
அறிவியலின் கதை
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
அறிவியல் என்றாலே மேற்கத்திய நாடுகள் மட்டும்தான் பல கண்டுபிடிப்புகளை செய்து உலகுக்கு பங்காற்றி இருக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அரேபியர்களும் இந்தியர்களும் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புகள் பின்னாட்களில் மேற்கத்தியர்களால் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டன. அதேபோல 1096 முதல் 1291 வரை கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடைபெற்ற சிலுவைப் போரும் பெரும் அறிவியல் பொக்கிஷங்கள் அரேபிய நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல வழிவகுத்தன.
சொல்லப்போனால் பண்டைய கிரேக்க அறிவியல் ஆய்வுகளுக்குப் பிறகு ஐரோப்பா மிகவும் பின் தங்கி இருந்தது. சிலுவைப் போரின்போது அரேபியாவில் கிடைத்த கண்டுபிடிப்புகள்தான் பெரிய அறிவியல் புரட்சியை ஐரோப்பாவில் உருவாக்கின. இதனை நாம் பின்னர் பார்க்கலாம். இப்போது இஸ்லாமிய உலகம் அறிவியலுக்கு என்னென்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
ரோமப் பேரரசின் வீழ்ச்சி
கி.பி. 307 – இல் உலகின் பெரும் சக்தி வாய்ந்த வல்லரசாக இருந்த ரோமப் பேரரசு வீழத் தொடங்கியது. குறிப்பாக ரோமப் பேரரசு இரண்டாக உடைந்து மேற்கத்திய ரோமப் பேரரசு, கிழக்கத்திய ரோமப் பேரரசு என மாறியது. அப்போது ரோமின் அரசராக இருந்த கான்ஸ்டன்டைன் இருந்தார். கான்ஸ்டடைன் ரோம தலைநகரத்தை கிழக்கு நாடுகள் நோக்கி நகர்த்தினார். இப்போது துருக்கி தேசத்தில் இருக்கும் இஸ்தான்புல் நகரத்தை தலைநகரமாக அறிவித்தார். அப்போது அந்த நகரம் கான்ஸ்டன்டின்நோபிள் என அழைக்கப்பட்டது.
இந்த புதிய தலைநகரம் கிழக்கத்திய ரோம ராஜ்ஜியத்திற்கு அருகாமையில் இருந்தது. இன்றைய மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய பகுதி அது.
அரசியல் அதிகாரம் கிழக்கு நோக்கி நகர்ந்ததும், அதுவரை இருந்த அறிவியல் நூல்கள் அனைத்தும் அரேபிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக கிரேக்க மொழியிலும் லத்தின் மொழியிலும் இருந்த அந்த நூல்களை ஆராய்ந்து வந்த அறிஞர்களும் மத்தியக்கிழக்கு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்.
அரேபிய தேசத்தில் ஏற்கெனவே பழங்கால அறிவியல் சிந்தனை இருந்தது. வானியல், மருத்துவம், கட்டடக்கலை உள்ளிட்ட பல அறிவியல் துறைகளில் அவர்கள் பண்டைய காலம் முதலே கவனம் செலுத்தி வந்தனர். இதனை நாம் ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அதன்பின் ஏழாம் நூற்றாண்டு அவர்களுக்குப் புதிய அறிவியல் பாய்ச்சலைக் கொடுக்கும் நூற்றாண்டாக அமைந்தது.
இஸ்லாமின் பிறப்பும் அறிவியலும்
அரபு தேசத்தில் இஸ்லாம் மதத்தை நிறுவிய முகம்மது நபி (570-632) பிறந்தார். அவருக்குப் பிறகு இஸ்லாமிய மதம் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி வலுவூன்றி நின்றது. 7 – ஆம் நூற்றாண்டில் மத்தியக் கிழக்கு கல்விக்கும் அறிவியலுக்கும் கற்றலுக்கும் பெயர் பெற்றது. முகம்மது நபி இறந்த இரண்டு நூற்றாண்டுகளில் பாக்தாத் நகரம் அறிவுச் சொத்தின் மையமாக இருந்தது.
இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை கற்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இவர்கள்தான் அறிவியல் நூல்களையும் எழுதத் தொடங்கினர். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ந்தவுடன் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கிரேக்க, ரோமானிய நூல்களை இஸ்லாமிய அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.