கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்

வணக்கம் ஐயா.

வணக்கம்.. வணக்கம். எல்லோரும் உட்காருங்க. என்ன சதீஷ், லைசன்ஸ் இல்லாமல் டூ வீலர் ஓட்டிட்டுப் போய்ப் போலீசில் பிடிபட்டியாமே? லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டறது தப்பில்லையா..?

ஐயா, மன்னித்துக்கொள்ளுங்கள். இனி இந்தத் தவறினைச் செய்யமாட்டேன்.
லைசன்ஸ் எடுக்கிற வயது வந்தவங்களெல்லாம் டூ வீலர் ஓட்டப்பழகிட்டு லைசன்ஸ் எடுத்திடுங்க.
ஐயா, நம்ம நாட்டில கார் மற்றும் இதர வாகனங்கள் ஓட்டுவதற்குப் பெறப்படும் லைசன்ஸ்

வெளிநாடுகளிலும் செல்லுபடியாகுமா?

நல்ல கேள்வி. இந்திய ஓட்டுநர் உரிமம் (Indian Driving Licence) வைத்திருப்பவர்களுக்குச் சில வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட அனுமதி உண்டு. இருப்பினும், நாடு மற்றும் அந்தந்த நாடுகளின் போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு (International Driving Permit – IDP) அல்லது உள்ளூர் உரிமம் அவசியமாகின்றன.

இதற்குச் சில நாடுகளை உதாரணமாகக் கூறலாமா ஐயா?

அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு அவசியமாகும். இங்கிலாந்தில் இந்திய உரிமத்தைப் பயன்படுத்தி 1 ஆண்டு வரை வாகனம் ஓட்டலாம். கனடா, ஆஸ்திரேலிய நாடுகளிலும் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு இந்திய உரிமத்துடன் சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு சமர்ப்பித்து வாகனங்கள் ஓட்ட அனுமதி உண்டு. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்திய உரிமம் மற்றும் சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு மூலம் 6 முதல் 12 மாதங்கள் வரை வாகனங்கள் ஓட்டலாம். ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு உடன் குறிப்பிட்ட காலம் வரை வாகனம் ஓட்டலாம். நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளில் குறுகிய காலப் பயணங்களுக்கு இந்திய ஓட்டுநர் உரிமமே போதுமானது. சீனாவில் இந்திய உரிமம் செல்லுபடியாகாது. தற்காலிக சீன உரிமம் பெற வேண்டும். ஜப்பானிலும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு அனுமதி தேவை.
ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு ரயில் இயக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததே.

வாயுவால் ரயிலை இயக்கமுடியுமா?

முதலில் ரயில் குறித்த செய்தியைச் சொல்கிறேன். மாற்று எரிசக்திப் பயன்பாட்டில் முக்கிய முன்னேற்றத்தை அடையும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினைத் தயாரிக்கும் பணியில் 2022 – ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது. சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன. ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை முறையில் இந்த ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

எப்படி ரயில் இயங்குகிறது சொல்றேன் கேளுங்க.. ரயில் என்ஜினில் உள்ள fuel cell-இல் ஹைட்ரஜன் வாயுவும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் இணைந்து மின்சாரத்தை உருவாக்குகின்றன. அந்த மின்சாரத்தில்தான் ரயிலின் மோட்டார் இயங்கி, ரயில் முன்னோக்கி செல்கிறது. கூடுதலாக உருவாகும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும். இந்த ரயிலில் இருந்து கார்பன் டைஆக்சைடு போன்ற மாசுபடுத்தும் வாயுக்களுக்குப் பதிலாக நீராவி மற்றும் தண்ணீர் மட்டுமே வெளியேறும். இந்த ரயிலில் இரண்டு ஹைட்ரஜன் இயக்குப் பெட்டிகள் உள்ளன. அவை தலா ஆயிரத்து 200 கிலோவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டவை.

இந்த நல்ல முன்னெடுப்பு. இது வேறு எந்த நாட்டிலாவது உள்ளதா?

ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், 2018 – ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

நமது ஹைட்ரஜன் ரயிலுக்கான சிறப்பம்சம் ஏதாவது?

நம்நாட்டில் ஓடக்கூடிய இந்த ரயில் மணிக்கு 75 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், 2 ஆயிரத்து 600 பேர் பயணிக்கலாம். மற்ற நாடுகளில் 2 அல்லது 3 பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில், உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றுள்ளது.

உலகின் மொத்த கச்சா எண்ணையில் பெரும்பகுதி அரபு நாடுகளில் உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ள ஒரு பாலைவனப் பகுதிக்கு இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெய் எப்படி வந்தது?

நல்லா யோசிக்கிறீங்க. ஒரு காலத்தில், தண்ணீர் மற்றும் விவசாயப் பொருட்களின் பற்றாக்குறையால் இந்த நாடுகள் பொருளாதார ரீதியாகப் பலவீனமானவையாகக் கருதப்பட்டன. இருப்பினும், எண்ணெய் கண்டுபிடிப்பு திடீரென இந்த நாடுகளின் தலைவிதியை மாற்றியது. மேற்கு ஆசியாவின் பரந்த எரிசக்தி இருப்புகளின் ரகசியம் அதன் வரலாற்றுப் பின்னணியில் மறைந்துள்ளது. சுமார் 100 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி முழுவதும் பாலைவனமாக இல்லாமல் ‘டெத்திஸ் பெருங்கடலுக்கு’ (Tethys Ocean) அடியில் மூழ்கியிருந்தது.

டெத்திஸ் பெருங்கடலா?

டெத்திஸ் பெருங்கடல் என்பது பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற நுண்ணிய உயிரினங்கள் நிறைந்த ஒரு வெப்பமான, ஆழமற்ற பெருங்கடலாக இருந்தது. இந்த உயிரினங்கள் இறந்து கடலின் அடியில் படிந்தபோது, ‘ஆக்சிஜன் பற்றாக்குறை’ (அனாக்ஸிக்) நிலை உருவானதாம். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, இந்த எச்சங்கள் சிதைவடையாமல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் புதைந்து கிடந்தன. பின்னர், பூமியின் அழுத்தம் மற்றும் வெப்பத்தால் படிப்படியாக எண்ணெய்யாக மாற்றப்பட்டன.