மாண்புமிகு ஆசிரியர்கள் -7

முகில்

பல்வேறு ஆறுகள் ஓடும் பிரதேசம் அது. பொதுவாக வறண்டோ, சாதுவாகவோ இருக்கும் அந்த ஆறுகள், மழைக்காலம் தொடங்கிவிட்டால் நிலத்தைத் துண்டாடிவிடும். டூடூ பழங்குடி மக்கள் தீவினுள் சிக்கிக் கொண்டவர்களாகி விடுவார்கள். சில மாதங்களுக்கு அந்த நிலைமைதான் தொடரும். வெளி உலகத் தொடர்பே இருக்காது. சாதாரண நாள்களிலேயே அந்த டூடூ மக்கள் வாழும் ஊரான டூடூபராவுக்குச் செல்ல சுமார் 60 கி.மீ. தொலைவிலிருக்கும் நகரமான அலிபுர்தாவுரிலிருந்து ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டும்தான் செல்லும். அதுவும் மழையின் சூழலை, ஆறுகளின் ஆக்ரோஷத்தைப் பொருத்ததுதான். ஏதாவது ஜீப் கிடைத்து, அதில் தொற்றிக்கொண்டு சென்றால் உண்டு. அப்படிப்பட்ட, தனித்துவிடப்பட்ட ஒரு பிரதேசத்தில் அமைந்த தோனோபோட்டி டூடூ நினைவு மேல் நிலைப்பள்ளியின் தலைமையாசியராக 2008-ஆம்
ஆண்டில் விரும்பிப் பொறுப்பேற்றார் அவர்.

எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பள்ளியை, உலகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட டூடூ பழங்குடி மக்களை மேன்மைப்படுத்துவதே அவரது லட்சியமாக இருந்தது. பொறுமை, அன்பு, விடாமுயற்சியின் துணையுடன் அங்கே 14 ஆண்டுகளில் அவர் நிகழ்த்தியது அசாதாரணமான மாற்றம். கல்வியால் விளைந்த முன்னேற்றம். சில காலத்துக்கு முன்பு வரை மேற்கு வங்கத்தின் வரைபடத்தில் கூட தென்படாத டூடூபரா, இன்றைக்கு ஒரே ஒரு மனுஷியின் உன்னதமான முயற்சியால் பேரொளி பெற்றிருக்கிறது. அந்தப் பெண் சூரியனின் பெயர் மிஷா கோஷல்!

‘பொம்பளைப் புள்ளைங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். படிக்கிறதோட நிறுத்திக்கக் கூடாது. வேலைக்கும் போகணும். சம்பாதிக்கணும். அந்தப் பிடிமானமும் சுதந்தரமும் இருந்துட்டா போதும். யாரும் நம்மை எதுவுமே பண்ண முடியாது.’ மிஷாவின் தாய் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். சிறுவயதிலேயே அவர் அடிக்கடிக் கேட்டுக் கேட்டு மனத்தில் விதைத்து கொண்ட சொற்கள்.

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரத்தைச் சேர்ந்தவர் மிஷா. சிறுவயதில் மிஷாவுக்கு அறிவியல் பாடம் பிடித்திருந்தது. கணிதம் மிக மிகப் பிடித்திருந்தது. ஈஸ் ஈக்குவல் டூவுக்கு அந்தப்பக்கம் கணிதப் புதிர்களை சமன் செய்வதைக் காதலுடன் செய்தார். எப்போதும் கணிதத்தில் முதல் தரமான மதிப்பெண்தான். எம்.எஸ்.சி. மேத்ஸ் வரை. பின்பு விரும்பி ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் சேர்ந்தார். அதற்கு ஒரு காரணம் இருந்தது.

சிறுவயது முதலே மிஷா பழங்குடி மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். அவர்களது கலாசாரம் முதல் வாழ்க்கை முறை வரை எல்லாமே அவரைக் கவர்ந்தன. அதேசமயம் அவர்களது பின்தங்கிய நிலை குறித்த கவலையும் மிஷாவுக்கு இருந்தது. இவர்களுக்கும் முறையாகக் கல்வி கிடைத்தால் மேலேறி வந்துவிடுவார்கள் அல்லவா. அதனால்தான் ஆசிரியையாக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் மிஷா.

