வழிகாட்டும் ஆளுமை – 4

திரு. நந்தகுமார் IRS

நான் 2005 – ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் “என்ன நந்தகுமார்! இந்த முறை மிகவும் குறைந்த அளவில் தான் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு முன்பெல்லாம் 2,000 – 3,000 என்று காலிப் பணியிடங்கள் இருந்தன’’ என்று பயமுறுத்தினார்கள். உள்ளபடியே நான் தேர்வெழுதிய ஆண்டு, வெறும் 300 முதல் 350 வரையிலான காலிப் பணியிடங்கள் தான் இருந்தன. நான் அவர்களிடம் திருப்பிக் கேட்டேன் ‘‘எனக்கு 350 காலிப் பணியிடங்கள் தேவையில்லை. மாறாக எனக்குத் தேவையானது ஒரே ஒரு காலிப் பணியிடம் தான்’’ என்றேன்.  அதுபோல நம்முடன் எத்தனை பேர் போட்டி போட்டால் என்ன, நம்முடைய முழுமையான முயற்சியை அளிக்க வேண்டும்.

இன்று போட்டித் தேர்விற்கு தயாராகக் கூடிய  மாணவர்களிடம் பல குழப்பங்கள் உள்ளது. நாம் யாருடன் போட்டி போடுகிறோம் என்பதை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அப்போதிலிருந்தே உங்களுக்குள் ஒரு குழப்பம் வந்து விடுகிறது. இதேபோல் ஒரு சிந்தனை தான் எனக்கும் தோன்றியது. ஆனால், நான் சற்று வேறு கோணத்தில் சிந்தித்தேன். போட்டி போடுவது என்பது என்னுடன் போட்டி போடுபவர்களுடன்  அல்ல. மாறாக, அந்தப் போட்டியோடு தான். அந்தப் போட்டித் தேர்வில் கேட்கக் கூடிய கேள்விகளோடு தான், போட்டி போடுவது என்று உணர்ந்தேன்.  எனவே, உங்கள் போட்டி யாருடன் இருக்க வேண்டும் என்று கேட்டால், அந்தத் தேர்வுடனும், அந்தத் தேர்வில் வரக்கூடிய கேள்விகளுடன் தான் இருக்க வேண்டும். அதை நோக்கித் தான் நீங்கள் முன் செல்ல வேண்டுமே தவிர, உங்களுடன் போட்டி போடுகின்றவர்களுடன் இருக்கக் கூடாது.

நம் அனைவருக்கும் அறிவுத் திறன்,  ஐ.ஏ.எஸ்  ஆகின்ற அளவிற்கான ஆளுமைத் திறன் நமக்கு இயற்கையாகவே உள்ளது. ஆக இந்தத் தேர்வை முறியடித்து நீங்கள் வெற்றியாளராக வருவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்க முடியாது.

இப்பொழுது நாம் போட்டித் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிக்கலாம்!  போட்டித் தேர்வைப் பொறுத்தமட்டில், அனைவருக்கும் தெரிந்தது போல, நான்கில் ஒரு (Objective) சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தான் கேள்விகள் இருக்கும். அதாவது, விடைகளையும் அவர்களே கொடுத்து விடுவார்கள். நாம் எதனையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. இவ்வாறு விடைகளையும் அவர்களே தருகின்ற போது தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. அந்த விடையாக இருக்கலாம், இல்லை இல்லை, இது தான் சரியான விடை என்று நமக்குப் பல குழப்பங்கள் நமக்குள் ஏற்படும்.

உங்களுடைய சிந்தனையில் தெளிவு இல்லை என்று சொன்னால், உங்களுடைய விடை சரியானதாக இருக்க முடியாது. உதாரணத்திற்கு, இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் நம்முடைய இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டது மூன்று சட்டங்களை அடிப்படையாக வைத்து தான் என்பது ஒரு தகவல். தகவல் என்று சொன்னவுடன் பதறி  ஐயோ! இந்த ஆண்டு, இந்த தேதியில், இந்த இடத்தில், இவரால், இது நடந்தது என்று எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யக் கூடாது. 1996 ஆம் ஆண்டையும்  1999 ஆம் ஆண்டையும் விடைகளில் பார்த்தால் 6 ஆ? இல்லை 9 ஆ?  இது இரண்டும் தலைகீழாக இருப்பதனால் நாம் குழம்பிப் போய் விடுகிறோம்.

அவர்கள் இதுபோன்ற விடைகளை எதற்காக எடுக்கிறார்கள்? என்று சொன்னால், உங்களைக் குழப்புவதற்காகவே தான். நீங்கள் இது போன்ற தகவல்களை மனப்பாடம்  செய்வதே கடினம். நீங்கள் மனப்பாடம் செய்தாலும் அதனை நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது அதைவிடக் கடினம்.

