முயற்சி தரும் முன்னேற்றம்!
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

அந்தக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே கதர் ஆடைகளைத்தான் அணிந்தனர். மிகப்பெரிய தொழில் அதிபரின் மகன் என்றாலும், மற்ற பணக்கார மாணவர்களைப் போன்று காரில் செல்லாமல் பேருந்தில்தான் பள்ளிக்குச் சென்று வந்தார் ராகுல்.
ராகுலின் தந்தை கமல்நயன் பஜாஜ் தன் மகனிடம், ‘‘உனக்குக் கிடைக்க வேண்டிய மதிப்பு உன்னிடமிருக்கும் செல்வத்தைப் பொறுத்ததல்ல; அதனால் உன் செல்வத்தை உலகிற்குக் காட்சிப் பொருளாக்கத் தேவையில்லை; அவ்வாறு செய்வது பண்பான செயலும் அல்ல; நீ உள்ளத்தால் எப்படிப்பட்டவன் என்பதுதான் முக்கியம்; நீ பணக்காரனா, ஏழையா என்பதல்ல’’ என்று கூறினார்.

அதே தந்தை அடிக்கடி தன் குழந்தைகளிடம், ‘‘ஒவ்வொரு இந்தியனுக்கும் தம் நாட்டைச் சிறந்த நாடாக்குகின்ற பொறுப்பு இருக்க வேண்டும். நாம் வாழ்க்கையில் எந்தத் துறையில் இருந்தாலும் இதனைச் செய்ய முடியும்’’ என்று கூறிய வார்த்தைகள் ராகுல் பஜாஜ் என்ற தொழிலதிபரை, சாதனை மனிதரை இந்தியாவிற்குத் தந்தது.

பஜாஜ் குழும வரலாறு

ஏழைக் குடும்பத்தில், அன்றாட உணவுக்கே வழியின்றி இருந்த நிலையில் பிறந்தவர் ஜம்னாலால் என்பவர். குடும்ப வறுமை காரணமாக பஜ்ஜிராஜ் என்ற பெரிய பணக்காரருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். பஜ்ஜிராஜ் ஜம்னாலாலைத் தன் சொந்த மகனாகச் சுகமாக வளர்த்தார். தன் தொழில், வியாபாரம் அனைத்திற்கும் உரிமையாளராக நியமித்தார்.

தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காகப் போராடிய பின்பு இந்தியாவுக்கு காந்தியடிகள் வந்தார். காந்தியின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட ஜம்னாலால், காந்தியை அடிக்கடி சந்தித்தார். காந்தியின் ஆசிரமம் அமைக்கத் தன் நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். தனது தந்தை பஜ்ஜிராஜ் இறந்த போது தன்னையும் ஒரு மகனாக ஏற்க வேண்டும் என்று காந்தியிடம் வேண்டினார் ஜம்னாலால்.

தனக்குச் சோதனைகள் வந்த போதும், தேவைகள் ஏற்பட்ட போதும் உடனிருந்து எல்லாம் செய்தவர் ஜம்னாலால் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பாராட்டிவிட்டு தனது மகன்கள் ஹரிலால், மணிலால், ராம்தாஸ் மற்றும் தேவதாஸ் ஆகிய நால்வரை அடுத்து ஜம்னாலாலைத் தன் ஐந்தாம் மகனாகக் காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்டத்துக்காகப் பலமுறை சிறை சென்றார் ஜம்னாலால்.

உத்திரப்பிரதேசத்தில் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தினம் தினம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்ட காந்தியடிகள், ஜம்னாலாலிடம் ஒரு சர்க்கரை ஆலை தொடங்குமாறு வேண்டினார். காந்தியின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாத ஜம்னாலால், ‘‘ஹிந்துஸ்தான் சர்க்கரை ஆலை’’ என்ற ஒரு ஆலையை உத்திரப்பிரதேசத்தில் தொடங்கினார். இதுதான் இன்று நாம் காணும் மிகப்பெரிய பஜாஜ் சாம்ராஜ்யத்தின் முதல் தொழிற்சாலை. 1942 – ஆம் ஆண்டில் ஜம்னாலால் மறைந்தார். அவரது மகன் கமல்நயன் தந்தையின் வழியில் காந்தியவாதியாகவே திகழ்ந்தார்.

கமல்நயன் பஜாஜ்

1945 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி தனது தாத்தா பஜ்ஜிராஜ் நினைவாக ‘பஜ்ஜிராஜ் டிரேடிங் கார்ப்பொரேஷன்’ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் கமல்நயன் பஜாஜ். இத்தாலி நாட்டிலிருந்து வெஸ்பா கூட்டர் மற்றும் ஆட்டோக்களை வாங்கி வந்து விற்பனை செய்தார். பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர் வியாபாரம் களைகட்டியது. வியாபாரம் சிறப்பாகச் சென்றதால் உள்நாட்டிலேயே ஸ்கூட்டரைத் தயாரிக்க முடிவு செய்தார் கமல்நயன்.
புனே மாவட்டத்தின் அருகிலிருந்த வசதி மிகவும் குறைந்த ‘அக்குடி’ என்ற சிறிய கிராமத்தில் தனது ‘பஜாஜ்’ என்ற பெயரிலான தொழிற்சாலையைத் ெதாடங்கினார். இன்று புனே நகரம் இந்தியாவின் வாகன உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதற்கு இந்தத் தொடக்கமே முக்கியக் காரணம் ஆகும்.

தொடர்ந்து ஸ்கூட்டர் உற்பத்தியைத் தொடர மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக உண்மையான காங்கிரஸை காமராஜர் வழிநடத்தினார். இந்திராகாந்தி அம்மையார் தன் பெயரில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அதற்குப் பெரும்பாலான அப்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்ததால் பிரதமராகத் தொடர்ந்தார். கமல்நயன், காமராஜர் காங்கிரஸை ஆதரித்ததால் இத்தாலியின் பியாஜியே நிறுவனத்தோடு வியாபார ஒப்பந்தம் போட அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே கமல்நயன், இந்தியத் தொழில்நுட்பம் கொண்டு தொழிலை முன்னெடுக்கத் தீர்மானித்தார். எனவே இந்தியத் தொழில்நுட்பத்தில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் முடிவை முன்னெடுத்தார் கமல்நயன்.

கமல்நயன் பஜாஜ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தண்டி யாத்திரையில் காந்தியுடன் பங்கேற்றவர். சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து இந்திய சமஸ்தானங்களை இணைக்க உதவியவர். வார்தா தொகுதியிலிருந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகப் பணி செய்தவர் (1957 முதல் 1971). சிறந்த கொடையாளராகத் திகழ்ந்தவர். கிராமப்புற வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுக்குத் தனது தந்தை ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை மூலம் உதவிகள் பல செய்தவர். காந்தியக் கொள்கைகளைப் பரப்புதல் மற்றும் கதர் துணிகள் விற்பனைக்கும் ஊக்கம் தந்தவர்.

தொழிலதிபராகவும், சிறந்த சமூக சேவகராகவும் திகழ்ந்தவர். இவரது மகன் தான் ராகுல் பஜாஜ். ஜவஹர்லால் நேரு தான் ‘ராகுல்’ என்ற பெயரை இவரது மகனுக்குச் சூட்டியவர். இந்த ராகுல் பஜாஜ் என்பவர் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் டில்லி ஸ்டீபன் கல்லூரியில் முடித்துவிட்டு, ஹார்வர்டு சென்று M.B.A. பட்டம் பெற்றவர். படிப்பில் மிகவும் முன்னிலை வகித்தவர். குத்துச்சண்டை வீரராகவும் திகழ்ந்தவர்.