வழிகாட்டும் ஆளுமை – 17

திரு. நந்தகுமார் IRS

ருமுறை ருமுறை என் நண்பன் ஒரு நேர்காணலுக்கு சென்று இருந்தான். அந்த நேர்காணல் முடிந்து வந்தவுடன் என்னிடம்   “நண்பா கேள்வி கேட்டவர் என்னுடைய பதில்களை கேட்டு விட்டு வெரி குட்! வெரி குட்!  என்று என்னை மிகவும் பாராட்டினார்” என்று கூறினான். ஆனால் அந்த நேர்காணலின் முடிவு வெளியான போது அவன் தேர்ச்சி பெறவில்லை. வெறும் 70 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றான். நான் உடனடியாக கேட்டேன் “என்னடா அங்கு நேர்காணலில் கேள்வி கேட்டவர்கள் அனைவரும் உன்னை பாராட்டினார்கள் என்று சொன்னாய். ஆனால் இப்போதுதான் தெரிகிறது அது அனைத்தும் நக்கலாக கூறியது என்று”.

இது எதற்காக கூறுகிறேன் என்றால், நம்மைப் பற்றி குறிப்பிடும் பொழுது, அந்த விஷயங்கள் அனைத்தும்  நக்கலாக கூறப்பட்டதா?  அல்லது உண்மையாகவே கூறினார்களா என்று நாம் அறிந்து செயல்பட வேண்டும். அதற்கு பார்வை அறிவு நமக்கு மிகவும் முக்கியமானது. ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில்  “கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை” எனும் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். அதுபோல பார்ப்பது அனைத்தும் புரிகிறதா? என்று சொன்னால் இல்லை. அப்படி பார்க்கின்ற அனைத்து விஷயங்களும் புரிகிறதா? என்று சொன்னாலும் இல்லை. அதைப் புரிந்து கொள்வதற்கான பொறுமையும் இல்லை. மாறாக, நாம் அனைவருக்கும் அவசரம் தான்.

 மகாபலிபுரம் போல சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொழுது சாப்பாடு எடுத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, நன்கு சுத்தி பார்த்துவிட்டு திரும்பி வந்து விடுவோம். ஆனால் நம்முடைய வயது வளர வளர நம்முடைய ஆளுமை வளருகின்றது. அதே சமயத்தில் நம்முடைய பார்வை அறிவும் வளர வேண்டும். இந்த பார்வை அறிவு என்பது நீங்கள் பார்த்த ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுதே எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறீர்கள் என்பதில் உள்ளது. ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அந்த இடம் எப்படி உருவாகி இருக்கும்? என்று யோசிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோயிலில் இருக்கக்கூடிய அத்தனை அதிசயங்களுடன் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும்? என்பதை பற்றி யோசிக்க வேண்டும். எந்த அளவிற்கு அந்த கோபுரத்தை மிகவும் தொலைநோக்கு பார்வையுடன் கட்டியுள்ளார்கள்? எவ்வாறு அந்த கோபுரத்தின் நடுவே அவ்வளவு பெரிய  கல்லை கொண்டு சென்றிருப்பார்கள்? அதேபோல் அந்த நிழல் கீழே விழாதவாறு எவ்வாறு கட்டியிருப்பார்கள். ஆக எந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமாக செதுக்கி இருப்பார்கள் என்று நம்முடைய பார்வை அறிவை சற்று விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல பல இடங்கள், பல சுற்றுலாத்தலங்கள், பல உலக அதிசயங்கள் என இவை அனைத்தும் ஒரு பார்வை அறிவு இருந்ததனால் தான். இந்த அளவிற்கு அத்தனை கலைகளையும், சிற்பங்களையும் செதுக்கி இருக்க முடிகிறது. இத்தனை சிற்பங்களும், கலைகளும் நமக்கு கிடைத்திருக்கின்றன. 

வழக்கமாக நான் நிறையப் புத்தகங்களை வாங்கி சேகரிப்பேன்.  வாங்கியவுடன் வேகமாக வாசிக்க ஆரம்பித்து விடுவேன்.  அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தலைப்புகள், சிறு சிறு கதைகள், மேற்கோள்கள் என அவை அனைத்தையும் படித்து விடுவேன்.  என் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்காகவும் வாசிக்க ஆரம்பிப்பேன். பிறகு, ஒவ்வொரு பக்கமாக ஒரு பார்வை அறிவுடன் மிகவும் பொறுமையாக ஒவ்வொரு பக்கத்தையும்  மெதுவாக வாசிக்க ஆரம்பிப்பேன்.

 அதுபோல, நேர்காணல்களில் பங்கேடுக்கும்போது கண்ணும் கண்ணும் நோக்க வேண்டும். அவர்களை பார்க்கின்ற பொழுது, அவர்களைக் கூர்ந்து கவனித்தாலோ அல்லது உற்று அணுகினாலோ நாம் ஓரளவுக்கு அந்த நேர்காணலை சிறப்பாக கையாள முடியும். கண்டதும் காதல் என்று சொல்வதும் இதுதான்.  பலவற்றை நமக்கு பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. அதில் ஏமாற்றக்கூடிய விஷயங்களும் அடங்கும். தோற்றத்தில் பொய்யான விஷயத்தை கண்களில் காட்டி நம்மை ஏமாற்றுவதற்கும் இது பயன்படும். ஆனால், அதில் பார்வை அறிவு இருந்தால் அதை தெளிவாக எடுத்து கையாள முடியும்.

இன்று பலரிடம் இந்த பார்வை அறிவு மிகவும் குறைவாக உள்ளது.  ஒரு விஷயத்தைப் பார்த்தவுடன் அடுத்த நிமிடத்திலேயே உடனடியாக அதனைப் புரிந்து கொண்டு அந்தச் சூழ்நிலையை அணுக கூடிய திறனை வளர்த்துக் கொள்பவர்களுடைய ஆளுமை நிச்சயமாக வளரும். உதாரணத்திற்கு நாம் இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றால் நம்முடைய தெருவில் இருக்கக்கூடிய நாய்கள் நம்மை பார்த்து குறைக்காது. ஏனென்றால் நாம் அந்த தெருவிற்கு பழக்கப்பட்டவர்கள். ஆக நாய்களுக்கும் இந்த பார்வை அறிவு அதிகமாக உள்ளது. அதேபோல நமக்கும் இந்த பார்வை அறிவு என்பது முக்கியமானதாகும்.

நாம் வளர்கின்ற பொழுது குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இது தெரிந்து கொள்வதற்காக அல்ல மாறாக புரிந்து கொள்வதற்கான விஷயம். இதை அவர்கள் உணர்கின்ற போது தான் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.  கேட்டவுடன் புரிந்து கொள்வதை விட பார்க்கின்ற பொழுதும் அந்த பார்வை அறிவுடன் அணுகுகின்ற பொழுதும், நிச்சயமாக மிகப்பெரிய ஆளுமையாக தலைவர்களாக மிளிருகின்றார்கள். ஆகவே இந்தப் பார்வை அறிவு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம். நம்முடைய ஆளுமை வளர்ப்பதற்கு மிக மிக அவசியம். நிச்சயமாக அது உங்களை  சாதனை மனிதர்களாக ஜொலிக்க வைக்கும். வாழ்த்துக்கள்!! =