  1. மேற்கு வங்கத்தில் கோச் பிகாரில் பாசந்திர்ஹத் குமுதினி மேல்நிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக தனது கல்விப் பணியை மிஷா தொடங்கினார். கணிதமும் அறிவியலும் கற்றுக் கொடுத்தார். புத்தகங்களைத் தாண்டி வேறு பல நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுத்தார். அனுபவங்களைக் சேகரித்துக் கொண்டார். மாணவர்கள் விரும்பும் அன்பு ஆசிரியையாக ஒன்பதாண்டுகள் பணி.

ஸ்கூல் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று வங்கத்தின் வட பகுதியில் அமைந்த மால்டா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார். அடுத்து தலைமை ஆசிரியைக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2008-ம் ஆண்டில் டூடூபுராவுக்கு வந்து சேர்ந்தார்.

இந்திய – பூடான் எல்லையில் அமைந்த கிராமம்.  2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி அங்கே வாழும் டூடூ பழங்குடிகளின் எண்ணிக்கை வெறும் 1346 மட்டுமே. அங்கு தவிர வேறெங்கும் டூடூ பழங்குடிகள் கிடையாது. ஆம், மீச்சிறுபான்மையினர். குரலற்றவர்கள். வெளி உலகம் தெரியாத அப்பாவிகள். சூரியனும் காடும் நதியும் மலையும் மழையும் மூங்கில் வீடுகளும், அவர்கள் நேசிக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும், உண்ண மவுரா தானியமும், பருக Eu என்ற பானமும் மட்டும் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருபவர்கள்.

2008-ம் ஆண்டில் தோனோபோட்டி டூடூ நினைவு மேல்நிலைப்பள்ளியில் மிஷா தலைமை ஆசிரியையாகச் சேரும்போது அது ஒரு பள்ளியின் தரத்திலேயே இல்லை. எப்போதாவது ஆசிரியர்கள் வருவார்கள். அப்போது சில மாணவிகள் மட்டும் வருவார்கள். அவ்வப்போது பள்ளி பெயருக்கு இயங்கியது. ஒழுங்கு அங்கே குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது. சில மாணவிகள் எட்டாவது வரை படித்தார்கள். அதற்குப் பின் புகுந்த வீட்டுக்குச் சென்று அடுப்பூதிக் கொண்டிருந்தார்கள் அல்லது தேயிலைத் தோட்டங்களில் தளிர் பறித்துக் கொண்டிருந்தார்கள். மத்யமிக் எனப்படும் பத்தாவது பரிட்சைக்குச் சென்றோர் மிகக்குறைவு. அதிலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. முதல் நாளிலிருந்தே மிஷாவுக்குக் கடும் சவால்கள் காத்திருந்தன.

பள்ளியின் கட்டடத்திலிருந்து நிர்வாகத்தின் கட்டமைப்பு வரை ஒவ்வொன்றையும் பழுது பார்க்க வேண்டியதிருந்தது. டூடூ மக்களின் வாழ்விடமான மூங்கில் வீடுகள் அவ்வளவு அழகாக இருந்தன. வாழ்வதற்கான வீடு தனி. சமையலறை வெளியே தனியாக அமைக்கப்பட்டிருந்தது. கால்நடைகளுக்குத் தனி இடம். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அமர்ந்து பேசினார். அவர்களது மொழி புரியவில்லை என்றாலும் புன்னகையால் தொடர்பு கொண்டார். உங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்துவிடுமா என்ன! தொடர்ந்து டூடூ மக்களோடு பழகினார். எழுத்து வடிவமற்ற அவர்களது மொழியை, பாடல்கள் வழியே கற்றுக் கொண்டார். அவர்களது திருவிழாக்களில் ஆடியும் பாடியும் மகிழ்ந்தார். நானும் உங்களில் ஒருத்திதான் என்று அவர்களது உணர்வோடு கலந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அங்கேயே வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்துத் தங்கினார். மிஷாவுக்கும் ஒரு மகன் இருந்தான். தாயின் அரவணைப்பை வேண்டும் பிள்ளைதான். இருந்தாலும் டூடூ இன குழந்தைகளுக்காக மிஷா அவர்களுடனேயே தங்கிப் பணி புரியத் தொடங்கினார். இந்தப் பிள்ளைகளை நான் பார்த்துக் கொண்டால், கடவுள் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்வார்!

