மாண்புமிகு ஆசிரியர்கள் -6

முகில்

பள்ளியின் உணவு இடைவேளை. லேசான கரகரப்புக்குப் பின் பள்ளி வளாகத்திலிருக்கும் ஒலிப்பெருக்கிகளில் வானொலி சேவை ஒலிக்கிறது. மாணவி ஒருத்தி தங்கு தடையின்றி பேசுகிறாள். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவரது அழுத்தமான கருத்துகள் பள்ளி வளாகமெங்கும் நிறைந்து ஒலிக்கிறது. அவள் பேசி முடித்ததும் மாணவர்களின் கைத்தட்டல் ஓசை. பள்ளித் தலைமை ஆசிரியை அறையில் அமர்ந்திருக்கும் அர்ச்சனா குருங்கின் முகத்தில் புன்னகை படருகிறது.

அது அந்தப் பள்ளிக்காக அர்ச்சனா ஆரம்பித்திருக்கும் வானொலி சேவை. முழுக்க முழுக்க மாணவ, மாணவியரால் நடத்தப்படுவது. வானொலிக்கான நிகழ்ச்சி தயாரிப்பது தொடங்கி அதில் பேசுவதற்கான பயிற்சி கொடுப்பது வரை எல்லாம் அவரது ஏற்பாடுதான். சிக்கிம் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த ஜோர்தங் நகரத்தின் அரசு மேல்நிலைப்பள்ளி இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட முன் மாதிரிப் பள்ளி. அந்த உயரத்தை ஜோர்தங் அரசுப் பள்ளி அடைவதற்கு முக்கியக் காரணம் தலைமை ஆசிரியை அர்ச்சனா குருங்.

உத்தரகாண்டின் டெஹ்ராடூனில் பிறந்தவர் அர்ச்சனா. மிகச்சிறந்த மாணவியாக பள்ளிப் படிப்பை முடித்தார். ஆசிரியையாக வேண்டுமென்பது இலக்கு. அதை நோக்கியே இயங்கினார். ஸொம்பாரியா என்ற சிக்கிம் மலைக்கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக அவரது கல்விப்பணி தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே மாணவ, மாணவியரோடு நட்புடன் பேசிப் பழகி, கல்வியை அவர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கற்றுக் கொடுக்கும் பாணியையே அர்ச்சனா கையில் எடுத்தார். பள்ளியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே எல்லோரும் விரும்பும் ஆசிரியையாக மிளிர்ந்தார்.

அடுத்து சிக்கிமின் தலைநகரமான கேங்டாக்கில் சங்க் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். சற்றே பெரிய பள்ளி. கூடுதல் மாணவர்களை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பையும் திறம்படக் கையாண்டார். அங்கும் தன் தனித்துவக் கற்பித்தலால் மாணவர்களின் மனத்தில் இடம்பிடித்தார். மீண்டுமொரு மாறுதல். அதே கேங்டாக்கில் சர் டாஸி நம்க்யால் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். செல்லுமிடமெல்லாம் அன்பை விதைத்தார். ஒரு நல்லாசிரியையாகத் திறம்பட நிரூபித்த அர்ச்சனாவுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. தெற்கு சிக்கிமில் அமைந்த நாம்ச்சி நகரத்தில் அமைந்த அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் (2010).

நாம்ச்சி, சுற்றுலா நகரம். இருந்தாலும் பசுமையைத் தொலைத்துக் கொண்டிருந்தது. குப்பைகளின் ஆக்கிரமிப்பு. பள்ளியைச் சுற்றி பசுமையை மீட்க வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அர்ச்சனா மாணவர்களுடன் கைகோத்தார். விதைத்தவை முளைக்கும்போது எதையோ பெரிதாகச் சாதித்த பூரிப்பு மாணவர்களின் முகங்களில்! களைகளை எடுத்து பசுமையைப் பெருக்குவதில் கவனம் குவித்தார்கள். கூடுதலாக கலைகளிலும் கவனம் குவித்தார்கள். இப்படிக் கவனம் குவிக்க எடுத்த பயிற்சி, அவர்கள் படிக்கும்போதும் கவனச்சிதறலில் இருந்து மீட்டது. 2014-ம் ஆண்டில் மாநில அளவில் பசுமைப்பள்ளியாக முதல்வரின் சுழற்கோப்பையை நாம்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது.

‘குழந்தைத் திருமணங்களே பள்ளி இடைநிற்றலுக்குப் பெரிதும் காரணம். குழந்தைத் திருமணங்களே பால்வினை நோய்கள் பெருகவும் முக்கியமான காரணம். இந்த விழிப்புணர்வு பெற்றோருக்கு உண்டாக வேண்டும். சமூகத்துக்கு உண்டாக வேண்டும். ஒரு மாணவி படிப்பைப் பாதியிலேயே கைவிடுவதனால்  அதுவரை அந்த மாணவிக்காக அரசு செலவு செய்த தொகையும் வீணாகிறது என்பதை எல்லோரும் உணர வேண்டும்’ – அர்ச்சனாவின் மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற விவாதங்களிலும் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார்கள். ஹோட்டல் நிர்வாகத் திறமை குறித்து மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார்கள். ஐந்தாம் வகுப்பு முடித்த சில மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவும் வழிசெய்தார் அர்ச்சனா. மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்றார்.

அடுத்து ஜோர்தங் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார்.

‘புத்தகங்களில் உள்ளதைச் சொல்லிக் கொடுப்பது மட்டும் ஒரு பள்ளியின், ஓர் ஆசிரியரின் வேலை அல்ல. புத்தகங்களுக்கு வெளியேயான இந்த சமூகத்தை நம்பிக்கையுடன், நேர்மையுடன் தைரியமாக எதிர்கொள்ளும் திறன்வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதே நம் பணி.’

