வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

நாம் எப்போதும் எதைப்பற்றியாவது சலித்துக் கொண்டே இருக்கின்றோம். அவன் சரி இல்லை, இவன் சரியில்லை; அது சரி இல்லை, இது சரியில்லை; எதுவுமே சரியில்லை; மொத்தத்தில் இந்த உலகம் போற போக்கே சரியில்லை என்று நாம் மட்டுமல்ல நம்மைப் போலவே பலரும் சலித்துக் கொள்வதை பார்க்கின்றோம்.

இப்படி எல்லோரையும், எல்லாவற்றையும் சரியில்லை என்று சொல்கின்ற நாம் எப்போதாவது ‘‘நான் சரியாக இருக்கின்றேனா? நான் செய்வதெல்லாம் சரியானதுதானா?’’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டதுண்டா? அல்லது கேட்கத்தான் தோன்றியதா? என்று சுய சோதனையாக கேட்டுப் பார்த்தால் விடையாக நம்மிடமிருந்து வரும் பதில் ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்கும்.

நான் சரியாக இருக்கின்றேனா? நான் செய்வதெல்லாம் சரியா? என்று எப்போது நம்மை நாமே கண்காணிக்க துவங்குகின்றோமோ அப்போதே நம் வாழ்க்கையில் ஒரு புதிய பாதையில் அடி எடுத்து வைக்கின்றோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாரும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எதுவும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உலகம் சரியாக இருக்கின்றதா? என்ற கவலையும் தேவையற்றது.

இயற்கைத் தத்துவம்

உண்மையில் சொல்லப் போனால் யாரும் எதுவும் ஏன்? இந்த உலகமும் எப்போதும் சரியாக இருக்கப்போவதில்லை, இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது என்பதுதான் ஒரு இயற்கை தத்துவம். இவற்றுள் நாம் யார்? நம் பங்கு என்ன? நாம் இப்படி இந்த உலகத்தை காண்கிறோம் என்பது தான் முக்கியம்.

“நாம் வாழும் இந்த உலகம் ஒழுங்கற்ற பாதையில் ஒழுங்காக சுழன்று கொண்டிருக்கிறது” என்பதுதான் விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒத்துக்கொண்ட உண்மைத் தத்துவம். இதை நாம் முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.அதைப்போல ஒழுங்கற்ற நம் வாழ்க்கை அமைப்பு முறையில் நம் வாழ்க்கையை நாம் எப்படி ஒழுங்காக அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் திருந்துவோம்

ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உறுதியாக நம்ப வேண்டிய ஒன்று என்னவென்றால் நாம் யாரையும் திருத்த முடியாது என்பதைத்தான்.

ஒரு கணவனால் மனைவியையோ, ஒரு மனைவியால் கணவனையோ திருத்த முடியாது. பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளைத் திருத்த முடியாது. ஒரு ஆசிரியரால் ஒரு மாணவரைத் திருத்த முடியாது. சமுதாயத்தால் மக்களையோ, மக்களால் சமுதாயத்தையோ திருத்த முடியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நம்மால் முடியும். அது, நம்மை நாம் திருத்திக் கொள்வதுதான். நாம் திருந்தினால், நாம் நம்மை திருத்தினால், நாம் மாறினால் நம்மைச் சுற்றி எல்லாம் மாறிவிடும். உலகத்தைத் திருத்துவதன் முதல் படி நம்மை நாம் திருத்திக் கொள்வதுதான்.

உலகம் நன்றாக இருப்பதும், உலகம் நன்றாக இல்லாமல் இருப்பதும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நாம் சரியான கண்ணாடி அணிந்து கொண்டு உலகத்தைப் பார்த்தால் உலகம் நன்றாக தெரிகிறது. தவறான கண்ணாடியை அணிந்துகொண்டு பார்த்தால் உலகம் தவறாக தெரிகிறது. அது என்ன கண்ணாடி என்றால் நம்மை நாம் திருத்திக் கொள்வதுதான் அந்த கண்ணாடி.

முகமும், மனமும் வேறுவேறு

உலகத்தில் எந்த இருவர் மனமும் ஒன்று போல் இருக்க முடியாது. அது மனைவியாக இருக்கலாம், அல்லது கணவராக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம், பிள்ளைகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு தனித்தனி மனம்தான். எந்த இருவர் மனமும் ஒன்றுபோல் இருப்பதில்லை.

உலகத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகம் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மனம் இருக்கிறது. எண்ணம், சிந்தனை, தேவைகள், வாழ்க்கை நோக்கம் என அனைத்தும் வேறு வேறாகத் தான் இருக்கிறது. அது சமுதாயமாக இருந்தாலும் சரி, நம் குடும்பமாக இருந்தாலும் சரி இதே நிலைதான்.

இவ்வளவு வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதும், ஒவ்வொருவரையும் கையாளுவதும் அவரவர்களின் தனித்தன்மையைப் பொறுத்துதான் அமைந்திருக்கிறது.

