கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பயிற்சியாளர்,


மேரி பவுலின் அவர்களுடன் ஒரு நேர்காணல்

சேப்பியன்ஸ் பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் கல்வியாளர், மேடைப் பேச்சாளர், குழந்தைகளுக்கான 17 நூல்களை எழுதியுள்ளவர், கணித ஆசிரியர் என்ற பல்முகத்திறமை கொண்ட மேரி பவுலின் அவர்களை நேர்காணல் செய்வதில் ‘ஆளுமைச்சிற்பி’ பெருமிதம் அடைகின்றது.

இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களை “பாட நூல்களாக” 130க்கும் மேலான பள்ளிகள் தமிழ்நாட்டிலும், மற்ற சில மாநிலங்களிலும் தங்களுடைய மழலையர் பாடப்பிரிவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பயன் அடைந்து உள்ளார்கள். இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டத்தின் நோக்கம் பற்றியும், மேரி பவுலின் அவர்களின் உத்வேகம் பற்றியும் சில கேள்விகள் மூலம் அறிவோம், மகிழ்வோம்.

உங்கள் இளமைக்காலம் பற்றி,

வணக்கம், நான் என்னுடைய ஆரம்பக் கல்வியை நல்ல சமாரியன் துவக்கப் பள்ளியிலும், இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வியை அன்னை வேளாங்கண்ணி உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். 10ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பாடம் பயின்றேன். பின்பு மேல்நிலை கல்வியை புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் படித்தேன். என்னுடைய அம்மா, அப்பா கிராமத்தில் இருந்ததால், தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து 10ஆம் வகுப்பு வரை படித்தேன். அது கூட்டுக் குடும்பமாக இருந்ததால் நிறைய நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பின்பு மேல்நிலை கல்வியை பள்ளி விடுதியில் தங்கிப் படித்ததால் நிறைய வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொள்ள முடிந்தது. பின்பு, கணிதத்தில் B.Sc., M.Sc., படித்தேன். ஆசிரியராக வேண்டும் என்று முடிவெடுத்து B.Ed., M.Ed., M.Phil. படித்தேன். நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று M.B.A. படித்தேன். என்னுடைய கல்லூரிப் படிப்புகளை பகுதி நேரமாகவும், அஞ்சல் வழியிலும் படித்து முடித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக 19ஆம் வயதிலே பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். முதலில் கம்ப்யூட்டர் ஆசிரியராக, பின்பு கணித ஆசிரியராக மற்றும் எழுத்தராக ஆக என மாறி, மாறி ஐந்து வருடம் பள்ளியில் பணியாற்றினேன். பின்பு 2006ஆம் ஆண்டு “GALAXY ACADEMY” என்ற “தனிப்பயிற்சி பள்ளியை” யை உருவாக்கி மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுத்தேன்.

கணித ஆசிரியராக இருந்த உங்களுக்கு மழலையருக்கான நூல்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி உருவானது?

2006ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை “TUITION CENTRE” நடத்தியிருக்கிறேன். பல்வேறு பள்ளிகளிலும், பாடத்திட்டத்திலும் இருந்து மாணவ, மாணவிகள், எங்களிடம் பாடம் கற்றுக் கொள்வார்கள். காலையிலும், மாலையிலும் வகுப்புகள் நடக்கும். அதன் மூலம் 1-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் பாடத்திட்டங்களை அறிய முடிந்தது. அங்கு நான் மட்டுமல்லாமல், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்து பயிற்றுவிப்பார்கள்.

2016ல் மற்றும் ஒரு கிளையை தொடங்கினோம். அங்கு Academy மட்டுமில்லாமல், மழலையர் பள்ளியைச் சேர்த்து உருவாக்கினோம். 2007ல் அதற்கான தகுதிப்படிப்பையும் “Early Childhood Education” படித்து இருந்தேன். “மழலையர் பள்ளி” தான் என் வாழ்விற்கு திருப்பு முனையாக அமைந்தது.