உங்களுடைய மூளை உங்களை நிச்சயமாக ஏமாற்றாது. நீங்கள் தேர்வுக்கு  முந்தைய நாள் அல்லது ஒரு வாரத்துக்கு முன்பு நீங்கள் படிக்கவில்லை என்றாலும் கூட, உங்களுடைய மூளை உங்களை ஏமாற்றாது. அதற்காக, படிக்காமலேயே தேர்வை எழுதிவிடலாம் என்று நான் கூறவில்லை.

ஒத்துழையாமை இயக்கம் (Non
Co-operation Movement) எந்த ஆண்டு? என்றவுடன் விடைகளில் 1858, 1890 , 1935 என்று இருக்கும். ஒரு வேளை 1920 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்று கேள்வி இருக்கும் பொழுது, 1920 என்று சொல்லும்பொழுது 19-ல்
என்ன நடந்தது?, 21-ல் என்ன நடந்தது?, என்று சற்று ஆராய்ந்தாலே நமக்கு அதற்கான விடை தெரிந்துவிடும். ஏன் குறிப்பாக 1920ஆம் ஆண்டு என்ன நடந்தது? என்பதை கேட்கிறார்கள் என்றும், அதைக் கேட்பதற்கான காரணம் என்ன? என்றும் நீங்கள் ஆராய்ந்தால் விடை உங்கள் பக்கம் தான். விதைக்கு எப்படி வேர்  மூலமோ, அது போல இது போன்ற தகவல்களுக்கு  அதற்கான அடிப்படைக் காரணம் தெரிந்தது என்று சொன்னாலே பல போட்டித் தேர்வுகளுக்கு இது பயன் தரும்.

நாம் படிக்கின்ற எல்லாத் தகவல்களையும் ஒரு கோர்வையாக, அதாவது 1885-ல் இது நடந்தது, தொடர்ந்து 1915-ல் என்ன நடந்தது, பின்பு 1935-ல்
இது முடிவுற்றது என்று கோர்வையாக நாம் படிக்கின்ற பொழுது, அந்த இடத்தில் நாம் எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. அதுதான் நமக்கும் தேர்வுச் சமயத்தில் நிச்சயமாக கைகொடுக்கும்.

ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு (Quit India Movement) 1942 ஆம் ஆண்டு என்று நாம் படிப்பதைவிட, எதற்காக இந்தப் பெயரை வைத்தார்கள்? எந்தக் காரணத்திற்காக இந்த போராட்டங்களைத் தோற்றுவித்தார்கள்?, இந்த போராட்டங்களை யார், யார் தலைமையில் நடத்தினார்கள்?, எவ்வாறு நடத்தினார்கள்? என்று அதற்கான காரணங்களோடு படிக்கின்ற பொழுது,  நமக்கு நிச்சயமாக இதற்கான பதில்கள் நினைவில் ஆழமாகப் பதியும். 

அதே போல, மாதிரி வினாத்தாளுக்கு பதிலாக, முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களை நன்கு எடுத்து ஆராய்ந்து பாருங்கள். அதில் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு விடையை ஆராயாமல், அந்தக் கேள்விகளுக்கான காரணங்கள் எவ்வாறு அந்தத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன? என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தாலே, ஓரளவிற்கு உங்களுக்கு பயன் கிடைக்கும். மேலும், கேள்வியைப் பார்த்தவுடன் A,B,C,D என்று விடைகள் இருக்கும். உங்களுக்கு முதலில் தோன்றுகின்ற விடையை எழுதுங்கள். இது கண்டிப்பாக சரியான விடையாக தான் இருக்கும். இதை நான் நேரடியாக சோதித்துப் பார்த்து இருக்கிறேன். நிச்சயமாக நல்ல பயனைத் தருகிறது.  ஒரு திரைப்படத்தில் கூறுவதுபோல, “இங்க என்ன சொல்லுதோ, அதை செய்யணும்” என்பது போல, உங்களுக்கு முதலில் தோன்றுகின்ற விடையை எழுதுங்கள். நான் மேற்சொன்னவாறு உங்களுக்குத் தேவையானது, உங்களுக்கான ஒரு காலிப் பணியிடம் தான். அதற்காக நீங்கள் போட்டி போடுங்கள். உங்களோடு போட்டி போடும் போட்டியாளர்களுடன் போட்டி போடாதீர்கள். மாறாக, உங்கள் போட்டித் தேர்வுடன், அந்தத் தேர்வில் கேட்கக்கூடிய கேள்விகளுடன் போட்டி போடுங்கள். வெற்றி உங்கள் கையில்..! வாழ்த்துகள்!