மாண்புமிகு ஆசிரியர்கள் -4        

    

-முகில்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கல்வியில் மிகச்சிறந்த ஊர் எது என்று கேட்டால் எல்லோரும் கைகாட்டியது பாட்னாவை நோக்கித்தான். நாளந்தா பல்கலைக்கழகம் சான்றோர்களாலும் உலகின் அறிஞர்களாலும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பின்பு விக்கிரமசீலா பௌத்த கல்வி மையமும் அதே பணியைத் தொடர்ந்தது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் பீகாரில் கல்வியின் வளர்ச்சிக்குக் குறைவே இல்லை. சுதந்தரத்துக்குப் பிறகுதான் அங்கே கல்வி தேய்ந்து கட்டெறும்பு ஆகிப்போனது. பின்பு கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் ஆகிப் போனது வரலாற்றுச் சோகம். அங்கே கிராமப்புறங்களில் கல்வியறிவு கொண்ட ஆண்களின் சதவிகிதமே குறைவாகத்தான் இருந்தது என்றால் பெண்களின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம். பெரும்பாலான கிராமப்புறப் பெண்கள் பள்ளிக்கூட வாசலை மிதியாதவர்களாகவும், கல்வியின் வாசனை அறியாதவர்களாகவும்தான் இருந்தார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபோதும் அதே அவல நிலைதான்.

2001-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரப்படி, பீகாரில் கல்வியறிவு பெற்றவர்கள் 47.53%. அதில் ஆண்கள் 60.3%. பெண்கள் வெறும் 33.5%. அடுத்த பத்தாண்டுகளில் பீகாரில் கல்வியறிவு பெற்றவர்கள் 63.8% என்று உயர்ந்தது. அதில் ஆண்கள் 73.3%. பெண்கள் 53.3%. 2021-ல் புள்ளிவிவரங்களின்படி இந்த சதவிகிதம் நிச்சயம் அதிகரித்திருக்கும். குறிப்பாக பெண்கள் கல்வி கற்கும் விகிதம் அங்கே குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பது வரவேற்புக்குரிய விஷயம். அதன் பின்னணியில் சந்தனா போன்ற நல்லாசிரியர்களின் கடும் உழைப்பு படர்ந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு பீகாரின் மதுபனி மாவட்டத்தில் ராஜ்நகரில் அமைந்துள்ள எம்.எஸ்.ராண்டி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்கு இணைந்தார் சந்தனா தத்தா. ஆங்கிலமும் பீகாரின் பிராந்திய மொழியான மைதிலியும் கற்றுக் கொடுக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. பள்ளி முழுக்க மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ‘இது இரு பாலர் படிக்கும் அரசுப்பள்ளிதானே?’ என்று சந்தேகத்துடன் சக ஆசிரியரிடம் கேட்டார். ‘பெண் பிள்ளைங்க எல்லாம் இங்க படிக்க வரவே மாட்டாங்க. அவங்களை எல்லாம் அனுப்ப மாட்டாங்க’ என்று வெகு சாதாரணமாகப் பதில் சொன்னார் அவர்.

வகுப்பெடுக்கச் சென்ற சந்தனா, அங்கிருந்த மாணவர்களிடம் அன்புடன் உரையாடினார். அவர்களுடன் சகஜமாகப் பழகிய பிறகு கேள்வி ஒன்றை ஒவ்வொரு மாணவனிடமும் கேட்டார். ‘உங்க வீட்டுல அக்கா, தங்கச்சி எல்லாம் இருக்காங்களா?’

‘இருக்காங்க டீச்சர்.’

‘நீங்க மட்டும் ஸ்கூலுக்கு வர்றீங்களே. அவங்க ஏன் இங்க படிக்க வரல?’

