மாண்புமிகு ஆசிரியர்கள் -7 

முகில்

கொடிது கொடிது இளமையில் வறுமை. அதுவும் இந்தியாவின் உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில் பிறந்து வறுமை நிறைந்த பால்யத்தைக் கடப்பது என்பது கொடிதினும் கொடிது.

சட்டத்தை மதியாத ஒழுங்கின்மை, கொள்ளைச் சம்பவங்கள், வகுப்புவாதம், சாதிக் கொலைகள், மதவெறி வன்முறைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்து அவலவங்களுமே முழுமையாக நிறைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம், உத்தரப்பிரதேசம். 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மனித வளர்ச்சியைக் குறிப்பிடும் Human Development Index வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா. கடைசி மாநிலம் பிகார். கடைசிக்கு முந்திய மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்தியாவின் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் 0.645. உத்தரப்பிரதேசத்தின் மனித வளர்ச்சிச் சுட்டெண் இந்தியாவின் சராசரியைவிடக் குறைவு (0.596).

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வி சார்ந்தது. வறுமையிலிருந்து மீள, சமூக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற, வளர்ச்சி கண்டு முன்னேற எல்லாவற்றுக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. ஆனால், இந்தியாவில் குறைந்த கல்வியறிவு கொண்ட 10 மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. இடைநிற்றல் அதிகம் உள்ள மாநிலமாகவும், பெண் கல்வியில் மிக மிக மோசமான செயல்பாடு கொண்ட மாநிலமாகவும் ‘தாழ்ந்து’ விளங்குறது.

உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில், சிறுநகரங்களில் பிழைக்க வழியில்லாத ஏழைகளில் ஒரு பகுதியினர் இடம் பெயருவது அதிகரித்திருக்கிறது. அவர்கள் மாநிலத்தின் நகர்ப் பகுதிகளுக்கோ, பிற மாநிலங்களுக்கோ வேலை தேடிச் செல்கின்றனர். உத்தரப்பிரதேசமானாலும் சரி, வெளி மாநிலமானாலும் சரி, அவர்களுக்கு நல்ல உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதி, சுகாதாரமான சுற்றுப்புறம், வேலைக்கேற்ற நியாயமான ஊதியம், அரசு அல்லது தன்னார்வ நிறுவனங்களின் அரவணைப்பு என்று எதுவுமே கிடைப்பதில்லை. எங்கும் சபிக்கப்பட்ட வாழ்க்கைதான். அவர்களது குழந்தைகளுக்குக் கல்வியும் கிடைப்பதில்லை. அவர்களது வருங்காலமும் இருள்மயமாகத்தான் தொடர்கிறது.

இப்படிச் சபிக்கப்பட்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆங்காங்கே சில ஆசிரியர்கள் மட்டும் ‘படிப்பை மட்டும் விட்டுறாதீங்கடா செல்லங்களா!’ என்று மாணவ, மாணவியரை விடாப்பிடியாக இழுத்துப் பிடித்துக் கரையேற்றப் போராடுகின்றனர். அப்படிப்பட்ட ஓர் அற்புத மனிதர்தான் அசுதோஷ் ஆனந்த் அவாஸ்தி.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்ததற்காக சிறுவயதில் அனைத்து அவலங்களையும் சந்தித்து, கல்வி மட்டுமே வாழ்வில் வசந்தம் பெற ஒரே பிடிமானம் என்பதை உணர்ந்து, ஒழுங்காகப் படித்து, கற்பித்தலையே தன் பணியாகவும் ஏற்றுக் கொண்டவர் அசுதோஷ். உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த ஊர் பாராபங்கி. அங்கே தாரியாபாத் பிளாக்கில் அமைந்த மியான்கஞ்ச் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில், அசுதோஷ் 2010-ம் ஆண்டில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார். அப்போது பள்ளியில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 80.

அந்த எண்ணிக்கையும் பள்ளியின் பதிவேட்டில் இருந்ததுதான். ஆனால், எந்த மாணவனுமே வர விரும்பாத இடமாகத்தான் அந்தப் பள்ளி இருந்தது. கொஞ்ச பேர் மட்டும் தினசரி வந்தார்கள். மதிய உணவுக்காக. சாப்பிட்டு முடித்துவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். ஆக, பள்ளியில் ஆசிரியர்களின் வருகை என்பதும் பெயருக்குத்தான் இருந்தது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த பள்ளியில் கற்பிக்கும் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தார் அசுதோஷ்.

