மாண்புமிகு ஆசிரியர்கள் -14 

முகில்
ர் ஆசிரியரால் ஒரு பள்ளி மாறலாம். ஏற்றம் காணலாம். மாணவர்கள் முன்னேற்றத்தின் படிகளில் முனைப்புடன் ஏறலாம். அது எங்கும் இயல்பாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் பரேலியின் தபௌரா கங்காபுர் கிராமத்தின் அந்த அரசுப்பள்ளியில் நிகழ்ந்த மாற்றம் தனித்துவமானது. ஒரு மாணவனால் ஓர் ஆசிரியருக்குள் நிகழ்ந்த மாற்றம். அந்த மாற்றத்தினால் கவனிக்கப்படாத ஒரு பிரிவு மாணவர்கள் மீது படர்ந்த ஒளி. அந்த ஒளி பரவப் பரவ நிகழத் தொடங்கியிருக்கும் முன்னேற்றம். இந்தச் சிறு மாற்றம் ஓர் இயக்கமாகவே இப்போது முன்னெடுக்கப்படுகிறது. தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழும் அந்த இயக்கத்தை உருவாக்கிய ஆசிரியையின் பெயர் தீப்மாலா பாண்டே.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். நடுத்தரக் குடும்பம். கல்விதான் வாழ்வில் முன்னேறுவதற்குக் கைகொடுக்கும் என்று உணர்ந்த மாணவியாகவே படித்தார். ஆசிரியை ஆக வேண்டும் என்று கனவு வளர்த்தார். கவனம் சிதறாமல் அரசு ஆசிரியையாகப் பணியிலும் சேர்ந்தார். பணிப் பாதுகாப்பு. மாதந்தோறும் சம்பளம் வந்துவிடும். சமூகத்தில் கௌரவம். திருமணம். குழந்தைகள். இனி இவள் வாழ்வில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தீப்மாலாவின் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். தீப்மாலாவும் ஓர் ஆசிரியையாக மாணவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். முனைப்புடன் பணியாற்றினார். மாணவர்களுக்கு கற்றலின் மீதான ஆசையைத் தூண்டினார். கல்வியின் அவசியத்தைப் புரிய வைத்தார். பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. இருந்தாலும் பணியில் முழுத் திருப்தி உண்டாகவில்லை. ஏதோ ஒரு குறை தீப்மாலாவின் மனத்தில் இருந்தது.

2015-ம் ஆண்டு தபௌரா கங்காபுர் அரசு ஆரம்பப்பள்ளிக்குத் தலைமையாசிரியையாக பணி மாறுதல் பெற்றார் தீப்மாலா. பரேலியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் இல்லாத கிராமம் அது. சில நூறு மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி. அங்கு பொறுப்பேற்றவுடன் செயல் வழிக் கற்றல் மூலம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார் தீப்மாலா. மாணவர்களின் திறனில் நல்ல முன்னேற்றம். ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றனர். ஊர்மக்கள் மத்தியிலும் தலைமையாசிரியைக்கு நல்ல பெயர்.

தீப்மாலாவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு தாய், தனது பத்து வயது மகனைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வந்தார். ‘என் மகன். பெயர் அன்மோல். பேச மாட்டான். எதையும் கவனிக்குற திறன் இவனுக்கு இல்ல. இதுவரைக்கும் எந்த ஸ்கூல்லயும் இவனைச் சேர்த்துக்கிட்டதில்லை. நீங்க இவனைச் சேத்துக்குவீங்களா மேடம்?’ தவிப்பு நிரம்பிய அந்தத் தாயின் கேள்விகள் தீப்மாலாவை என்னவோ செய்தன. சிறப்புக் குழந்தையான அன்மோலைப் பார்த்தார். அவன் எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘நான் இவனைச் சேர்த்துக் கொள்கிறேன்’ என்றார் தீப்மாலா.

ஆரம்பத்தில் தீப்மாலாவுக்கு எதுவுமே புரியவில்லை. ஏனென்றால் சாதாரணமான குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் ஒரே மாதிரி கற்றுக் கொடுக்க இயலாது. அவரவர் திறனைப் புரிந்துகொண்டு அதற்கேற்பக் கற்றுக் கொடுப்பதுதான் ஓர் ஆசிரியருக்கான அடிப்படைப் பணி. ஆனால், அன்மோல் போன்ற சிறப்புக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்பு அவர்களது நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். மிகவும் சவாலான காரியம். பிறந்தது முதலே அன்மோல் பேசியதே இல்லை. முதலில் அவனுடன் சைகை மொழியில் பேசுவதற்கு தீப்மாலா முயன்றார். சில வாரங்கள் தொடர்ந்து முயற்சி செய்ததில் சைகை மொழிக்கு அவன் எதிர்வினையாற்ற ஆரம்பித்தான். தீப்மாலாவுக்கு நம்பிக்கை வந்தது. அன்மோலுக்கும்.

