வெள்ளோட்டம் வெல்லட்டும் – 10  

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

ப்பலின் வடிவமைப்பில் கடலில் பயணம் செய்ய அது தகுதி வாய்ந்ததா என்பதைக் கண்டறியும் ‘கடற்பயணத் தகுதி’ (Seakeeping) சோதனைகள் முக்கியமானவை. முதற்கட்ட வடிவமைப்பின் அடிப்படையில் கப்பலின் சிறிய அளவிலான மாதிரி (Model) உருவாக்கப்படும். மாதிரிக்கப்பல் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சோதிக்கப்படும். இடது, வலதுபுறங்களில் திரும்பும்போது கப்பல் நீரில் எப்படி செயல்படுகிறது என்பது ஆராயப்படும்.

நீர் தொட்டியில் அலைகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு அலைகளால் கப்பலின் பயணத்தில் ஏற்படும் பாதிப்புகள் கவனிக்கப்படும். அலை கப்பலில் முன்பக்கத்திலிருந்து தாக்கினால் ஏற்படும் விளைவுகள், பின்புறம் மற்றும் பக்கவாட்டு திசைகளிலிருந்து தாக்கினால் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படும்.  இந்தச் சோதனைகளை செய்யும் தொட்டிக்கு, கடற்பயணத் தகுதி மற்றும் நகர்வுத் தொட்டி (Seakeeping and Manoeuvring Basin -SMB) என்று பெயர். இந்தச் சோதனைக்கூடம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்தச் சோதனைகள் நீரியக்க மாதிரிச் சோதனைகள் (Hydrodynamic Model Tests) என்று அழைக்கப்படுகின்றன.

சோதனைகளின் அடிப்படையில் கப்பலின் வடிவமைப்பில் ஏதேனும் மாறுதல் தேவைப்பட்டால், திருத்தப்பட்ட மாதிரி வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்படும். சோதனை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு கப்பல் கட்டும் வேலைகள் துவங்கும்.

ஆவிக்குமிழிச் சோதனைகள்

கப்பலை முன்னோக்கி உந்தித்தள்ளும் புரோப்பல்லரின் அலகுகள், கப்பலின் வெளிப்புற கூடு போன்றவை கடல் நீரில் இடைப்படும் நீரின் ஆவிஅழுத்தத்தை (Vapour Pressure) விட, அழுத்தம் சமயங்களில் குறைந்து ஆவிக் குமிழ்கள் (Vapour Bubbles) உருவாகும். இதற்கு கேவிடேஷன் (உட்குழைவு) என்று பெயர். இப்படி உருவாகும் குமிழ்கள் வெடிக்கும் போது கப்பலின் உலோகப் பாகங்களை சேதப்படுத்தும். பெருத்த இரைச்சலும் ஏற்படும். போர்க்கப்பலின் இயக்கத்தில் இரைச்சலை குறைப்பதும் முக்கியம். சோனார் உணரிகள் ஒலியலைகளை கொண்டே கப்பலின் இருப்பிடத்தை கண்டறிகின்றன. கப்பலின் இருப்பிடம் கண்டறியப்பட்டால், நீர் ஏவுகணைகளால் (Torpedoes) தாக்கப்படும் ஆபத்துகள் உண்டு. எனவே கப்பலின் வடிவமைப்பில் ஆவிக்குமிழ்களால் ஏற்படும் பாதிப்புகளையும் பரிசோதிக்க வேண்டும். இதற்கென பிரத்யேக கேவிடேஷன் நீர்வழி அமைப்பும் (Cavitation Tunnel) உண்டு. இந்த நீர்வழியில் கப்பலின் புரப்பல்லரை இயங்க வைத்தும், கப்பலின் மாதிரியை நகர்த்தியும் சோதனை செய்வார்கள்.

அதிர்ச்சித் தொட்டிச் சோதனைகள்

கப்பல் துறைமுகச் சுவற்றிலோ அல்லது மற்றொரு கப்பலோடு மோதுவதால் ஏற்படும் விபத்து, அதிர்ச்சியை (Shock) ஏற்படுத்தும். போர்க்கப்பலாக இருந்தால் வெடிகுண்டு வெடிப்பதால் ஏற்படும் அதிர்ச்சியையும் தாங்க நேரிடும். கப்பலின் இயந்திரக் கருவிகள், மின்னணு சாதனங்கள் இந்த அதிர்ச்சியினால் இயங்காமல் போகலாம். எனவே அவற்றை சோதித்து அவைகளின் அதிர்ச்சி தாங்கும் எல்லைகளை அறிய வேண்டும். இதற்காக நீர் நிரப்பப்பட்ட அதிர்ச்சித் தொட்டி (Shock Tank) உண்டு. இந்த தொட்டியில் மிதக்கும் மேடையில் கருவிகளை பொருத்திச் சோதிப்பார்கள். அதிர்ச்சியை உருவாக்க அதிர்ச்சிக் குழாய் (Shock Tube) இதில் பயன்படுத்தப்படுகிறது.

இப்படிப்பட்ட சோதனைகளைத் தாண்டி, இன்னும் பல சோதனைகளும் கப்பலை வடிவமைத்து உருவாக்கும் போது செய்யப்படுகின்றன. கப்பல் சந்திக்கும் பிற சோதனைகள் என்னென்ன? பார்ப்போம்!

(சோதனை தொடரும்)