அவருக்கு ஏமாற்றமாக எல்லாம் இல்லை. தன் மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளின் நிலைமை இதுதான் என்று அவருக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஓர் பள்ளியில் படித்துதான் அவரும் தட்டுத்தடுமாறி முன்னேறி வந்திருந்தார். எனவே, நம்பிக்கையுடன், நல்ல செயல் திட்டங்களுடன் களமிறங்கினார். மாற்றம் ஒரே நாளில் வந்துவிடாது என்ற புரிதலும் அசுதோஷுக்கு இருந்தது.

‘நல்ல விஷயங்களை நோக்கி அடியெடுத்து வைப்போம். தனி ஆளாகத்தான் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். முதலில் விநோதமாகப் பார்ப்பார்கள். பின்பு வியப்புடன் நோக்குவார்கள். அதன்பிறகு புரிந்துகொண்டு அவர்களும் கைகோத்துக் கொள்வார்கள். நல்லன நடக்கும்’ என்று கையில் அரிவாளை எடுத்தார். களை எடுப்பதற்காக.

ஆம், அவர் முதல் சீர் செய்தது பள்ளியின் மைதானத்தை. புதர் மண்டிக்கிடந்த இடத்தைச் சீர்படுத்தினார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் மகிழ்வுடன் விளையாடட்டும். அதன் மூலம் கூடுதல் நேரம் பள்ளியில் இருப்பார்கள். தினமும் விளையாடலாம் என்று பள்ளிக்கு வருவார்கள். வரும்போது கூடுதலாக மாணவர்களையும் அழைத்து வருவார்கள். தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை மைதானம் நிச்சயம் உண்டாக்கும் என்று அசுதோஷ் நம்பினார். நாளடைவில் அதுவே நிகழ்ந்தது.

அடுத்து கற்பதன் மீது ஆர்வத்தை உண்டாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். பாடப்புத்தகத்தைத் திறந்து வைத்து, கரும்பலகையில் சாக்பீஸ் தேயத்தேய எழுதிப் போட்டு, தொண்டை வற்றக் கத்திக் கத்திப் பாடம் நடத்தினால் இந்த மாணவர்களுக்கு என்றைக்கும் படிப்பின் மீது ஆர்வம் வரப்போவதில்லை.  ‘படிக்க வேண்டாம்’ என்று ஒரு மாணவன் முடிவெடுத்துக் கிளம்பிவிட்டால், அவனை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவே முடியாது. அவன் பெற்றோர்களும் ‘கல்வியின் முக்கியத்துவம்’ தெரியாத அப்பாவிகளே. பெரும்பாலும் கல்லாதவர்களே. ஆக, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் கற்றலின் மீது ஆசையை விதைக்கச் செயல் திட்டங்கள் தீட்டினார்.

‘எல்லோரும் உங்கள் வீடுகளில் இருந்து பழைய, உடைந்த பொருள்களை எல்லாம் கொண்டு வாருங்கள்’ என்று சொன்னார். ‘சார் அதையெல்லாம் கடையில போட்டு காசு வாங்கிக்குவார்’ என்று மாணவர்கள் தங்களுக்குள் சிரித்தார்கள். இருந்தாலும் ஓட்டை, உடைசல் பொருள்களைக் கொண்டு வந்தார்கள். அசுதோஷ், அந்தப் பொருள்களைக் கொண்டு இயற்பியல் சோதனை மாதிரிகளை உருவாக்கினார். மனிதனின் ஜீரண மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதைச் செய்து காட்டினார். கணிதச் சமன்பாடுகளை வண்ண மாதிரிகளாக்கினார். குப்பைகள், அறிவை வளர்க்கும் அழகிய மாதிரிகளாக மாணவர்களை வியக்கச் செய்தன. பின்பு அரும்பாடுபட்டு அலைந்து, மாவட்ட நிர்வாகத்தில் பள்ளிக்காக நிதி ஒதுக்கச் செய்து மாணவர்களுக்கான அறிவியல் சோதனைச் சாலைகளையும் நிறுவினார். பள்ளியின் வருகைப்பதிவேட்டில் ‘absent’ எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

அசுதோஷ், தினமும் தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்து வந்தார். அதனுள் மெழுகுவர்த்தி, பாட்டில், கண்ணாடி, செருப்பு, ரப்பர் பேண்ட், நூல்கண்டு, தீப்பெட்டி, தெர்மாகோல், பந்து, பென்சில், மண், கற்கள், காந்தம், எலுமிச்சை, இலைகள், ஆணிகள், ஸ்பிரிங், இரும்புத்தூள், சிறு கத்தி, தம்ளர், சிறு பிளாஸ்டிக் குழாய்கள், பலூன் – இப்படி விதவிதமான பொருள்கள் இருந்தன. மைதானத்திலோ, மரத்தடியிலோ மாணவர்களைக் கூட்டுவார். சூட்கேஸை ஒரு மந்திரப்பெட்டி போலத் திறப்பார். அறிவியல் சோதனைகளை ஒரு மேஜிக் போலச் செய்து காண்பிப்பார். செயல்வழிக் கற்றல். மாணவர்கள் ஆர்வமாக உற்று நோக்குவார்கள். பின்பு அவர்களும் வீடுகளுக்குச் சென்று செய்து பார்ப்பார்கள். பின்பு அதைப் புத்தகத்தில் படிக்கும்போது என்றைக்கும் மறக்காத பாடமாக மனத்தில் பதிந்துவிடும். அசுதோஷ், அறிவியலை மாணவர்களுக்கு மந்திர வித்தைபோலக் கற்பித்தார்.

