வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

பொருள் என்ற ஒரு வார்த்தை ஏராளமான பொருளைப் பொதித்து வைத்திருக்கிறது. தமிழில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள், ஒரு சொல்லுக்கு பல பொருள் என்று இடத்திற்கும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு சொல்லுக்கு அதற்கு இணையான ஏராளமான (நூற்றுக்கணக்கில் கூட) பொருள்கள் உள்ளது என்பது தமிழின் சிறப்பு.

ஒருவர் பேசும் போது, அதைக் கேட்பவர்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப பலவாறு பொருள் புரிந்து கொள்கின்றனர். அதன்மூலம் இணக்கமும் முரண்பாடுகளும் ஏற்படுகிறது. இன்று வேறு ஒன்றாக புரிந்துகொண்டு முரண்பட்ட ஒருவர், நாளையே அவரிடம் வந்து ‘‘ஐயா நேற்று நீங்கள் கூறியவற்றை நான் தவறுதலாகப் பொருள் புரிந்து கொண்டேன் இன்று நீங்கள் கூறியதன் உண்மைப் பொருளை உணருகிறேன், என்னை மன்னிக்கவும்’’ என்றெல்லாம் கூறுவதையும் பார்க்கிறோம். அதை ‘‘பிறழ உணர்ந்து கொள்ளப்படும் பிழை” என்பார்கள். இன்னொரு பொருள், நம்மிடம் உள்ள அனைத்து உடைமைகளையும் பொருள் என்று குறிக்கின்றோம். அவன் சில பொருட்களை என்னிடம் கொடுத்தான், நானும் அவனுக்குச் சில பொருள்களை கொடுத்தேன் என்கின்றோம். மற்றொன்று பொருள் என்பது செல்வம் என்று சிறப்பாகக் குறிக்கப்படுகிறது.

இன்று பணத்தைத்தான் நாம் பொருள் என்றும் செல்வம் என்றும் எண்ணுகிறோம். முற்காலத்தில் ஆடு மாடுகளைத்தான் பொருள் என்றார்கள். இது பணப் பயன்பாட்டு முறைக்கு முந்தைய “பண்டமாற்று முறை” காலமாகும்.

திருக்குறளில் திருவள்ளுவர் தாம் பெற்ற மக்களையே பொருள் என்று குறிப்பிடுகின்றார்.

*தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
 தம்தம் வினையான் வரும்(குறள்-63 )

என்பது அது.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது திருவள்ளுவர் கூற்றே.

*பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு(குறள்-351)

 எதை நாம் பொருள் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றோமோ அது உண்மையிலேயே பொருள் அல்ல என்று கூறும் வள்ளுவர் எது பொருள் எது பொருளல்லாதது என்பதையும் கூறுகின்றார். இது மெய்ப்பொருள் உண்மையை (மெய்ஞான விளக்கம்) விளக்கும் உயர்நிலை ஆகும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று முன்பு கூறினார். இது உலகியல் பொருள் குறிப்பு. இப்போது அருளியல் நோக்கில் பொருளுக்குப் பொருள் உரைக்கின்றார். ‘‘பொருள் அல்லாதவைகளை பொருள் என்று உணரக்கூடிய அறியாமை என்ற மயக்க உணர்வினால் மாந்தருக்கு சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகிறது, என்பது இந்த குறளின் கருத்தாகும். பொருள் என்றால் எப்போதும் அழிவில்லாமல் என்றும் நிரந்தரமாய் நிற்கும் பொருள் எதுவோ அதுவே பொருள் (மெய்ப்பொருள்).

அது தோன்றுவதும், அழிவதும் இல்லாதது. நாம் எதையெல்லாம் பொருள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோமோ அது ஒரு நாள் இல்லாமல் இருந்தது, இப்போது இருக்கின்றது நாளை ஒருநாள் இல்லாமல் போகக் கூடியது. எனவே அவைகள் பொருள்களாகாது.