அந்தக் குழந்தையை முழுக்க முழுக்கத் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தனது வழக்கமான பள்ளிப் பணிகள் போக, அன்மோலுக்காகவே கூடுதல் நேரம் ஒதுக்கினார். அதற்கான பலன் கிடைத்தது. அன்மோல் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினான். தன் தாய் முன்னிதேவியை அவன் முதன் முதலாக குரல் எடுத்து அழைத்தபோது அங்கே உணர்ச்சிப் பெருக்கெடுப்பு. அவனுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே சிறப்புப் பாடத்திட்டத்தையும், புதிய கற்றல் கருவிகளையும் தீப்மாலா உருவாக்கினார். அன்மோல் கவனிக்கத் தொடங்கினான். எழுத்துகளை அடையாளம் காணும் திறன் பெற்றான். வாசித்தான். பின்பு சாதாரணக் குழந்தைகள்போல பேசவும் தொடங்கினான். பள்ளியில் சேர்ந்த மூன்றாவது வருடத்திலேயே மூன்றாம் வகுப்புக்கு முன்னேறினான். ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டான். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றான். யோகா செய்தான். பிற மாணவர்களோடு சகஜமாகப் பழகி நட்பு வளர்த்தான். பள்ளிக்கு வருவது அவனுக்குப் பிடித்துப் போனது. 90% வருகைப் பதிவேட்டில் ‘Present Miss’ வாங்கி புன்னகை செய்தான். ‘சிறப்புக் குழந்தை’யான அன்மோல், ‘சிறந்த குழந்தை’யாக உயர்ந்தான்.

அன்மோலுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கச் செய்தார் தீப்மாலா. அந்த ஆணையைப் பெறுவதற்கான படிவத்தில் பொதுவாகக் குழந்தைகளின் பெற்றோர்தான் கையொப்பமிடுவர். தீப்மாலா, அன்மோலைக் கையொப்பமிடச் செய்தார். நெகிழ்வான தருணம். தீப்மாலாவுக்கும் தன் ஆசிரியைப் பணி எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒளி கிடைத்த தருணம். சமூகத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமென்றால் ஒன்று நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும் அல்லது அந்த மாற்றத்தை நாமே உருவாக்க வேண்டும். தீப்மாலா இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்.

அன்மோலைப் பார்த்து ஒரு சில சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால், கிராமங்கள்தோறும் எத்தனையோ சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர், இது குறித்த விழிப்புணர்வு ஏதுமின்றி இருந்தனர். தீப்மாலா, சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் சென்றார். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினார். ‘அதெல்லாம் சரிவராது மேடம். கஷ்டம்’, ‘எம்புள்ளையை மத்த புள்ளைங்க கேலி பண்ணுவாங்க’, ‘அவனுக்கு ஒண்ணுக்கு வந்தாக்கூட சொல்லத் தெரியாது’ என்று பலவிதமான நியாயமான காரணங்களைச் சொல்லி அந்தப் பெற்றோர் வருந்தினர். ‘நான் பார்த்துக்கிறேன்’ என்று நம்பிக்கை சொல்லி அந்தச் சிறப்புக் குழந்தைகளை பள்ளிக்குள் முதல் அடியெடுத்து வைக்கச் செய்தார் தீப்மாலா.

தேரைத் தனியாக இழுக்க முடியாதல்லவா. தீப்மாலா, தன்னைப் போன்றே சிந்திக்கும் ஆசிரியர்களிடம் தன் நோக்கத்தைக் கூறினார். உரையாடினார். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இயங்கினால் இன்னும் பல சிறப்புக் குழந்தைகளுக்கு கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார். குறிப்பாக
2016-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட Right of Persons with Disabilities Act குறித்து எடுத்துரைத்தார். என்ன சொல்கிறது அந்தச் சட்டம்?

சிறப்புக் குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளும் இந்தச் சமூகத்தில் சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் மட்டுமன்றி, எல்லோருக்குமான பள்ளிகளிலும் சேர்ந்து கற்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அவர்களது உரிமைகளைச் சமூகம் மதிக்க வேண்டும். பார்வைக்குறைபாடு, பெருமூளை வாதம், ஆட்டிசம் உள்பட 21 குறைபாடுகள் இந்தச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இதையெல்லாம் தெளிவாக சக ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார் தீப்மாலா. கிராமப்புறத்தில் வாழும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. அதை எடுத்துச் செல்ல வேண்டிய பணி நம்முடையது என்று தீப்மாலா வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக வாட்சப் குரூப் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு தீப்மாலா பெயர் ஒன்றைச் சூட்டினார்.

One Teacher, One Call.

