சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 05

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

நான் வருங்காலத்தில் எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அது குறித்த காட்சியை என்னால் துல்லியமாக, என் மனக்கண்ணில் பார்க்க முடியும் என்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் ஒன்றைக் குறித்துக் கனவு காணும்போது அது ஏற்கெனவே உண்மையாகிவிட்டது போல எனக்குத் தோன்றும். அந்தக் கனவு நனவாக மாறுவதற்குச் சில காலம் பிடிக்கலாம்’’ என்று தன் முப்பதாம் வயதில் கூறியவர் தான், சாதனையாளர் அர்னால்ட் ஸ்வாசர்னேகர்.

1966ஆம் ஆண்டு அவருக்குப் பதினாறு வயது. இலண்டனில் உலக ஆணழகன் போட்டியான ‘மிஸ்டர் யூனிவர்ஸ்’ நடந்து கொண்டிருந்த போது, அங்கே சென்றிருந்த அர்னால்ட், உலகின் மிகச்சிறந்த ஆணழகனும், பத்திரிகையாளருமான ரிக் வெயினைச் சந்தித்தார். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அர்னால்ட், ரிக் வெயினிடம் ‘‘ஒரு மனிதன், அவன் விரும்புவதை எல்லாம் அடைந்துவிட முடியுமா?’’ என்று கேட்டார். அதற்கு ரிக் வெயின், ‘‘ஒவ்வொரு மனிதனும் தன்னால் எதுவரை செல்ல முடியும் என்பதை முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.

அதாவது ரிக் வெயின் கூற்றுப்படி நினைப்பதையெல்லாம் நாம் அடைய முடியாது. நமது எல்லைகளை நாம் அறிந்துகொண்டு, இருக்க வேண்டும் என்ற தொனியில் பதில் தந்தார்.

இளைஞன் அர்னால்ட் உடனே அவரிடம் ‘‘நீங்கள் கூறுவது தவறு’’ என்றார். உடனே எரிச்சலடைந்தார் ரிக் வெயின். காரணம், வயதில் முதிர்ந்தவர், அனுபவம் கொண்டவர், உலக ஆணழகன் என்று அறியப்பட்டவர். அப்போது அர்னால்டை நோக்கிய அவர், ‘‘நான் சொன்னது எப்படித் தவறாகும்? எனக்கு விளக்கம் தருகிறாயா?’’  என்று கேட்டார்.

அப்போது சிரித்துக் கொண்டே அர்னால்ட் அவரிடம், ‘‘சார், தான் விரும்புவதையெல்லாம் ஒவ்வொரு மனிதனாலும் அடைய முடியும்; அதற்கு ஏற்ற உழைப்பையும், உறுதியையும் அவன் கொண்டிருந்தால் இது முடியும்’’ என்று பதில் சொன்னார். ஒரு பதினாறு வயதுச் சிறுவனின் பதிலைக் கண்ட ரிக் வெயின் பதில் சொல்லாமல் ஆமோதிப்பது போல தலையை அசைத்துவிட்டுச் ெசன்றுவிட்டார்.

ஆஸ்திரியா நாட்டில், தால் என்ற கிராமத்தில் 1947ஆம் ஆண்டு, சூலை மாதம் 30ஆம் நாள் பிறந்தவர் அர்னால்ட் ஸ்வாசர்னேகர். சிறு வயது முதலே சுறுசுறுப்புத்தான். தந்தை ஒரு காவல்துறைப் பணியாளர். எளிமையான குடும்பம். அர்னால்ட், தன் பதினைந்து வயது முதலே உடற்கட்டைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தினார். உலகின் மிகச்சிறந்த ஆணழகனாக வரவேண்டும் என்ற இலக்கை அவர் சிறுவயதிலிருந்தே கொண்டிருந்தார்.

ஆணழகன் அர்னால்ட்

ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வெல்ல வேண்டும் என்ற தணியாத ஆர்வம் கொண்டிருந்த அர்னால்ட் வாரத்தின் ஏழு நாட்களும் பயிற்சி மேற்கொண்டார். அவரது முதல்கட்டப் பயிற்சியாளர் அவரைப் பற்றிக் கூறும் போது, ‘‘பயிற்சிக்கு வந்த முதல் நாளே, நான் ஆணழகன் போட்டியில் ஜெயித்து ஒருநாள் மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டம் வெல்வேன் என்று கூறினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் தவறாது பயிற்சியில் ஈடுபடுவார்.

மற்ற போட்டியாளர்களை விடச் சிறப்பாகச் ெசய்ய வேண்டுமென்று முனைப்புக் காட்டினார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால், அதிக ஆர்வம் காரணமாக, பயிற்சிக் கூடத்தின் ஜன்னல் வழியாக, உள்ளே சென்று பயிற்சிகளை மேற்கொண்டவர் அர்னால்ட். அவரது முன்மாதிரியாக ஆணழகன் ரெக் பார்க் என்பவரைத்தான் தன் மனதில் கொண்டு பயிற்சி செய்தார்.

