வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

முரண்பாடுகள் தான் மனித முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. எங்கு முரண்பாடுகள் களையப்படுகிறதோ அங்குதான் வளர்ச்சியின் படிநிலைகள் ஆரம்பமாகும். முரண்பாடு என்பது ஒரு மனத்தடை. அதாவது பிறரோடு, பிறவற்றோடு ஒத்துப் போக இயலாத, இணக்கத்தன்மையற்ற ஒரு மனநிலை தான் முரண்பாடு என்பது.

நம்முடைய பத்து விரல்களும் ஒத்த அளவு உடையன அல்ல. அவ்வாறு ஒத்த அளவுடையதாக இருந்திருந்தால் இரண்டு கைகளாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்காது. மனிதன் இன்றுவரை காட்டுவாசி ஆகவே இருந்திருப்பான்.

ஒழுங்கின்மையில் ஒழுங்கு

ஒத்த அளவின்மை, சமமின்மை, மாறுபாட்டுத் தன்மை என்பதெல்லாம் இயற்கையின் ஓர் நியதியே. நாம் வாழும் இந்த பூமியேகூட ஒரு சமநிலையற்ற தன்மையில் தான் சூரியனைச் சுற்றி வருகிறது. ஒழுங்கற்ற தன்மை என்பது தான் ஒழுங்கு என்பதன் ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதற்கு இதை சான்றாகக் கூட கொள்ளலாம். சூரியனை பூமி வட்டப்பாதையிலோ, அல்லது ஒரு சீரான நீள் வட்டப்பாதையிலோ சுற்றவில்லை. கோழி முட்டை வடிவம் என்று வைத்துக்கொள்ளலாம். கோழி முட்டை வடிவம் என்பது ஒரு ஒழுங்கற்ற வடிவமே.

நாம் வாழும் இந்த பூமி ஒழுங்கற்ற பாதையிலே ஒழுங்காகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொண்டாலே  போதும் நாம் துல்லியம் பார்ப்பதை விட்டு விடுவோம். நாம் எங்கெங்கெல்லாம் அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, நாம் நினைத்தது போலத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த மனநிலைக்குப் பெயர்தான் முரண்பாடு என்பது.

முகமும், மனமும் வேறு வேறு

நாம் நினைப்பது போல எங்கும், எதுவும், எப்போதும் 100 சதவீதம் துல்லியமாக இருக்க முடியாது. நாம் நினைப்பது போலவே எல்லாமும் இருந்து விடாது. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் வேறு இல்லை” என்ற ஒரு திரைப்பட பாடல் வரிகளைக் கூட நாம் கேட்டிருக்கின்றோம். முரண்பாடுகள் மனித மனதிலிருந்து தான் தோன்றுகிறது. இதிலிருந்தே ஒவ்வொரு மனிதனின் மனமும் வெவ்வேறு ஆனது என்பது நமக்கு தெரியவருகிறது.

 உலகத்தில் எந்த ஒரு மனிதனின் மனமும் இன்னொரு மனிதனின் மனம் போல் ஒன்றுபட்டு இருக்க முடியாது. உலகத்தில் ஆறு நூறு கோடி மனிதர்கள் இருக்கின்றார்கள் என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும்  வெவ்வேறாக ஆறு நூறு கோடி முகம் இருக்கிறது. சாயலில் இருவர் முகமும் ஒத்து இருப்பது போல் தோன்றினாலும் 100 சதவீத அளவில் ஒன்று பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் இயற்கையின் விசித்திரமான உண்மை. அதுபோல்தான்  ஆறு நூறு கோடி  மனிதனுக்கும் ஆறு நூறு  கோடி மனம்  இருக்கிறது.

கணவன் மனைவியாக இருந்தாலும், பெற்றோர் பிள்ளைகளாக இருந்தாலும், ஆசிரியர்கள் மாணவர்களாக இருந்தாலும் இவ்வாறு தான் எல்லாமே.

தெய்வீகக் குணம்

அவ்வாறாக ஒற்றுமையற்றவற்றோடுதான் நாம் ஒற்றுமையாக  வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணமான ஒரு மனநிலையையும் நாம் கொண்டிருக்கின்றோம். சமநிலையற்ற மனங்களை சமன் செய்வதும் இந்த மன நிலைதான். அதைத் தெய்வீகக் குணம் என்று கூட சொல்லலாம். அவ்வளவு முக்கியமானது, சிறப்புடையது அந்த குணம். சகிப்புத்தன்மை என்பதுதான் அந்த குணம். சகிப்புத்தன்மை என்பது எதை ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது என்றால் பொறுமை என்ற குணத்தை ஆதாரமாக் கொண்டிருக்கிறது.” பொறுமை கடலினும் பெரிது” “பொறுத்தார் பூமி ஆள்வார்;பொங்கினார் காடாள்வார்” என்பதெல்லாம் நாம் நன்கு அறிந்த பொன்மொழிகள் தான்.

பொறுமை, நிதானம் இவற்றில் பழகிய  மனிதனிடம் முரண்பாடு தோன்றாது. ஒருவன் மற்றவர்களோடு, மற்றவற்றோடு முரண்படுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை, எதுவும் மாறப் போவதுமில்லை. அதது அததன் போக்கில் நடந்து கொண்டேதான் இருக்கும். அவரவர்கள் அவரவர் போக்கில் நடந்து கொண்டுதான் இருப்பார்கள்.