அங்கே படிக்கும் 99% மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே. அதில் அறுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் டூடூ இனத்தைச் சேர்ந்தவர்கள். தன் விடாமுயற்சியால், அரசுடன் தொடர்ந்து போராடி மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்றைக் கட்டிக் கொடுத்தார் மிஷா. மழைக்காலங்களில் மாணவிகள் தங்கள் மலைக்கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வர இயலாமல் அவதிப்படும் சூழல் மாறியது. விடுதியில் தங்கி விருப்பத்துடன் படிக்கத் தொடங்கினர். வகுப்பறைகள் சீராகின. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்களும் பிறந்தன. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே சுத்தமான கழிவறை வசதிகள். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. தேர்ச்சி விகிதமும் படிப்படியாக உயரத் தொடங்கியது.  விளையாடுவதற்கு மைதானம். பத்தாயிரம் நூல்களுடன் ஒளிரும் நூலகம். சீருடை தொடங்கி சைக்கிள் வரை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தார். மதிய உணவு உண்டு. இசையும் பாடமாக உண்டு. கலைகளில் மிளிரலாம். கற்பனைத் திறனை மேம்படுத்தலாம். விளையாட்டோடு சேர்ந்த படிப்பு. கற்றல் இனிது! இனிது!

ஆரம்பத்தில் பிள்ளைகளைப் படிக்க அனுப்ப மாட்டோம் என்று அடம்பிடித்த பழங்குடிப் பெற்றோரும், பள்ளி உயிர்த்தெழுந்ததைக் கண்டு தாங்களே குழந்தைகளை அழைத்து வந்து மிஷாவிடம் ஒப்படைத்தனர். ‘எங்க பிள்ளைங்களை எப்படியாவது ஆளாக்கி விட்டிருங்க!’ – கைகூப்பி நின்றனர். இதனால் அங்கே குழந்தைத் திருமணங்கள் குறைந்து போயின. ‘பிள்ளைங்க படிக்கட்டுமே!’ என்று பழங்குடிகளின் மனத்தில் மாற்றம் உண்டாக முக்கியமான காரணம் மிஷாவின் தொடர் முயற்சிகள்தாம்.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் மனத்திலும் மிஷா மாபெரும் மாற்றத்தை உண்டு செய்தார். ‘நல்ல கட்டமைப்பு, நவீன வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இதெல்லாம் ஒரு பள்ளியில் இருந்தால் மட்டும் அது நல்ல பள்ளி அல்ல. மாணவர்களைப் புரிந்து கொண்டு, அவர்களை உயரத்துக்கு அழைத்துச் செல்ல உயிர்ப்புடன் இயங்கும் நல்லாசிரியர்களும் இருந்தால் மட்டுமே அது சிறப்பான பள்ளி. ஆசிரியர்களின் பணி என்பது கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. கல்வியால், ஒரு சமூகம் மேலே ஏறி வர கைபிடித்துத் தூக்கிவிடுவதும்தான்!’

டூடூ மொழி பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா. அதற்கான முயற்சிகளையும் மிஷா எடுத்தார். அவர்களது கலாசாரத்தைப் பதிவு செய்யும் பணிகளிலும் இறங்கினார். ‘இங்கே இப்படிப்பட்ட அருமையான மனிதர்கள், அழகாக வாழ்கிறார்கள்’ என்று உலகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தவும் செய்தார். டூடூபரா ஊர் ஒரு சுற்றுலா தளமாகவும் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது.

2020-ம் ஆண்டில் மத்திய அரசு தலைமை ஆசிரியை மிஷா கோஷலுக்கு நல்லாசிரியர் விருது அறிவித்தது. அதில் மிஷா அடைந்த மகிழ்ச்சியைவிட, அவரது மாணவர்களும், டூடூ மக்களும் அடைந்த மகிழ்ச்சிதான் அதிகம். காரணம், பத்தாண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்த டூடூ மாணவர்கள் இப்போது அரசுப்பணிகளில் இருக்கின்றனர். வேறு வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்கின்றனர். அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது. இந்த உலகத்தோடு இயைந்து வாழ கல்வியால் வழி கிடைத்திருக்கிறது. 

டூடூ பழங்குடிகளின் முதன்மையான தெய்வம் பூடான் மலைகளில் வாழும் இஸ்பா. தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் கடவுள் இஸ்பாவின் கோபம் என்று நினைத்து மனமுருகி வேண்டுவார்கள். அவர்களது காவல் தெய்வத்தின் பெயர் செய்மா. எல்லா இன்னல்களிலிருந்து தங்களைக் காப்பது இயற்கை தெய்வமான செய்மாதான் என்பது அவர்களது நம்பிக்கை. அவர்களது வழிபாட்டில் மூன்றாவதாக ஓர் உயிருள்ள தெய்வமும் இணைந்திருக்கிறது. தலைமையாசிரியை மிஷா கோஷல்!