அன்றாடம் பயிற்சிக்குச் செல்வதை அவருடைய பெற்றோர்கள் அப்போது விரும்பவில்லை. காரணம், அக்காலத்தில் இன்று உள்ளது போல ஆணழகன் போட்டிக்கு அவ்வளவு வரவேற்போ, பயிற்சிக் கூடங்களோ இருக்கவில்லை. ஊருக்கு ெவளியில் ஒரு கூடாரத்தில் தான் சிலர் இப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். அதிலும் இந்த இடங்கள் தவறான செய்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனம் செய்தவர்களும் உண்டு. அர்னால்ட் இவை எவை பற்றியும் கவலைப்படவில்லை.

பல சமயம் அர்னால்டின் தாயார் ‘‘ஏன் உடலை இப்படி வருத்திக் கொள்கிறாய்?’’ என்று கேட்பார். தந்தை அவரிடம், ‘‘இப்படித் தசைகளை முறுக்கேற்றி என்ன செய்யப் போகிறாய்?’’ என்று கேட்ட போது, ‘‘நான் உலகத்திேலயே சிறந்த உடலமைப்பைக் கொண்டவனாக வருவேன். அதன் பிறகு அமெரிக்கா சென்று திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெறுேவன்’’ என்று கூறினார். இதைக்கேட்ட அவரது தந்தை ‘‘இவனுக்கு என்ன ஆயிற்று, ஆணழகன், நடிகன் என்று புலம்புகிறான். மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்’’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். அவரது ெபற்றோருக்கு அர்னால்டின் ஆர்வமும், இலட்சிய வெறியும் அன்று தெரியவில்லை.

ஆனால், இளம் வயது முதலே அர்னால்ட் தன் குறிக்கோள்களில் தெளிவாக இருந்தார். அடிக்கடி தன் சிறு வயது நண்பர்களிடம், ‘‘அமெரிக்கா செல்வேன்’’ என்று கூறுவார். ‘‘வா, விளையாடலாம், ஓடலாம்’’ என்று நண்பர்கள் அழைத்தால் ஓடினால் ‘‘தசைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்’’ என்று கூறிவிடுவார். தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு அமெரிக்கா பற்றிய செய்திகளைத் தரும் இதழ்களை வாங்கிப் படிப்பதை அவரது நண்பர்கள் பலர் ஆர்வமுடன் பார்த்துள்ளனர். அப்படியானால், இளம் வயதிலேயே இரண்டு இலக்குகளுக்குத் தன் மனதில் இடம் கொடுத்து உழைத்துள்ளார் அர்னால்ட்.

அவருக்கு இருபது வயது முடிந்த சமயம், 1968ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆணழகன் போட்டிக்கு மிகுந்த ஆர்வமுடன் சென்றார். அதற்கு முன்னதாக இரண்டாவது முறையாக மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டத்தை அவர் ெவன்றிருந்தார். அமெரிக்காவில் பிராங்க் சேன் என்பவருடன் போட்டி. இவரைவிட இருபது கிலோ எடை குறைந்த பிராங்க் சேனிடம் தோற்றுவிட்டார் அர்னால்ட். புதிய ஊரில், புதிய சூழலில் தோல்வியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அன்று இரவெல்லாம் அழுதார். தன் தோல்விக்குக் காரணம் அதிக எடை கொண்ட தனது கால்களின் தசைகள் என்பதைப் புரிந்து கொண்டார்.

மறுநாள் முதல் கால் அடித்தசைகள் வெளியே தெரியுமாறு தனது காற்சட்டையைப் பாதியாகக் கழித்து அணிந்து கொண்டார். மற்றவர்கள் இவரை ஒரு மாதிரியாகப் பார்த்த போதும் கவலைப்படவில்லை. மீண்டும் தன் உடலை மிகக் கச்சிதமாகக் கொண்டுவரப் பயிற்சி செய்தார். அதன் பிறகு உலக அளவிலான ஆணழகன் போட்டிகளில் பதிமூன்று முறை வெற்றி பெற்றார். உலகப் புகழ்பெற்ற மிஸ்டர் ஒலிம்பியா போட்டிகளில் ஏழு முறை முதலிடம் பெற்றார்.

உலகின் தலைச்சிறந்த ஆணழகன் என்று அறியப்பட்டார். தன் சிறுவயதுப் பயிற்சியின் போது ரெக் பார்க், பல திரைகளில் ெஹர்குலிஸாகத் தோன்றியதைக் கண்டு வியந்து போனார். இன்று ஒரு அட்லஸ் போலத் தோற்றமளிப்பதாக அவரது நண்பர்கள் கூறும் வண்ணம் புகழ் பெற்றார். மேலும் ஆணழகன் போட்டியை வெல்வது, பயிற்சியெடுப்பது, தயாரிப்பது பற்றிப் புத்தகங்களும் எழுதினார்.

