டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் சிறப்புப் பேட்டி

வெற்றியோடு விளையாடு!  – 16

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ருகிற ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC – GROUP IV) தேர்வுகள் நடைபெற இருக்கிறது.  நீண்ட காலமாக காத்திருந்து அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.  20 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.  ‘‘இவ்வளவு பெரிய கடலில் நீந்திச் சென்று மூழ்கி முத்தெடுப்பது எப்படி?’’ என்றால் ‘‘அது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.‌ மிகவும் எளிமையானது தான்’’ என்கிறார் ஜெயச்சந்திரன்.  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஜெயம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர். போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி மையத்தை தொடங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

அவரைச் சந்தித்தோம்.

உங்களுக்கு இந்த எண்ணம் எப்படித் தோன்றியது?

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மங்கலம் பேட்டை அருகில் உள்ள விசலூர்தான் என் சொந்த கிராமம். அப்பா தேவன். அம்மா தாட்சாயிணி. மிகவும் ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. விவசாய குடும்பம்.  மங்கலம்பேட்டையில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். இப்போது நான் ஒரு வழக்கறிஞர்.  திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுடைய வேலை வாய்ப்பைப் பற்றி நினைக்கும் போதுதான் சமூகத்தில் வேலை தேடுவது என்பது எவ்வளவு கடினமான பணியாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.‌ அதிகம் படித்தவர்களே பல இடங்களில் ஏறி இறங்கி வேலைக்காக அலையும் போது.. ஓரளவு படித்தவர்கள் என்ன செய்வார்கள்?  என்று நினைத்தேன்.‌ லஞ்சம், லாவண்யம் என்று பலரிடம் பலர் பணம் கொடுத்து சிக்கிக் கொள்வதையும் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம்.  இந்த நிலையில்தான் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதித்தது. அப்படித்தான் தொடங்கியது, இந்த ஜெயம் பவுண்டேஷன், இலவச விழிப்புணர்வு பயிற்சி மையம்.‌

ஏன் நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் யாரும் உதவி செய்வதில்லை?

நகர்புறங்களில் நிறையப் பயிற்சி மையங்கள் இருக்கின்றன.‌ பயிற்சி மையங்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியும் இருக்கிறது.  ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மையம் என்ற அளவில் கூட சில பெரு நகரங்களில் பயிற்சி மையங்கள் இருக்கின்றன.  கிராமப்புறங்களில் பயிற்சி மையங்களும் குறைவு. போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வும் குறைவு. அதனால்தான் கிராமப்புற சேவையை முக்கியமாகக் கருதுகிறேன்.

நீங்கள் வழக்கறிஞர் படிப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எனது சொந்த கிராமமான விசலூர் கிராமத்திலேயே படித்தேன்.  ஆறாம் வகுப்பு முதல் மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கினேன்.‌ செய்தித்தாள்கள் படிப்பது மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம். அப்போது நாட்டில் நடக்கும் சமூகத்திற்கு எதிரான பல பிரச்சனைகளில் இந்த சமூகம் பின்னோக்கிச் செல்வதையும் சில ஆதிக்க சக்திகள் ஆதிக்கம் கொள்வதையும் தெரிந்து கொண்டேன்.‌ இவர்களை எல்லாம் எதிர்கொண்டு கேள்வி கேட்பதற்கு என்ற ஒரு தைரியம் சட்டம் படித்தால் தான் முடியும் என்பதை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் சட்டத்தைப் படிக்க வேண்டிய ஆர்வமும் உந்துதலும் எனக்கு ஏற்பட்டது.

உங்களுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு போலத் தெரிகிறதே!

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அரசியலும் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அது பிராக்டிகல் ஆக இருக்கிறது.‌
அரசியல் என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரி என்னுடையது கட்சி சார்பான அரசியல் அல்ல.  படித்தவர்கள் அரசியலுக்கு வேண்டும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.  ஆனால் படித்தவர்களும் அங்கு சென்று வழக்கமான அரசியல் பாதையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  அப்படி இல்லாமல் தூய்மையான அரசியல் எப்படி இருக்க வேண்டும் ? என்று இளைய தலைமுறையிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சியில் நேர்மை இழையோட வேண்டும். இளைஞர்கள் முன்னெடுக்கிற அரசியல் முன்மாதிரியான அரசியலாக இருக்க வேண்டும் என்ற வகையில் என்னுடைய அரசியல் பயணம் இருக்கிறது.

இயல்பாகவே நிறையப் புத்தகங்கள் படிப்பது, செய்தித்தாள்களில் கட்டுரைகள் தலையங்கம் போன்ற பகுதிகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.  2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு செல்வி புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் நிர்வாகம், அவர்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள், ஆளுமைத் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. அதிகாரம் இருந்தால் தான், மக்களுக்கான சேவைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் அதன் மூலம் எழுந்தது. முதலில் அந்த அதிகாரத்தை இளைஞர்களுக்குத் தருவதுதான் அரசுப் பணி.‌ அரசியலும் அரசும் ஒன்றோடு ஒன்று இணைந்தது தான்.  காமராஜர், கக்கன் போன்றோரிடம் இருந்த எளிமை என்னைக் கவர்ந்தது. ஆனாலும் அதுபோன்ற எளிமையான அரசியலை இன்று இளைஞரிடம் கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினம்.  அவர்கள் அதிரடியை விரும்புகிறார்கள்.  பரபரப்பை விரும்புகிறார்கள்.  அவர்கள் பாதையிலேயே சென்று அவர்களை, தேச நலன் நோக்கி வழிநடத்த விரும்பிச் செயல்படுகிறேன்.

நீங்கள் ஆரம்பித்திருக்கும் இலவச பயிற்சி மையத்தில் அரசியல் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறதா?

நிச்சயமாக இல்லை.  அது நூறு சதவீதம் வேலைவாய்ப்புக்கான செயல்திட்டம். அங்கு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை கொண்டு மிக நுட்பமான பயிற்சி வழங்கி வருகிறேன்.  டிஎன்பிஎஸ்சி மட்டுமல்லாமல், வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள்,  போன்றவற்றிற்கும் பயிற்சி அளிக்கிறேன்.  நம்முடைய மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சென்று வேலை வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களுக்கு மாதிரித் தேர்வுகள் எழுதுகிறார்கள். மாதிரித் தேர்வுகள் தான் மகத்தான வெற்றிக்கு அடிப்படை. மேலும் தேர்வில் வெற்றி பெற ஒரு ரகசியம் இருக்கிறது.
இளைஞர்கள் தங்களது கவனத்தைச் சிதறவிடாமல் ஒரே நோக்கத்தில் படிக்க வேண்டும். அது மட்டுமே தேர்வை வெல்லும் ரகசியம்’ என்கிறார் ஜெயச்சந்திரன்.

இளைஞர்களே இலக்கு நோக்கிப் படிக்க நீங்கள் தயாரா? ஆம், என்றால் வெற்றி நிச்சயம் வேலையும் நிச்சயம்.