
முயற்சி தரும் முன்னேற்றம்!
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் கணிப்பொறி வேலை தேடி உலகமெங்கும் இருந்து இளைஞர்கள் படை எடுக்கின்றார்கள். திறமையுள்ள பொறியியல் வல்லுநர்களை எங்கள் ஊரிலேயே உருவாக்கி, வேலை தந்து சிலிகான் பள்ளத்தாக்குக்கே மென்பொருளை ஏற்றுமதி செய்வோம் என்று சாதனை படைத்தவர் தான் தர் வேம்பு.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரநாதபுரம் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர். தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஒன்பதாம் வகுப்பு வரை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர், அதன் பிறகு சென்னை கிழக்குத் தாம்பரத்தில் உள்ள ெஜய்கோபால் கரோடியா தேசியப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றார். சென்னை ஐ.ஐ.டி.யில் இளங்கலைப் பொறியியல் கல்வியை முடித்தவர் தர் வேம்பு.
மேல்படிப்புப் படிப்பதற்காக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றார். அப்போது அவரது மனதில் ஒரு எண்ணம் ஆழமாக உதிக்கின்றது. அதாவது முதுகலைப் படிப்பு மற்றும் முனைவர் படிப்புகளுக்கு நிறைய ஆய்வு செய்து ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றோம். இவை அனைத்தும் செயலாக்கம் பெறுகின்றனவா அல்லது நூலகங்களில் தேங்கிப் போய்விடுகின்றனவா? என்று தனக்குள்ளேயே பல கேள்விகளைக் கேட்டுள்ளார். தொடர்ந்து நடைமுறைக்குப் பயன்படும் கல்வியையும், வேலை வாய்ப்பையும் பற்றிச் சிந்திக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்ற ஆவலை உளப்பூர்வமாக எண்ணியுள்ளார். இந்த எண்ணங்களின் பிரதிபலிப்புத் தான் அவரால் உருவாக்கப்பட்டுள்ள ஜோஹோ (ZOHO) நிறுவனம் ஆகும்.
கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ நகரிலுள்ள குவால்காம் நிறுவனத்தில் தன் பொறியியல் பணியை ஆரம்பித்தார் தர் வேம்பு. அதன் பிறகு 1996 – ஆம் ஆண்டில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர் டோனி தாமஸ் என்பவரோடு சேர்ந்து அட்வண்ட்நெட் (Advent Net) என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் 2009 – ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘ஜோஹோ’ (ZOHO) என்ற நிறுவனமாக மாறியது.
ஜோஹோ (ZOHO) என்ற பெயர் ‘Small Office Home Office’ என்ற வார்த்தையில் இருந்து வந்தது. எல்லா நிறுவனங்களுக்கும் தொடக்கத்தில் இருக்கும் சவால்கள் இந்த நிறுவனத்துக்கும் இருந்தது. தங்களிடமிருந்த பணத்தைக் கொண்டு, இருக்கும் இடத்திலேயே திறமையைக் கொண்டு முன்னேற்றம் காணலாம் என்ற தாரக மந்திரத்தைத் தன் மூச்சாகக் கொண்டு உழைத்ததோடு, தன்னோடு இருந்தவர்களையும் அந்த எண்ண ஓட்டத்துக்கு அழைத்து வந்தார் தர் வேம்பு.
அடிப்படையில் தங்கள் அலுவலகத்துக்குவரும் ஊழியர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்வதோடு, ஒரு குடும்ப உறுப்பினர்களாக இணைந்து பணிசெய்யும் சூழலைக் கொண்டு வருவதில் இந்த நிறுவனம் முனைப்புக் காட்டுகின்றது. ஒன்றாகச் சேர்ந்து உழைப்பது, உணவருந்துவது, கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, திட்டமிடுவது என்று செயல்படும் போது அச்சமின்றிப் பணிசெய்ய முடியும் என்று விளக்கம் தருகின்றார் தர் வேம்பு.
தொடக்கமும், சவால்களும்
கொரோனா காலத்தில் உலகம் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தது. ZOHO நிறுவனத்துக்கும் அந்தச் சவால்கள் இருந்தது. ஆனால் நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர்கள் உருவாக்கிய மென்பொருள் சரியாக வேலை செய்யாததால் அனைத்து முதலீடுகளையும் இழந்து பெரிய நஷ்டத்தை அடைந்தார்கள் ZOHO நிறுவனத்தினர். அப்போது உடனிருந்த சில பங்குதாரர்கள் வெளியேறிவிட்டார்கள்.