இன்று நாம் காண்கின்ற அனைத்துப் பொருட்களுமே இதே நிலைதான். எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால் சூரியன், சந்திரன், நட்சத்திரம், மனிதன் என அனைத்தும் தோன்றி மறைய கூடியதே. அவை எப்போதும் நிலையாக என்றும் உள்ளதாக இல்லையாதலால் இவற்றை நாம் புலன் உணர்வில் இருந்து பார்க்கும்போது பொருளாகத் தெரிகிறது. புலன்களைக் கடந்த உணர்வாகிய மெய்யுணர்வு என்ற உண்மை நிலை உணர்வில் இருந்து பார்த்தால் நாம் பார்க்கும் அனைத்து தோற்றப் பொருட்களும் வெறும் நிகழ்ச்சிகளே.

எது பொருள்? என்றால் இந்த அனைத்து தோற்றப் பொருட்களுக்கும் இடமாக இருக்கக் கூடிய கோடிக்கணக்கான அண்டங்களையும் தன்னகத்தே தாங்கி சூழல் இடமாக இருக்கும் வெட்ட வெளியே உண்மையில் பொருளாகும் என்று மெய்ப்பொருள் உணர்ந்த சான்றோர் கூறுகிறார்கள். இக்கூற்றை ஆழ்ந்து சிந்திக்கும் போது இது உண்மை என்றே நம் அறிவுக்கும் எட்டுகிறது.

பாரதியாரும் ‘‘நிற்பதுவே… நடப்பதுவே…’’ என்ற பாடலில் இவைகளெல்லாம் ‘‘வெறும் சொப்பணம் தானோ? காட்சி மயக்கங்களோ!’’ என்று மெய்ப்பொருளார் ஆராய்ச்சியோடு வினவிக் கொள்கிறார்.

‘‘வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போருக்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி’’

என்று குதம்பைச் சித்தரும் பாடுகிறார். நாமென்ன குதம்பைச்சித்தரா? இல்லை பாரதியாரா? ஏன் பாரதியாக, சித்தனாக நான் இருக்கக் கூடாதா? என்று கேட்பவர்கள் மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் தொடரலாம். அவ்வாறு இருந்தால் நமது பிறப்பு சிறப்படையும் என்பது  திருவள்ளுவர் கூற்று.

 சரி, சராசரி மனிதனுக்கு புரிந்த பொருளைப்பற்றி என்ன கூறுகிறார் சிந்திப்போம்.

பணம் நிறைய வைத்திருப்பவர்களைக் கேட்டால் ‘‘என்னங்க எங்கிட்ட  இருக்கு அவர் என்னைவிட அதிகமாக வைத்திருக்கிறார்’’ என்கின்றார். பணம் தேடுவதில் யாரும் களைப்படைவதே இல்லை.

சாமானியர்கள் அன்றாடத் தேவைக்கே அல்லல் படுவதற்கு காரணம் தேவைக்கேற்ற பணம் கூலியாக கிடைப்பதில்லை என்பதுதான். இன்று பணம் இருந்தால் போதும் எந்தக் கவலையும் இல்லை என்ற நிலையே உள்ளது. ஒரு ஏழைக்கு ஒரு நோய் என்றால் அவர்களின் சக்திக்கு மீறியதாக பணத் தேவை இருக்கும்போது நோயைவிட இல்லாமையே ஆட்டிப்படைக்கிறது.

எவ்வளவு கொடிய நோய் ஆனாலும் அதற்கு வைத்தியம் செய்யப் போதுமான அளவு பணம் கையில் இருந்தால் நோய்களில் இருந்து பெருமளவு விடுபட்டு குணமாக்கி விடலாம் என்ற தெம்பு வருகின்றது.

பணத்தின் அருமை அதன் தேவையின் காலத்தைப் பொருத்து மாறுபடுகிறது. தன் தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை ,பொருளை அது இல்லாத யாருக்காவது கொடுத்து உதவும் மனிதனே உயர்ந்தவன் ஆகின்றான்.