மேற்கண்ட உண்மைகளைப் புரிந்துகொண்டால் நாம் யாரையும் அனுசரித்துப் போக முடியும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும், ஒத்துப்போவதும், எந்தவொரு சிக்கலையும் ஒரு புதிய கோணத்தில் ஆராய்வதும் தான் அறிவுடைமை.

குறள் நீதி

‘‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’’ என்பார்கள். ‘‘சுற்றத்தின் குற்றத்தை நாம் பார்க்கப்போகும் முன் நம்மிடம் உள்ள குற்றம் குறை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்’’ என்கிறது திருக்குறள்.

“ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”(குறள்-190)

குற்றம் எல்லோர்க்கும் பொதுவானது. குற்றம் செய்வது மனித இயல்பு. ஆனால் நம்மில் பலர் தாம் செய்யும் குற்றத்தை மறந்து, அல்லது மறைத்து அடுத்தவர் குற்றத்தை மட்டும் பெரிதாக்கி அவர்களை இழிவுபடுத்துவர். அதில் அவர்கள் மகிழ்ச்சியும் அடைவர்.

அவ்வாரில்லாமல் அடுத்தவர் குற்றங்களையும் சீர்தூக்கிப்பார்த்து என்ன சூழ்நிலையில் அவர் அவ்வாறு செய்தார்? அவரிடத்தில் நாமிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? என்று சீர்தூக்கிப்பார்த்தால் இவ்வுலக உயிர்களுக்கு எந்த தீமையும் நேராது’’ என்கிறார் திருவள்ளுவர்.

சாக்ரட்டீஸ் கூற்று

‘‘மனிதன் குறை உடையவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான். பிறர் குறை காண்பவன் அரை மனிதன்; தன் குறை காண்பவனே முழு மனிதன்.

எவனும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. எது  உண்மையிலேயே சரி என்பதை அவன் அறியவில்லை. ஆகையால் அவன் தன் மனதில் நல்லது என கருதுவதே செய்கிறான்.

பிறரிடம் குறை காண்பவன் தான் பெரிய அறிவாளி என எண்ணிக் கொள்கிறான். தன் குறைகளை என்றுமே சிந்திக்காதவன்தான் அறிவீனன்’’.

என்ற தத்துவ ஞானி சாக்ரட்டீசின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.

ஞானக்கவி

“தன் குற்றம் குறை கடமை தன்னுள் ஆய்ந்து

தான் கண்டு தனைத் திருத்தும் தகமை வந்தால்

ஏன் குற்றம் பிறர் மீது சுமத்தக்கூடும்

ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்

மென்மைக்கே மனம் உயரும் பிறர் தவறால்

மிக வருத்தம் துன்பமது வந்த போதும்

நன்மைக்கேயாம் நாம் செய்த பாவம் போச்சு

நாம் கண்ட தெளிவு இது வாழ்த்தி வாழ்வோம்”

  (வேதாத்ரிய ஞானகளஞ்சியம்)

இந்த கவியைப் படித்து, இதன் உட்ப்பொருளை நன்கு புரிந்து கொண்டால் மிகுந்த நன்மையை நாம் பெற முடியும்.

* நம்மிடம் உள்ள குற்றம் குறைகளை நாம் ஆராயும்போது மற்றவருடைய குற்றங்குறைகளை நாம் பெரிதுபடுத்த மாட்டோம்.

* நடக்கின்ற தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தும் தன்மையும் நம்மிடமிருந்து போய்விடும்

* அப்படியே மற்றவர்களிடத்திலே தவறு இருந்தாலும் இது மனித இயல்பு தான் என்று அவர்களை மன்னிக்கும் தன்மை இயல்பாக நமக்குள் மலரும்

* மற்றவர்களால் நமக்கு ஒரு வருத்தமும், துன்பமும் வந்தாலும் அது சரி; நாம் எப்போதோ, யாருக்கோ வருத்தமோ, துன்பமோ கொடுத்திருப்போம். அது செயல் விளைவு நியதிப்படி  நமக்கு திருப்பி வருகிறது என்று உணர்ந்து என்றோ செய்த பாவம் ஒன்று நம்மை விட்டுப் போய்விட்டது என்ற தெளிவு வந்து விடும்.

* குற்றம் பார்ப்பதை விட்டுவிட்டு குற்றம் செய்தவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்று அவர்களை வாழ்த்தும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

* இவ்வாறு பழகிக் கொண்டால் எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் வரும், நம்முடைய மனமும் மேன்மை பெறும்.

* எனவே எல்லாவற்றிலும் மேலானது, நம்முடைய குற்றத்தை நாமே ஆராய்ந்து நம்மை திருத்துவதால் மட்டுமே, நாமும் நன்மை அடைய முடியும், அதுவே மற்றவர்களுக்கு நன்மை பயக்கும்

மொத்தத்தில் மாற்றம் நமக்குள் வந்தால், நாம் மாறினால் எல்லாமே மாறிவிடும். சிந்திப்போம்! செயல்படுவோம்!!