பள்ளித் தொடங்கி முதல் மூன்று மாதங்களில் ஏதாவது புது முயற்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகளுக்கு நல்ல நூல்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பல பதிப்பகத்தின் நூல்களை வாங்கிப் பார்த்தபோது, எனக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை. எனவே, எங்கள் மழலையர் பள்ளி “GALAXY PLAY SCHOOL’ படித்த குழந்தைகளுக்காக 2016ல் இரண்டு நூல்களை எழுதினேன். நூல்களை எழுதுவதற்கு ஆராய்ச்சி செய்தபோது, நிறையப் பாடல்கள் 200, 300 ஆண்டுகள் பழமையாக இருந்தது. உதாரணத்திற்கு “Baa, Baa Black Sheep” 1744ல் எழுதப்பட்டது. “London Bridge is falling down” 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பல பாடல்கள் இன்றைய காலக் கட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

 நான் 10, 11, 12 யில் கணித ஆசிரியராக இருந்ததாலும், மற்ற பாடங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததாலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தேடல் என்ன? அவர்கள் எதில் பின்தங்கியுள்ளார்கள் என்று உணர்ந்ததாலும், அடிப்படைக் கல்வி அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், புதிதாக முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நூல்களை உருவாக்க முடிந்தது.

உங்கள் சேப்பியன்ஸ் பாடத்திட்டத்தின் சிறப்பு என்ன?

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட நூல்கள், குழந்தைகள் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என்று நினைத்தேன். உதாரணமாக, ஒரு மூன்று வயது குழந்தைக்கு எழுத்துக்கள், எண்கள், படங்கள் கொண்ட அட்டையை காட்டினால் எதை விருப்பத்துடன் பார்ப்பார்கள்? கண்டிப்பாக படங்களையே, ஏனெனில் மற்ற எதுவும் அவர்களுக்குப் புரியாது. படங்கள் அவர்களுக்கு புரியவில்லை எனினும், அதில் ஒரு கவன ஈர்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்பதை அறிந்து “Photographic Memory Syllabus” அதாவது முழுவதும் படங்களை மையப்படுத்திய பாடத்திட்டத்தை உருவாக்கினோம்.

ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பதில் பிரச்சனைகள் இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ஆங்கில எழுத்துக்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துக் கொண்டு, அதன் ஒலி வடிவத்தை அறிந்து கொள்ளாதாதால் தான், என்பதால் “Pinky Phonics'” என்ற புதிய வழிமுறையை உருவாக்கி “Phonics” மூலமாக மழலையர் வகுப்பிலே வாசிக்கும் பயிற்சியை ஊக்கப்படுத்தினோம்.

தன்னிகரில்லா தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட நாம் மிகவும் பாக்கியசாலிகள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

எனவே குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிமுகம் செய்யப் “பாட்டும் படிப்பும்” என்ற முறையை பயன்படுத்தி உயிர் எழுத்துக்கள் 12க்கும் 12 பாடல்களும், ஒரு ஆயுத எழுத்துக் காக ஒரு பாடலும், 18 மெய் எழுத்துக்களுக்காக 18 பாடல்களும், உயிர்மெய் எழுத்துக்கள் 216க்கு, 18 வரிசைக்கு 18 பாடல்கள் மற்றும் இரண்டு பாடல்கள் என்று 51 தமிழ்ப் பாடல்களை உருவாக்கினோம்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, செயல்பட வேண்டும் என்பதற்காக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி “A complete digital contact” – “Sapience App” யை உருவாக்கினோம். இதில் 100க்குள் மேற்பட்ட வீடியோக்கள் மூலமாக கல்வியை கற்கண்டாக்கினோம்.

ஆசிரியர்களை இந்தப் பாடத்திட்டத்திற்கு ஏற்ப உருவாக்கும் நோக்கில் “Sapience
Digital Teacher’s Training Course(DTTC)” என்ற
App-ம் உருவாக்கினோம். இதன் மூலம் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரியரும் Blended Learning முறையில் கல்வி முறையை எளிதாக்க முடியும்.