இந்தக் கேள்விக்குப் பல்வேறு மாணவர்களுக்குப் பதில் தெரியவில்லை. பெண் பிள்ளைகளுக்குப் படிப்பு தேவையில்லை என்ற சிந்தனை அவர்களிடம் ஆழமாக விதைக்கப்பட்டிருந்தது. ‘பெண் குழந்தைங்களை எல்லாம் படிக்க வைக்க மாட்டாங்க’ என்று ஒரு சில மாணவர்கள் பதில் சொன்னார்கள். 2001-ம் ஆண்டில் வெளியான புள்ளிவிவரங்களின்படி மதுபானி மாவட்டத்தில் கல்வியறிவு பெற்ற பெண்கள் சதவிகிதம் வெறும் 26.5 மட்டுமே.

தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் தன் மாணவர்களுடன் அவர்களது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார் சந்தனா. அவர்களது வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் பெற்றோருடன் உரையாடினார்.

‘பொம்பளைப் பிள்ளைங்களுக்கு வீட்டு வேலையே சரியா இருக்குது. படிச்சு என்ன ஆகப் போகுதுங்க?’ போன்ற தேய்வழக்கு பதில்கள் சொல்லப்பட்டன. மிகவும் பின்தங்கிய மக்கள், ‘அவ வேலைக்குப் போய் சம்பாதிச்சாதான் எங்களுக்கு ஏதோ வருமானம் வரும்’ என்று பரிதாபமாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சந்தனா, அவர்களிடம் பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அந்தப் பெண் குழந்தைகளிடம் கற்கும் ஆசையைத் தூண்டினார். ஒரு பெண் பிள்ளை கல்வியறிவு பெற்றால் வீட்டிலும் சமூகத்திலும் என்னென்ன மாதிரியான அற்புதமான மாற்றங்கள் நிகழும் என்பதை அந்தச் சாமானியர்களுக்குப் புரியும் மொழியில் எடுத்துரைத்தார். அவர்கள் ஏசினாலோ, பேசினாலோ, கோபப்பட்டாலோ சந்தனா கண்டுகொள்ளவே இல்லை. அவர்களது அறியாமையை அகற்றுவதே ஆசிரியரான தனது பணி என்று சளைக்காமல் தினமும் ஊர் ஊராகச் சென்றார். தன் கல்விப் பிரசாரத்தைப் பொறுமையாகத் தொடர்ந்தார்.

‘பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி எங்க புள்ளைங்களுக்கு எதுவும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?’ என்று சில பெற்றோர்கள் தயங்கினார்கள். சந்தனா, ‘நானே பொறுப்பு’ என்று தைரியம் கொடுத்து அந்தப் பெண் குழந்தைகளின் கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்து வந்தார். எம்.எஸ்.ராண்டி அரசுப் பள்ளியில் மாணவிகளின் குரல்களும் காற்றில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

பள்ளிக்கு வந்த மாணவிகள், அந்தச் சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். கற்றலின் ருசியை உணர்ந்தனர். தங்கள் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைகளையும் கல்வி கற்கத் தூண்டினர். ‘இன்னிக்குப் பள்ளிக்கூடத்துல டீச்சர் பொம்மையெல்லாம் செய்யச் சொல்லிக் கொடுத்தாங்க.’ ‘பார்த்தியா, இதான் என் கையெழுத்து! உனக்கும் கையெழுத்து போடக் கத்துக் கொடுக்கவா?’ அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் நம்பிக்கையுடன் தங்கள் பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.

சந்தனா எடுத்த முயற்சிகளுக்கு சக ஆசிரியர்களும் கைகோத்து ஒத்துழைப்பு கொடுத்தனர். வளர்ந்த பிள்ளைகள் என்றாலும் பலருக்கும் அடிப்படைக் கல்வியிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டியதிருந்தது. அந்த ஆசிரியர்களின் கடும் உழைப்பால் மாணவிகள் விறுவிறுவெனப் புரிந்துகொண்டு கல்வியைக் காதலிக்கத் தொடங்கினர். மாணவிகளுடனான போட்டியால் மாணவர்களும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினர். அந்த அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி சதவிகிதமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.