பயனுள்ளவராக இருங்கள் (Be useful), வாழ்க்கைக்கான ஏழு கருவிகள், உடற்கட்டமைப்பின் தொகுப்பு (Encyclopedia of Modern Body Building) என்ற நூல்களை எழுதினார். அவரைப் பற்றிப் பல புத்தகங்களும், அர்னால்ட் சாதனைகளை வெளியிட்டு பல நூல்களும் வந்துள்ளன. உலகளவில் உடற்கட்டுக் கலைைய, அதாவது ‘ஆணழகன்’ என்ற வார்த்தையை பிரபலமாக்கியதில் அர்னால்ட் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றார்.

அவரது வெற்றிகள் குறித்து ஒரு சமயம் அவரிடம் கேட்ட போது, ‘‘நீங்கள் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும், ஒரு வெற்றியாளனாக உங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மோசமான எண்ணங்கள் உங்களுக்குள் புகுந்துவிட ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மைப் பற்றி என்ன கூறினாலும், துணிச்சலாகச் செயலில் இறங்குவதிலும், தீர்மானங்களை எடுப்பதிலும், ெவற்றியாளர்கள் நாம் திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். அவரது கூற்றுக்கு அவரே சாதனையாளராகத் திகழ்ந்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்

இருபது வயதில் அமெரிக்கா வந்தடைந்த அர்னால்ட் தன் ‘ஆணழகன்’ கனவை அடைந்த போது நிறையச் சம்பாதித்தார். அவற்றைக் கொண்டு நிலங்களை வாங்கி விற்றார். சில கட்டடங்களையும் வாங்கி விற்றார். இந்தத் தொழில் மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. முப்பது வயது அடைந்த போது பத்து இலட்சம் டாலர்கள் பணம் அவரிடம் இருந்தது. கலிபோர்னியாவிலிருந்து வந்த சில பத்திரிகைகள் அவரை ஒரு தொழில் முனைவோராக எழுதியது.

அர்னால்ட் எப்போதும் ஒரு குறிக்கோளுடன் செயல்படுபவர். ஆணழகன் போட்டிகளில் அபார வெற்றி பெற்ற அவர் தன் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தார். நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசையைக் கேட்டதும், பலர் சிரித்தார்கள். வெறும் தசைகாட்டும் உடம்பை வைத்துக் கொண்டு நடிக்க முடியாது என்றும், அர்னால்டின் கரடுமுரடான பேச்சு நடிப்புக்கு ஒத்துவராது என்றும் கூறினர்.

அர்னால்ட் சோர்ந்துவிடவில்லை. ஒரு ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ‘நடிப்பேன்; சூப்பர் ஸ்டாராக வருவேன்’ என்று பகிரங்கமாகப் பேசினார். ஒருவரிடம் நடிப்புக் கற்றுக்கொள்ளச் சென்ற போது, ஒரு நாள் மனமுடைந்து காணப்பட்டார். அந்த மனிதர் ‘‘அர்னால்ட், சோகத்துக்கு என்ன காரணம்?’’ என்று கேட்ட போது, ‘‘இவர்களுக்கு என் பெயர் பிடிக்கவில்லை; நான் பேசும் ஆங்கிலம் பிடிக்கவில்லை; என் உடற்கட்டு பிடிக்கவில்லை; ஆனால், நான் விடமாட்டேன்; நடிப்பு வரவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டாராக வருவேன்’’ என்று சபதம் செய்தார்.

நாட்கள் நகர்ந்தன. அர்னால்ட் முயற்சிகள் தொடர்ந்தன. முதலில் சில படங்கள் தோல்விதான். ஆயினும் அர்னால்ட் பின்வாங்கவில்லை. 1982-ஆம் ஆண்டில் வெளிவந்த கானன் தி பார்பேரியன் (Conan the Barbarian) தொடர்ந்து வந்த டெர்மினேட்டர் அர்னால்டுக்குப்
புகழ் சேர்த்தன.

1988இல் வெளிவந்த நகைச்சுவைப் படம் (Twins) ‘இரட்டையர்கள்’ மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல திரைப்படங்களும் வெற்றி தர, ஒரு திரைப்படத்துக்கு இரண்டு கோடி டாலர்கள் ஊதியம் பெறும் நிலைக்கு உயர்ந்தார் அர்னால்ட்.