ஒரு ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி, பதிப்பாளராக, எழுத்தாளராக மாறியிருக்கும் நீங்கள் ஆசிரியர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

“Be a Lifelong Student” இந்த உலகில் மிகச் சிறந்த தொழிலாக நான் கருதுவது, விவசாயமும், கல்வி கற்பிப்பதும் தான். எனவே, கல்வி கற்பிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்பாக செயல்பட்டால் மாணவர்கள் பின் நாட்களில் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காமல் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பார்கள். ஒரு நல்ல ஆசிரியர் 1,000 மனிதர்களுக்கு சமம். எனவே, நமக்கு என்ன கிடைக்கும், எனது லாபம் என்ன என்பதைப் பற்றி யோசிக்காமல், என்னால் என்ன முடியும் என்பதே தேடலாக இருக்க வேண்டும். வாழ்க்கை எதிர்பாரா நேரத்தில் இச்சேவைக்கான முழுப்பலனை நமக்கு நிச்சயமாக தரும்.

உங்கள் “Social Media Journey” அதாவது Sapience Publications என்ற Youtube Channel மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். அதன் நோக்கத்தைப் பற்றி பகிர முடியுமா?

அதாவது, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தன்னுடைய மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை கூறவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதுபோல பெற்றோர்களுக்கும் தன்னுடைய மகளை, மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இருப்பினும் நல்ல கருத்துக்களை, நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக கூறும் போதுதான் அது பசுமரத்தாணி போல மனதில் பதியும். அந்த பணியைத்தான் Youtube மூலமாக செய்து கொண்டிருக்கின்றோம். என்னுடைய பேச்சாளர் பயணம் மிக இளம் வயதில் துவங்கியது.

பள்ளிகளில் படிக்கும் போதே நிறைய பேச்சுப் போட்டிகளில் பேசி பரிசுகள் வாங்கிருக்கின்றேன். இன்றைய காலப்பொழுதில் “Social Media” வழியாக பேசுவதன் மூலம் அது எல்லா தரப்பினரையும் சென்றடைகின்றது. குறிப்பாக “win-win way” எனத் தொடங்கி “PAT-Passionate About Teaching”, “Each 1 Teach 1” என 140க்கும் மேற்பட்ட “Videos” களை இதுவரை வெளியிட்டு இருக்கின்றோம்.

இம்முயற்சி நிச்சயமாக மற்றவர்களுக்குப் பயனுள்ள விதத்தில் அமையும் என நம்புகின்றோம். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக பேசி இருக்கின்றேன்.

மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

“இது அறிவுரை அல்ல, வாழ்வியல் முறை” முழுமையாக , அதிகமான நூல்களை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு நூலையும், படித்து முடித்த பிறகு ஒரு தெளிவு கிடைக்கும். ஒவ்வொரு நூலிலும் நமது வாழ்க்கை அடுத்தக் கட்டத்திற்கு சிறப்பாக எடுத்துச் செல்லும் மந்திர சக்தி உள்ளது. பாடநூல்கள் மட்டுமின்றி, சுய முன்னேற்ற நூல்களையும், மற்ற நூல்களையும் அவரவர் விருப்பப்படி, கண்டுப்பிடித்துப் படிக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு நூல் என்ற விகிதத்தில் படிக்க வேண்டும். படிப்பது பிடித்து விட்டால் எல்லாமே அனுபவம் தான், வெற்றி, தோல்வி என்பதே கிடையாது.” நன்றி, வணக்கம்.

ஆசிரியப் பணியை அர்த்தமுடன் மேற்கொள்வதற்கு, குழந்தைகளுக்கு உகந்த கல்வியைத் தருவதற்கு, நூல்களை எழுதி வடிவமைத்தும், ஆசிரியர்களை ஊக்கமூட்டியும், YouTube மூலம் வழிகாட்டியும் வருகின்ற மேரி பவுலின் அவர்களது ஒவ்வொரு முயற்சியும், படைப்பும் சிறப்பாக உள்ளது. மாணவ மற்றும் கல்விச் சமூகத்துக்கு நல்லதொரு வரவாக இவரது ‘சேப்பியன்ஸ்’  பதிப்பகம் திகழ்கிறது. கல்வியாளர் மேரி பவுலின் அவர்கள் படைப்புகளும், பயணமும் பல்லாண்டு தொடர்ந்திட ‘ஆளுமைச் சி்ற்பி’ மாத இதழ் வாழ்த்துகின்றது.