று. இந்தப் பிரபஞ்சம் எல்லையில்லாததாக இருக்கிறது, இந்த மனித மூளையின் கற்பனை வளமும் எல்லை இல்லாததாக இருக்கிறது. அதனால்தான் அறிவியல் அறிஞர்கள் மனித மனதின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அதற்கு பிரபஞ்ச மனம் என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு பொருளும் அதன் பெயரும் மனிதனின் கற்பனை வளத்தை அதிகமாக்குகிறது.

இந்த பிரபஞ்சம் அணுக்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதே அணுக்களால்தான் மனித மூளையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனித மூளை பிரபஞ்சத்தைக் கற்பனை செய்கிறது, நன்கு புரிந்துகொள்கிறது. அப்படித்தான் கலிலியோவும் ஐன்ஸ்டீனும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டார்கள். பிரபஞ்சமும் மனித மூளையும் இரண்டும் இயற்கையின் வடிவம்தான். இதில் இருந்து நம் மூளை என்ன புரிந்துகொள்கிறது என்றால் மனித மூளையின் மூலம், இயற்கை தன்னைத்தானே கற்பனையால் புரிந்துகொள்ள முயல்கிறது என்பதுதான்.

ஒரு நண்பர் அமைதியாக அமர்ந்து கற்பனை செய்ய ஆரம்பித்தார், பல நாட்கள் கழிந்தன ஆனால் அவருக்கு தூக்கம்தான் வந்தது, எந்த கற்பனை வளமும் பெருகவில்லை. காரணம் என்ன என்று சார்லஸ் பௌல்கர் என்ற அறிஞர் சொல்கிறார், “கற்பனை என்பது என்ன நினைகின்றீர்கள் என்பது அல்ல, (Charles Foulkner said “Imagination is not what you think, It is how you think”.) எப்படி நினைக்கின்றீர்கள் என்பதுதான்” என்கிறார். நீங்கள் அதிகமான புத்தகங்களப் படிக்கும்போது உங்கள் கற்பனை வளம் பெருகுகிறது. டேவிட் ஹும் மற்றும் கண்ட் என்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் “இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அதை மனித மூளை பார்ப்பது இல்லை கற்பனை மூலம் கண்களுக்குத்தெரியாத பல உண்மைகளையும் அது சேர்த்தே பார்க்கிறது” என்று.