கல்வி-அறிவு-ஞானம் 

டாக்டர்.ஜாண் பி.நாயகம் எம்.டி

கடந்த இதழில் மூளையின் செல்கள் திறமையுடன் செயலாற்ற இன்றியமையாத வைட்டமின்கள் குறித்தும், எந்த உணவில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன என்ற குறிப்புகளைக் கண்டோம். இந்த இதழில் மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் சில மூலிகைகள் குறித்துக் காணலாம்.

இந்திய மூலிகைகள்

வல்லாரை

சங்குபுஷ்பம்

அஸ்வகந்தி

ஜடாமாஞ்சில்

போன்ற பல மூலிகைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது ஆயுர்வேத மருத்துவதிலும், சித்த மருத்துவத்திலும் இவை பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த மூலிகைகள் அனைத்திற்கும் தனித்தனி மருத்துவ குணங்களும், பயன்பாடுகளும் உள்ளன. ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு குணம்– மூளையின் செயல் திறனை அதிகப் படுத்துவது.

வல்லாரை

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்

நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை அதிகப் படுத்தும்.

வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது.

வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் உள்ளது என்பது நவீன ஆராய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

வல்லாரை உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது தூண்டலை  ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும்.

குறிப்பு –ஆயுர்வேதத்தில் வல்லாரைக்கு ‘பிராமி’ என்று பெயர்.

சங்கு புஷ்பம்

சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு.

சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில்  பயன்படுபவை.

இந்த மூலிகைக்கு நினைவாற்றலை வளர்க்கும் சக்தி உள்ளது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வட மொழியில் அஸ்வகந்தா. தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது.

அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்தச் சோர்வினை நீக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இதுவும் மூளையின் செயல் திறனையும் கல்வி கற்கும் ஆற்றலையும் வளர்க்கும் சக்தி கொண்ட ஒரு மூலிகை.

ஜடாமாஞ்சில்

இமய மலையின் 3000 முதல் 4500 மீ உயரமான பகுதிகள், வட காஷ்மீர், பூட்டான், பர்மா, இலங்கை முதலிய பகுதிகளில் விளைகின்ற ஒரு பூங்கோரை இனத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம்.

சடாமாசி, சடாமஞ்சி, பைகாசி தகரம் ஆகிய பெயர்களும் உண்டு.

இதுவும் மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் ஒரு மூலிகை.

சீனமூலிகைகள்

ஜிங்கோபிலோபா (Gingo – Blloba)

ஜின்செங் (Ginseng)

ஆகிய இரு மூலிகைகளும் மூளையின் இயங்குத் திறனை அதிகப்படுத்தவும், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தவும் சீனமக்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு மூலிகைகளுமே மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றன.

மூளைகளின் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கின்றன.

மேலும் இந்த மூலிகைகளை  உட்கொள்ளும் போது நினைவாற்றல் அகரிக்கிறது.

படிக்கும் திறன் அதிகரிக்கின்றது.

இவை அனைத்துமே நவீன விஞ்ஞான ஆய்வுகளின் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுவரையில் நாம் கண்ட மூலிகைகள் அனைத்துமே இவையும் மாத்திரை வடிவில் அல்லது சூரணம் / லேகியம் வடிவில் கிடைக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்கு கற்பதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு நல்ல
மருத்துவரின் ஆலோசனைப் படி மட்டுமே இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.