அசுதோஷுக்கு கம்ப்யூட்டர் அறிவு கிடையாது. அவர் அதற்கு முன்பு அதைத் தொட்டதுகூட கிடையாது. அந்தப் பள்ளிக்கு கம்ப்யூட்டரும் ப்ரொஜெக்டரும் வழங்கப்பட்டன. அசுதோஷ், தானே முயற்சி எடுத்து கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார். அதை எப்படி எல்லாம் உபயோகித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க இயலும் என்று தெரிந்து கொள்வதற்காகவே தினமும் கூடுதல் நேரம் ஒதுக்கி தன் அறிவை அப்டேட் செய்து கொண்டார். கம்ப்யூட்டரும் ப்ரொஜெக்டரும் அதில் தோன்றிய காட்சிகளும் மாணவர்களுக்குக் கற்கும் ஆர்வத்தை மேலும் தூண்டின. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் சற்றே அதிகரித்தது. இடைநிற்றல் விகிதமும் குறைந்தது.

கற்பித்தலை, கற்றலை இன்னும் சந்தோஷமான நிகழ்வாக மாற்ற வேண்டும் என்று யோசித்த ஆசிரியர் அசுதோஷ், புகழ்பெற்ற டீவி நிகழ்ச்சியான ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யைக் கையில் எடுத்தார். ‘Kaun Banega Padhaku’ என்ற பெயரில் வகுப்பில் கல்வியும் பொது அறிவும் சார்ந்த கேள்வி – பதில் நிகழ்ச்சியை நடத்தினார். மாணவர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த மாணவர்களுக்குள்ளும் அந்தக் கேள்வி பதில்கள் பதிந்தன. பின்பு அதனை வீடியோவாக பதிவு செய்து யுடியூபிலும் ஏற்றினார். உத்தரப்பிரதேசம் மட்டுமல்ல, இந்தி தெரிந்த பல்வேறு ஆசிரியர்களும் மாணவர்களும் அதனைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த யோசனையின் மூலமாக மியான்கஞ்ச் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி அடையாளம் பெற்றது.

2019-ம் ஆண்டில் அந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியது. தேர்ச்சி விகிதமும் பெருமளவு உயர்ந்தது. பள்ளிக்குத் தவறாமல் வரும் மாணவர்கள், கற்பதிலும் பேரார்வம் காட்டினார்கள். விளையாட்டு, கலைகள், பொழுதுபோக்கு என்று பல்வேறு துறைகளிலும் தம்மை நிரூபித்தார்கள். நல்லவனவற்றை விதைத்ததன் விளைவாக, அந்த ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதை அறுவடை செய்தார் அசுதோஷ்.

அடுத்து உலகமே துவண்டு நின்ற கோவிட் காலத்திலும் அசுதோஷ் தேங்கி நிற்கவில்லை. ஸ்மார்ட் போன் மூலமாகவோ, அல்லது வேறு விதத்திலோ மாணவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது கல்விச் சங்கிலி அறுந்து போகாமல் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். பாராபங்கியின் அந்தப் பகுதி என்பது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இஸ்லாமியர்களும் நிறைந்தது. அந்த மாணவர்களில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வருபவர்கள். உத்தரப்பிரதேசம் போன்ற ஓர் வளர்ச்சி பெறாத மாநிலத்தில், மக்கள் மீது அக்கறையே இல்லாத, பிற்போக்குத்தனமும் சுயநலமும் மிகுந்த, கல்வியில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில், அந்தச் சமூகத்தின் வருங்கால வளர்ச்சிக்காகத் தனி ஓர் ஆசிரியராகப் போராடிக் கொண்டிருக்கும் அசுதோஷ் போன்ற மனிதர்கள் மகத்துவமானவர்கள்.

இந்தியாவின் பல மாநிலங்கள் கல்வி விஷயத்தில் சில பத்தாண்டுகள் முன்னோக்கி நகர்ந்துவிட்டன. அசுதோஷ் போன்ற ஒரு சிலரே தங்கள் மாநிலமும் கல்விப் பாதையில் முன் நகர வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வருங்காலத்திலாவது அவர்களுக்கும் விடியட்டும்!­­