 நல்லவர்களிடம் சேர்ந்த பணம் பலருக்கும் நன்மை செய்கின்றது. தீயவர்களிடம் சேர்ந்த பணம் பிறருக்குத் தீமையே செய்கின்றது. நடு ஊரில் ஒரு நச்சு மரம் இருந்தால் அதன் கனிகள் நச்சுத்தன்மை உடையது. ஆதலால் யாருக்கும் பயன்படாது. அது போல பிறருக்கு கொடுத்து உதவும் குணம் இல்லாதவனின் செல்வமும் பயனற்றது என்கிறது திருக்குறள்.

*நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
 நச்சு மரம்பழுத் தற்று*     (குறள்-1008)

* மரம் தன் கனிகளைத் தானே உண்பதில்லை.

* தடாகம் தண்ணீரை தாமே குடிப்பதில்லை.

அதுபோல, தான் சேர்த்த செல்வத்தை யார் பிறருக்கு பகிர்ந்து உதவுகின்றார்களோ அவர்களே பண்புடையவர்கள்.

செல்வத்தின் பயன்கள்- நாலடியார்:

*துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லோரோடுண்க;
அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்*

சிறுகச் சிறுக சேர்த்த பெருஞ்செல்வம் ஆனாலும் அப் பெருஞ்செல்வம் இருக்கும்போதே நட்போடும், சுற்றத்தோடும் பகிர்ந்துண்டு வாழவேண்டும். இல்லை என்றால் அந்தச் செல்வம் உங்களை விட்டு ஒருநாள் ஓடிவிடும். வண்டிச் சக்கரம் போல சுழலும் செல்வ நிலையாமையை எண்ணி அது இருக்கும் போதே அதன் பயனை அனுபவித்து மகிழ்க.

 செல்வம் நிலையற்றது, வேண்டுவோருக்கு கிட்டுவதில்லை, வேண்டாதவரிடம் குவிகிறது. அன்றாடங் காட்சிகள் சிறிது பணத்தை கூட மிச்சம் பிடிக்க இயலவில்லை என்பதெல்லாம் பொதுவான பேச்சுக்கள்.

கீழ்க்காணும் குறளில் ஐயன் திருவள்ளுவர் ஒரு பொருளாதார ரகசியத்தை வெளியிடுகிறார். கிராமங்களில் முன்பெல்லாம் கிணற்றுப் பாசனம் இருந்தது. கிணற்றின் ஆழம் வரை குழாய் செல்லும் மையத்தில் மோட்டார் செட் இருக்கும். மோட்டாரில்  இருந்து கிணற்றின் நீர் ஆதாரம் வரை செல்லும் குழாயை விட மோட்டார் செட்டிங் மேற்பகுதியில் இருந்து வெளியேறும் குழாயின் அளவு சிறியதாக இருக்கும் .இது கிணற்றில் இருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் இழுத்துக்கொண்டு வரும்போது வெளியேறும் குழாய் அளவு சிறியதாக இருந்தால் இருக்கின்ற நீர் சிறிது ஆனாலும் நீண்ட நேரம் வயலுக்கு பாயும் என்பதனால்.

 *ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
 போகாறு அகலாக் கடை(குறள்-478)

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவு படாவிட்டால் அதனால் தீங்கு இல்லை என்று டாக்டர் மு.வ அவர்கள் பொருள் உரைக்கிறார்கள்.

இக்குறளை நன்கு மனதில் கொண்டால் நம் வருமானம் குறைவாக இருந்தாலும் செய்கின்ற செலவில் கவனமாக இருந்தால் பற்றாக்குறை என்ற நிலை வராது என்பது உறுதி. பொருள் என்பது அருளியலிலும், அதே பொருள் என்பது உலகியலிலும் எவ்வாறு பயன்படுகிறது என்பதை எண்ணிப் பார்த்து அறவழியில் பொருள் சேர்த்து, அறவழியில் செலவு செய்தால் உலகியலில் இருந்து கொண்டே அருளியளில்  உயர சிறந்த வழி இதுவே ஆகும் சிந்திப்போம்.