ஒவ்வோர் ஆசிரியரும் ஒரு சிறப்புக் குழந்தையைக் கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தையின் கல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல இந்த இயக்கத்தில் பங்குகொள்ள கூடுதலாக ஓர் ஆசிரியரையும் இணைக்க வேண்டும். ஓர் ஆசிரியர், ஓர் அழைப்பு. 2018-ம் ஆண்டில் இந்த இயக்கத்தை தீப்மாலா தொடங்கினார். ஆசிரியர்களின் எண்ணிக்கையும், அதைவிட மாணவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. 2022 செப்டெம்பர் கணக்குப்படி இந்த இயக்கத்தில் சுமார் 450 ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மாநிலம் முழுக்க சுமார் 800-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள் எல்லோருக்குமான பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

24 மணி நேரமும் அந்த வாட்சப் குரூப் ஆனது முனைப்புடன் கல்வி வேள்வி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சக ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் கொடுத்து வழிகாட்டியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் தீப்மாலா. அவர்கள் எல்லோரும் இணைந்து சிறப்புக் குழந்தைகளுக்கான தனித்துவமான பாடத்திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். களிமண், பிளாஸ்டிக் கப், பேப்பர், வண்ணங்கள், பாசி மணிகள், பந்து, ஐஸ் குச்சி முதலிய சாதாரண பொருள்களைக் கொண்டு கற்பிக்கத் தேவையான மாதிரிகளை உருவாக்கும் பயிற்சிகளையும் வழங்குகின்றனர். கற்றல் குறைபாடுடைய குழந்தைகள், அதிலிருந்து மீண்டு பிறருக்குக் கற்பிக்கும் அளவுக்கு மேன்மை அடைந்திருக்கின்றனர். ஓவியம், கலை, விளையாட்டு என்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போட்டிகளில் கலந்து சாதிக்கின்றனர். தீப்மாலா குழந்தைகளுக்கான புத்தக வங்கி ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்வியும் வழங்கப்படுகிறது. சாதாரண குழந்தைகள் சிறப்புக் குழந்தைகளின் தோளோடு தோள் நின்று பல்வேறு உதவிகள் செய்கின்றனர். ஆம், அந்த வகுப்பறைகளில் ஆரோக்கியமான சிந்தனைகள் கொண்ட ஒரு சமூகம் கட்டமைக்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் சிறப்புக் குழந்தைகள் பலருக்குமான ஒரே புள்ளியாக One Teacher One Call இயக்கம் உருப்பெற்றது. வெளியில் எங்கும் செல்லவே முடியாத சூழலில் சுமார் 5000 சிறப்புக் குழந்தைகள், தீப்மாலா மற்றும் அவரது குழுவினரது உதவியோடு கற்றலைத் தங்கு தடையின்றித் தொடர்ந்தனர். 

‘One Teacher One Call’ இயக்கம் மூலமாக சிறப்புக் குழந்தைகள் மீதான சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறையை மாற்றியிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையுமே தனித்துவமானவர்கள். எல்லா குழந்தைகளையும் ஒரேபோல நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். இது சிறப்புக் குழந்தைகளுக்கான வேண்டுகோள் மட்டுமல்ல. சாதாரணக் குழந்தைகளுக்கும் பொருந்தும். நாம் கற்பிக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், அவர்கள் கற்றுக்கொள்ளும் முறையில் நாம் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் மனம் என்பது ஈரநிலம். அதில் இப்போது நாம் என்ன விதைக்கிறோமோ அதுவே அவர்கள் வாழ்க்கை முழுக்க விளையும்’ என்று சொல்லும் தீப்மாலா, ‘சிறப்புக் குழந்தைகளைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுக்குத் தேவைப்படும் அரவணைப்பை அறியாமல் பேசும் சாதாரண மக்களே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று அறச்சீற்றமும் கொள்கிறார்.

2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஓர் உண்மையைச் சொல்கிறது. இந்தியாவில் 0-6 வயது வரையிலான சிறப்புக் குழந்தைகளில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் சுமார் 50% இருக்கிறார்கள். அதில் 29% சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வசதியின்றி இருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை நிச்சயம் உயர்ந்திருக்கும்.

இந்த இருள் நிறைந்த சூழலைப் போக்க தீப்மாலா என்ற ஒற்றை ஆசிரியை, சக ஆசிரிய, ஆசிரியைகளுடன் இணைந்து ஏந்தியிருக்கும் தீப்பந்தம் நிச்சயம் பேரொளியாகப் பரவி சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் புன்னகை தீபம் ஏற்றும்! உத்தரப்பிரதேசம் போன்ற பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஒரு மாநிலத்தில் இருந்து இப்படி ஓர் அறம் சார்ந்த குரல் அழுத்தமாக ஒலிப்பது காலத்தின் தேவையும்கூட. =