1984இல் வெளிவந்த டெர்மினேட்டர்-I, 1991ஆம் ஆண்டில் வெளிவந்த டெர்மினேட்டர்-II, ஜட்ஜ்மெண்ட் டே, ஜிங்கிள் ஆல் தி வே, ஜூனியர், 1987-இல் வந்த பிரிடேட்டர், தொடர்ந்து வெளிவந்த டெர்மினேட்டர்-3, கமாண்டோ, ரெட் ஹீட், தி ரன்னிங் மேன் என்று பல திரைப்படங்கள் அவரை உலகறியச் செய்ததோடு, அவரது நடிப்புத் திறனுக்கும் சான்று பகிர்ந்தன. நடிக்கவே தகுதியில்லை என்று கருதப்பட்டவர், தன் ஆழ்ந்த எண்ணத்தால், சிந்தனையால், தொடர் முயற்சியால் உலகம் புகழும் ஒரு கதாநாயகனாகப் போற்றப்படுகின்றார்.

கலிபோர்னியா ஆளுநர்

திரைத்துறையில் ஒரு குறிப்பிட்ட வெற்றி பெற்ற அர்னால்ட் தன் அடுத்த இலக்காக அரசியலைக் கணித்தார். அவரது மனைவி மரியா, அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் குடும்ப உறவினர் என்பதும், பத்திரிகையாளர் என்பதும் ஒரு பலமாக அமைந்தது. ஆயினும் சில எதிர்ப்புகளையும் சந்தித்தார் அர்னால்ட். இளம் வயதில் நிகழ்ந்ததாக, இவர் மீது சில பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிலர் வழக்குத் தொடர்ந்தனர். எப்போதோ நாசிக்களை அதாவது ஹிட்லரின் செயலை ஆதரித்ததாகவும் அவருக்கு எதிராக முழக்கங்கள் வைக்கப்பட்டன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெற அவரது ஆணழகன் வெற்றிகளும், நடிப்புத் திறனால் பெற்ற ஈர்ப்பும் கைகொடுத்தன.

அர்னால்டை எதிர்த்தவரைவிட பதினோரு சதவிகிதம் அதிக வாக்குகள் பெற்று கலிபோர்னியா ஆளுநராகப் பதவியேற்றார் அர்னால்ட். ஆனால், அங்கே அவரது அரசியல் வாழ்க்கை பல சவால்களைச் சந்தித்தது. அம்மாநிலத்தில், அப்போது வரவு-செலவுப் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்கத் துணிந்த போது பல எதிர்ப்புகள் வெடித்தன. எப்போதும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட அர்னால்ட் இங்கேயும் தன் கவனத்தைச் செலுத்தினார். என்ன செய்யலாம்? என்று சிந்தித்துச் செயல்பட்டார்.

 இரண்டாவது முறையாக ஆளுநராகப் பொறுப்பேற்ற போது சுற்றுச்சூழலைப் பாதிக்கும், பசுமை இல்ல விளைவுகளை உருவாக்கும் மாசுக்களுக்கு எதிராக வலுவான சுற்றுச்சூழல் சட்டங்களை அமல்படுத்தினார். இது அவருக்கு மிக நற்பெயரை எடுத்துக் கொடுத்தது.

அர்னால்ட் ஸ்வாசர்னேகர் வாழ்க்கை வரலாற்றை 2005ஆம் ஆண்டில் லாரன்ஸ் லீமர் என்பவர் எழுதியுள்ளார். ‘அருமையானது’ (Fantastic) என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. உண்மைக் கட்டுக் கதை (True Myths) என்ற நூலை நைகல் ஆன்ட்ரூஸ் என்பவர் எழுதியுள்ளார். ஆஸ்திரிய – அமெரிக்கர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரு புத்தகத்திலும் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

ஆணழகன், சிறந்த நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத்திலும் சாதனை படைத்த அர்னால்ட் ஸ்வாசர்னேகர் தன் வாழ்க்கை பற்றிக் கூறியுள்ளது நமக்குப் பயனுள்ளதாகும். ‘‘வெறுமனே பிறந்தோம், இருந்தோம், வாழ்க்கையை எப்படியோ ஓட்டினோம் என்பது வாழ்க்கையில்லை; மாறாக, முன்னேறுவது, மேலே போகத் துடிப்பது, சாதிப்பது, வெற்றிகொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வாழ்க்கை’’ என்று அர்னால்ட் கூறியதாக, அவரது வாழ்க்கை பற்றி எழுதிய நைகல் ஆன்ட்ரூஸ் தன் நூலில் குறிப்பிடுகின்றார். விரும்புவதையெல்லாம் ஒரு மனிதனால் அடைய முடியும்; அதற்கான உழைப்பும், உத்வேகமும் இருந்தால் என்று சூளுரைத்துச் சாதித்துக் காட்டிய அர்னால்ட், சிந்தித்தார், வென்றார், நம்மையும் சிந்தித்து வெல்ல அழைக்கின்றார்.  =