வழிகாட்டும் ஆளுமை – 13

திரு. நந்தகுமார் IRS

போட்டியின் போது அல்லது தேர்வு என அனைத்திற்குமான அணுகுமுறை என்ன? என்பதைப் பற்றி பார்க்கும் போது அதனுடைய சூழ்நிலையை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இன்று பலர் பல தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் அடிக்கடி மாணவர்களிடம் கூறுவதுண்டு. ‘‘எங்க அப்பா நல்லா பாடுவாங்க, அவர் நல்லா பாடுவதனால் நானும் பாட ஆரம்பித்தேன். நானும் வீட்டில் பாடிக் கொண்டே இருப்பேன். இப்போது என் மகனும் நன்றாகப் பாட ஆரம்பித்துவிட்டான். இவ்வாறு ஏன் நடக்கிறது? என்று நான் நிறைய சிந்தித்தது உண்டு. நான் என் மகனுக்குப் பாடுவதற்குச் சொல்லித் தரவில்லை. ஆனாலும் இயற்கையாகப் பாட ஆரம்பித்துவிட்டான். இது மரபியல் ரீதியாக வருகிறதா’’ என்றும் யோசித்தேன்.

பல பெற்றோர்கள் என்னிடம் கூறுவதுண்டு. “செஸ் விளையாட்டில் என் மகள் சாம்பியன் ஆக வேண்டும்; கிரிக்கெட்டில் என் மகன்
சாம்பியன் ஆக வேண்டும்; என்ன சார் பண்ணலாம்?” என்று கேட்பார்கள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் போட்டியில் நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வோம். எவ்வாறு நாம் போட்டிகளில் இருந்து கற்றுக்கொள்வது?

அந்த போட்டியின் சூழ்நிலைக்கு சென்றால் தான், நம்மால் நேரடியாகக் கற்றுக் கொள்ள முடியும். மாறாக வெளியில் இருந்து பார்ப்பதனால் அது பயனளிக்காமல் போய்விடும். உதாரணத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமலே ‘‘அது இப்படி இருக்கும்; இப்படி இருந்தால் தான் தேர்ச்சி பெற முடியும்’’ என்று பலர் தவறான அபிப்ராயத்தை பரப்புகிறார்கள். அதனால் பலர் அந்தச் சூழ்நிைலயைக் கூட ருசித்துப் பார்ப்பதில்லை. ஒரு செஸ் சாம்பியன் ஆகவேண்டும் என்றால் முதலில் செஸ் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டும்; எப்படி விளையாடுகிறார்கள்? எவ்வளவு நேரம் விளையாடுகிறார்கள்? எவ்வாறு காய் நகர்த்துகிறார்கள்? என்று அந்தப் போட்டியின் சூழ்நிலையை உள்வாங்க வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் போது, முதலில் நாம் வெளியிலேயே இருந்து பார்த்து ெகாண்டிருந்ததைவிட அதிகப் புரிதல் கிடைக்கும்?

வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் செஸ் விளையாட்டு தானே என்று தோன்றும். ஆனால் உண்மையில் அந்த சூழ்நிலையை நேரடியாக உள்வாங்கினால், அந்த போட்டியை பற்றி மட்டுமல்லாமல், அதில் சாதனையாளனாக மற்றும் உந்துதலும் சேர்ந்து கிடைக்கப் பெறும். பெரும்பாலும் மாணவர்களின் மனநிலை ஹால் டிக்கெட் வந்தவுடன் தான் அந்த தேர்வு குறித்து தயார் செய்வோம். குறிப்பாக, புத்தகத்தைேய அப்போதுதான் தேட ஆரம்பிப்போம். அரக்கப்பறக்க தேர்வுக்கு தயார் செய்யும் போது அந்த தேர்வின் சூழ்நிலையை அவன் உள்வாங்க முடியாது.

பிறகு தேர்வு முடிந்து முடிவுகள் வந்ததும் தேர்ச்சி பெறவில்லை என்றால், ‘நன்றாகத் தான் படித்தேன், கேள்விகள் கடினமாக இருந்தது என்று’ நண்பர்களிடம் கூறுவார்கள். ஆனால் தயார் செய்தது என்னவோ தேர்வுக்கு முந்தைய வாரம் தான். எனவே போட்டியாளர்கள், தேர்வர்கள் என அனைவருமே அந்தப் போட்டியின், தேர்வின் சூழ்நிலையை அனுபவிக்க வேண்டும்.

அடிக்கடி என்னிடம் பெற்றோர்கள் வந்து ‘‘ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி சார்? என் பிள்ளைகளும் உங்களைப் போல் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் சார். என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்பார்கள். நான் அவர்களிடம் கூறுவது, “உங்கள் மகனோ/மகளோ ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமா அவர்களை என்னிடம் கூப்பிட்டு வாருங்கள். ஏனென்றால் நான் ஒன்று கூற, நீங்கள் உங்களுக்குப் புரிந்த மாதிரி போய் சொல்லுவீர்கள். எனவே அவர்களுக்கு அந்த தேர்வு பற்றிய முழுமையான சூழ்நிலை கூட அவர்களிடம் சென்று சேராது.”

உதாரணத்திற்கு நீங்கள் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்லும் போது, சற்று தாமதமாக சென்றுவிட்டால் என்ன நடக்கும்? மிகவும் இருட்டாக இருக்கும்; நம்முடைய சீட் எங்கு உள்ளது என்று தெரியாது. ஒரு சில காட்சிகள் சென்றுவிடும். ஒன்றும் புரியாமல் இருக்கும், ஒரு சில நிமிடங்களுக்கு. அதுபோல ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் சரி, ஏதேனும் தேர்வுக்கு தயாரானாலும் சரி, அந்த சூழ்நிலையை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏதோ தேர்வு வருகிறது, படிப்போம், ேதர்வு எழுதுவோம் என்பது மடத்தனமான விஷயம்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் பலர், கடைக்குச் செல்வது, புத்தகத்தை வாங்குவது, படிப்பது என்று அர்த்தமில்லாமல் தயார் செய்வார்கள். மாறாக அந்த தேர்வு குறித்து, அந்த தேர்வின் சூழ்நிலை குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள், ஒவ்வொன்றிற்கும் அளவுகோல் என்ன? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நேர்முகத் தேர்வு எப்படி உள்ளது? என ஆராய்ந்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளூரில் வியாபாரம் செய்த ஒருவர் அதனை விரிவுபடுத்தும் போது நஷ்டத்தை சந்திக்கிறார் என்றால் அந்த சூழ்நிலையை அவர் சரியாக உள்வாங்கவில்லை என்று தான் பொருள். எனவே போட்டியாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி அந்தந்த சூழ்நிலையை முழுமையாக உள்வாங்க வேண்டும். அப்படிச் செய்தால் உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்று பார்க்கும் போது, நாம் நம்மை, நம் ஆளுமையை செதுக்கிக் கொள்ள முடியும். நிச்சயமாக அது உங்களை நட்சத்திரமாக, மிகப்பெரும் ஆளுமையாக மாற்றும், உருவாக்கும். வாழ்த்துகள்!