அந்தச் சூழ்நிலையில் பொருளாதார உதவி தேடி ZOHO நிறுவனம் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால் அவர்களுக்கு உதவி செய்யப் பலரும் காத்திருந்தார்கள். ஆனால், மற்ற நாட்டைச் சார்ந்தவர்களிடம் உதவியைப் பெற்றால் அவர்களது சொல்படிதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள். ஆகையால் பிற நாட்டு நிறுவனங்களிடம் உதவி பெறுவதை ஜோஹோ நிறுவனம் முற்றிலும் விரும்பவில்லை.
1996 – ஆம் ஆண்டில் தொழில் தொடங்கிய போது ஒரு ஹார்டுவேர் நிறுவனமாக இருந்தது. அவர்கள் தொலைபேசிகளுக்கான ஒரு கருவியை வடிவமைத்து வழங்கினார்கள். அதன் செயல்பாட்டில் தவறு விழைந்ததால்தான் நிறுவனம் நஷ்டத்தை அடைந்தது. அப்போது தனிமைப்படுத்தப்பட்ட தர் வேம்பு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது, தனது பாதையை மென்பொருள் உருவாக்கம் பக்கமாக மாற்றினார்.
‘எல்லோரும் நிறுவனங்களை ஆரம்பிக்கப் பணம் கேட்டு, பணம் பெற்று முயற்சிக்கிறார்கள். நீங்கள் ஏன் அதை விரும்பவில்லை?’ என்று அவரிடம் கேட்ட போது, ‘பணம் ெகாடுத்தவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்; அதற்கான இலாபத்தை அல்லது போட்ட முதலீட்டை எடுக்க நமக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவார்கள்; ஆகையால் நம்மால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது; எனவே தான் நாங்கள் யாரிடமும் பணம் பெற்றுத் தொழிலை விரிவாக்க விரும்பவில்லை. மேலும் கடனும் வாங்கவில்லை; பொருளாதார நெருக்கடி உலகமெங்கும் வந்தபோது, பல பெரிய நிறுவனங்கள் மிகப்பெரும் அழிவைச் சந்தித்தன. காரணம் அவர்கள் நிறையக் கடன் வாங்கியிருந்தார்கள். ஜோஹோ நிறுவனம் கடன் எதுவும் பெறவில்லை என்பதால் அந்த நெருக்கடியை எளிதில் சமாளித்தது’ என்று விளக்குகிறார் தர் வேம்பு.
ஜோஹோவின் வளர்ச்சி
இன்று உலகின் நூற்று ஐம்பது நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட செயலிகளை உருவாக்கியுள்ளது. பதினைந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஜோஹோவின் செயலிகளைப் பயன்படுத்துகின்றார்கள். 19,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் ஜோஹோவின் வருமானம் 2022-இல் ஒரு பில்லியனைத் தாண்டியதாகச் சொல்லப்படுகின்றது.
இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தான் ஜோஹோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. அமெரிக்காவை நோக்கி மென்பொருள் நிறுவனங்கள் குவிகின்றபோது, அதை ஏன் நமது ஊரிலேயே நிறுவிச் சாதிக்க ்முடியாது? என்று கேள்வி கேட்டதோடு, அதைச் சாதித்துக் காட்டியுள்ளது ஜோஹோ நிறுவனம். இந்தியாவில் தன்னிறைவு பெற்ற ஒரு முதல் மென்பொருள் நிறுவனமாக இன்று வளர்ந்து பெருமை சேர்த்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசின் அமைச்சர்கள் ‘ஜோஹோ’ நிறுவனத்தின் செயலிகளைப் பாராட்டியதோடு, ஒரு சுதேசி உணர்வோடு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் 47% வளர்ச்சியை இந்த ஜோஹோ நிறுவனம் அடைந்துள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), உலகின் மிகப்பெரிய அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிறுவனமான லோரியல் (L’Oreal) மற்றும் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் உலகளாவிய இணைய நிறுவனமான பேபால் (PayPal) போன்ற நிறுவனங்கள் ேஜாேஹாவின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அரட்டை (Arattai) என்ற ஒரு செயலியை ஆரம்பித்து வழங்கியது ஜோஹோ. பலரும் பயன்படுத்தி வருகின்றார்கள். வாட்ஸ்ஆப் செயலி மூலம் நாம் பலரோடும் உரையாடுவது, செய்திகளைப் பகிர்ந்து கொள்வது போல ‘அரட்டை’ மூலமும் அதைச் செய்யலாம். ‘அரட்டை’ என்றால் தமிழில் இருவரோ, பலரோ இணைந்து ஏதோ ஒன்றைப் பற்றிப் பேசுவது தான். வாட்ஸ்ஆப் கூட அப்படித்தான் உள்ளது. ஆகவே ‘அரட்டை’ என்ற தமிழ் பெயரைச் சூட்டி அதற்கு முக்கியத்துவம் தந்துள்ள ஜோஹோவைப் பாராட்ட வேண்டும்.