பண்டைய மிதிலை நகரத்தில் பேசப்பட்ட மொழியே மைதிலி. இலக்கிய வளம் மிகுந்த அதன் அருமை பெருமைகளை மாணவ, மாணவிகளிடம் எடுத்துச் சொன்ன ஆசிரியை சந்தனா, அதில் கவிதைகள் எழுதுவது, கதைகள் எழுதுவது, பாடல்கள் இயற்றுவது என்று கலை சார்ந்து கற்றுக் கொடுத்தார். மொழியின் மீது காதலை உருவாக்கினார். மாணவர்களும் மாணவிகளும் தங்கள் பெற்றோருக்கும் மைதிலியில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி தூண்டினார். இப்படியாக மைதிலி மொழியின் வளர்ச்சிக்கு சந்தனா எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அடுத்தது, ஆங்கிலம். அது அந்நிய மொழி அல்ல. ஆர்வத்துடன் பயின்றால் ஆங்கிலமும் எளிதுதான் என்று தம் பள்ளியின் பிள்ளைகளுக்குப் புரிய வைத்தார். ஆங்கிலத்தில் ஃபெயில் என்ற நிலைமையை மாற்றிக் காட்டியிருக்கிறார்.

அடுத்த விஷயம் மதுபனி ஓவியக்கலை. இன்றைக்கு மதுபனி மாவட்டம் அமைந்த பகுதியில், முன்னொரு காலத்தில் உருவான பழைமையான ஓவியக்கலைக்கு ‘மதுபனி’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. ராமாயணப் புராணக் கதையின்படி, ராமர் – சீதை திருமணத்துக்கு மாப்பிள்ளையை வரவேற்க ஜனக மன்னன், தன் அரண்மனைச் சுவர்களில் வண்ண ஓவியங்களைத் தீட்டச் சொன்னார். அவையே ‘மதுபனி ஓவியங்கள்’ அல்லது ‘மிதிலா ஓவியங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

இந்த மதுபனி ஓவியக் கலை முழுக்க முழுக்கப் பெண்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நாட்டார் ஓவியக்கலையே. மதுபனி பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மதச் சடங்குகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு வீட்டுச்சுவர்களில் ஓவியங்களை வரைந்து அலங்கரித்தார்கள். இந்த ஓவியக்கலையை அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சந்தனா முயற்சிகளில் இறங்கினார். மிதிலா ஓவியக் கலைஞரான சந்தனாவின் மாமனார் பீமலா தத்தா அதற்கு உதவினார்.

சுவர்களில் காவியும் கரியும் வண்ணங்களும் மாணவிகளின் கைவண்ணத்தில் இயற்கைக் காட்சிகளாக, மனித உருவங்களாக, புராணக் காட்சிகளாக உருப்பெற்றன. கேன்வாஸ்களின் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

ஊர்களின் சுவர்களும் மாணவிகளின் ஓவியங்களால் அழகு பெற்றன. இதனால், மாணவிகளின் தன்னம்பிக்கை அதிகரித்தது.

இப்படி கல்வியாலும் கலையாலும் மிளிரும் அந்த அரசுப்பள்ளியில் இப்போது சுமார் 900 குழந்தைகள் கல்வி பயிலுகிறார்கள். அதில் 60% மாணவிகள். 40% மாணவர்கள். ஆம், சந்தனாவின் விடாமுயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் அதிகமாகியிருக்கிறது. எம்.எஸ்.ராண்டி அரசுப் பள்ளியானது நடுநிலைப்பள்ளியிலிருந்து, உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்காக ஒரே நாளில் 400 பெண்களை ரத்ததானம் செய்ய வைத்தது, சமூக சேவைகள் செய்வது, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பது என்று ஆசிரியை சந்தனா, தன் கற்பித்தல் பணியைத் தாண்டியும் பல்வேறு திசைகளில் ஆக்கபூர்வமாக இயங்குகிறார். தன் பள்ளிக் குழந்தைகளுக்கும் புதிய திறப்புகளை உண்டாக்குகிறார். அந்த அரசுப் பள்ளிக்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 2021-ம் ஆண்டில் மத்திய அரசு, ‘தேசிய நல்லாசிரியர் விருது’ வழங்கி சந்தனாவை கௌரவித்திருக்கிறது.

சந்தனா – பீகார் பெண் கல்வியின் கலங்கரை விளக்கம்.