எந்த ஒரு மனிதன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு இருக்கின்றானோ அந்த மனிதனின் மனம்தான் பாழ்படும், சமநிலை இன்றி திணறிக் கொண்டிருக்கும். முரண்பாடுகள் உள்ள மனிதனிடம் மன அமைதி இருக்காது, மன மகிழ்ச்சி இருக்காது.

தன் குழந்தைகளோடு முரண்பாடு, தன் மனைவியோடு, மனைவி கணவனோடு முரண்பாடு, தன் சுற்றத்தாருடன் முரண்பாடு,  தன் நண்பர்களுடன்  மற்ற உறவுகளோடு தன் மேல் அதிகாரிகளோடு முரண்பாடு தனக்குக் கீழாக வேலை செய்பவர்களோடு  முரண்பாடு   இப்படி ஒரு விசயத்தில் முரண்படும் மனிதன் ஒவ்வொரு விசயத்திலும் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டேதான் இருப்பான்.

உடலும் கெடும்,உள்ளமும் கெடும்

அப்படி முரண்படுவதால் யாருக்கு நட்டம் என்றால்  முரண்படும் மனிதனுக்குத்தான் .  முரண்பாடுகள் வந்தாலே, ஒரு மனிதனுடைய மனத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கும். அதனால் உடலில் ரத்த ஓட்டத்தில், சுவாச ஓட்டத்தில், வெப்ப ஓட்டத்தி்ல் மாறுபாடுகள் தோன்றும். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். தன் நலம் பாதிக்கப்படும், குடும்ப நலம் பாதிக்கப்படும், சமுதாய நலம் பாதிக்கப்படும்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக  அதனதன் போக்கிலே அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவரவர்கள் அவரவர்களின் சூழ்நிலைக்கும், அவரவர்களின் அறிவு நிலைக்கும் ஏற்ற வகையிலே  நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நினைப்பது போலவே மற்றொருவரும் நினைக்கவேண்டும், ஒருவர் நடந்து கொள்வதைப் போலவே மற்றவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கைக்கே விரோதமானது என்பதை புரிந்து கொண்டால் யார் யார் என்னென்ன நிலையில் இருக்கின்றார்களோ அவர்களை அவரவர்கள் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதும், நாம் நம் நிலையிலே எந்த அளவிற்கு சரியாக இருக்கின்றோம் என்பதை உணர்ந்து நம்மை நாமே திருத்திக் கொண்டு முன்னேற  முயல வேண்டுமே தவிர ஒவ்வொருவரோடும் முரண்படுவதால் நமக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

குட்டிக்கதை

ஒரு அலுவலகத்துக்கு பணிக்கு ஆட்கள் தேவைப்பட்டது. அதற்காக அந்த அலுவலகம் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. அந்த நேர்காணலில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டார்கள். அவ்வாறு கலந்து கொண்ட ஒருவரிடம் நேர்காணல் செய்யும் அதிகாரி பல கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்வி எட்டையும் மூன்றையும் பெருக்கினால் என்ன விடைவரும்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த நபர் 23 என்று பதிலளித்தார். வெளியில் வந்தவர் அடடா இந்த சாதாரண கேள்விக்கே தவறாக விடை சொல்லிவிட்டோமே எட்டையும் மூன்றையும் பெருக்கினால் 24 என்பதற்கு பதிலாக பதட்டத்தில் 23 என்று சொல்லிவிட்டோமே என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவரே எதிர்பாராத விதமாக அந்த வேலை அவருக்கே வழங்கப்பட்டு விட்டது. அவரும் அந்தபணியில் சேர்ந்து விட்டார். ஆனாலும் அவருக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. தவறான பதில் சொன்ன நமக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற உறுத்தல் தான் அது.

ஒரு நாள் தன்னை நேர்காணல் நடத்திய அதிகாரியிடம் சென்று ‘‘ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தாங்கள் கேட்ட கேள்விக்கு தவறான பதில் அளித்த எனக்கு எவ்வாறு வேலை வழங்கினீர்கள்?’’-என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி ‘‘தவறாக எல்லாம் உனக்கு அந்த வேலையை வழங்கவில்லை சரியாகத்தான் வழங்கினோம். அன்று நேர்காணலுக்கு வந்த அனைவரிடமும் இந்த கேள்வி கேட்கப்பட்டது நீங்கள் மட்டும்தான் கிட்டத்தட்ட சரியான விடையை சொன்னீர். எனவே தான் உனக்கு அந்த வேலையை வழங்கப்பட்டது’’ என்று சொன்னார்.

இது தென்கச்சி சுவாமிநாதன் அடிக்கடி சொல்லும் ஒரு வேடிக்கை கதை இது. அதாவது வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் துல்லியம் பார்க்கக்கூடாது. கிட்டத்தட்ட சரியாக இருந்தாலே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே வாழ்க்கையில் முடிந்தவரையில் நாம் சரியாக இருக்க முயற்சி செய்வோம். மற்றவருடைய நிறைகுறைகளை பெரிதுபடுத்தாமல் அவரவர்கள்  நிலையிலேயே அவரவர்களை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வோம். உலகத்தில் யாரையும் யாராலும் திருத்த முடியாது என்பதை புரிந்து கொள்வோம். திருத்தத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.  வாழ்வில் இவ்வாறு நாம் பழகிக் கொண்டால் முரண்பாடுகளை முழுவதுமாக தவிர்த்து முன்னேற்றப் பாதைக்கான வழிகளை தேர்ந்து பண்டுவோம்; பயன்பெறுவோம்; சிந்திப்போம்..! l