இந்தக் கருத்தை முதலில் தன் பள்ளியின் சக ஆசிரியர்களுக்குப் புரிய வைத்தார். ‘என்னை உங்கள் தலைமை ஆசிரியையாக நினைக்காதீர்கள், நாம் எல்லோரும் ஒன்றாகப் பணியாற்றும் நண்பர்கள்’ என்று ஒவ்வொருவரிடமும் அணுக்கத்தை ஏற்படுத்தினார்.

ஸும்பா நடனம். வாரத்தில் சில நாள்கள் பயிற்சியாளர்கள் வந்து கற்றுக் கொடுத்தார்கள். மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்ல. ஆசிரியர்களுக்கும். உற்சாகம் நிறைந்த அந்த நடனம், எல்லோருக்கும் மன அழுத்தத்தைக் குறைத்தது. நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆசிரியருக்கும் மாணவருக்குமான நட்புறவை வளர்த்தது. பிணைப்பு அதிகமானதால் செய்யும் எதிலும் பலனும் அதிகரித்தது.

அடுத்து பள்ளிக்கான வானொலி தொடங்கினார். மாணவர்களின் பேச்சுத் திறன் அதிகரித்தது. தயக்கங்கள் உடைந்தன. புதிய விஷயம் ஒன்றைச் செய்கிறோம் என்பதில் அவர்களுக்குக் கூடுதல் சந்தோஷம். போதைப் பழக்கத்தின் தீமைகள் முதல் சமூக அக்கறையின் அவசியம் வரை பல விஷயங்களை மாணவர்களைக் கொண்டே போதிக்கச் செய்ததில் அர்ச்சனா பெருவெற்றி பெற்றார்.

அடுத்து, பள்ளிக்கென ஓர் இசைக்குழுவை அமைத்தார். டிரம்பெட்டும் டிரம்மும் முழங்க அவர்களின் நல்லிசை சிக்கிமின் மலைகளில் எதிரொலித்தது. அவர்களுக்கான தரமான வாத்தியங்களை வாங்கவும், அந்தக் குழுவுக்கான சீருடைகளை வாங்கவும் அர்ச்சனாவே களத்தில் இறங்கி நிதி திரட்டினார். நல்லதொரு பயிற்சியாளரைக் கொண்டு இசைக்குழுவைப் பட்டை தீட்டினார். ஜோர்தங் பள்ளியின் அடையாளமாகவே மாணவ இசைக்குழு மாறிப்போனது.  தேசிய அளவில் பள்ளி இசைக்குழுக்களுக்கு இடையே நடந்த போட்டியில் ஜோர்தங் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ இசைக்குழுவினர் முதல் பரிசைத் தட்டி வந்து வெற்றி முழக்கமிட்டார்கள். தேசிய அளவில் பள்ளிக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தது என்பது பள்ளியின் எளிய மாணவர்களுக்கும் நன்னம்பிக்கையை விதைத்தது. ‘நாம் நல்லதொரு பள்ளியில் படிக்கிறோம். நம்மாலும் பெரிதாகச் சாதிக்க முடியும்!’

2016-ம் ஆண்டில் பள்ளியில் மாணவிகளுக்கான என்சிசி யூனிட்டை தலைமை ஆசிரியை அர்ச்சனா உண்டாக்கினார். மாணவர்களுக்கான என்சிசி யூனிட்டுக்கு இணையாக கடுமையான பயிற்சிகள் மாணவிகளுக்கும் வழங்கப்பட்டன. ஓரிரு ஆண்டுகளிலேயே ஜோர்தங் அரசுப்பள்ளி என்சிசி மாணவிகள் டெல்லி குடியரசு தின விழாவில் பங்குபெறும் அளவுக்கு முன்னேறி பீடுநடை போட்டார்கள்.

ஒன்றாம் வகுப்புக்கு அதிக அளவில் மாணவிகளைச் சேர்த்ததில் அர்ச்சனாவுக்கு பெரும் பங்கு உண்டு. ‘ஓர் ஆசிரியர் –- ஓர் வகுப்பறை’ திட்டத்தையும் அங்கே செயல்படுத்தினார். ஒன்றாம் வகுப்பில் ஒரு பேட்ச் மாணவர்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர், ஐந்தாம் வகுப்பு வரை அவர்களுடனேயே பயணம் செய்ய வேண்டும். இது ஆசிரியர் – மாணவர் உறவை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு குழந்தையின் நிறை குறைகளை ஆசிரியர் புரிந்துகொண்டு அவர்களது கற்றல் திறனை அதிகரிக்கப்பதற்கும் உதவக்கூடிய நல்ல திட்டம். அந்தப் பள்ளியில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.

நீர் மேலாண்மை, குப்பைகள் மறுசுழற்சி, காளான் வளர்ப்பு, காய்கறித் தோட்டம் வளர்ப்பு, இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, பசுமைப் பாதுகாப்பு என்று ஜோர்தங் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுப்பது, ஒரு மாணவி பள்ளி வராமல் போனால் என்ன ஏதேன்று விசாரித்து மீண்டும் அவளைப் பள்ளிக்கு மீட்டுக் கொண்டு வருவது, ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையைக் கண்டறிந்து அதில் அவர்கள் பயிற்சி பெற ஊக்கமளிப்பது, அதன் மூலம் அவர்களது கற்றல் திறனையும் மேம்படுத்துவது, பள்ளியின் முன்னேத்திற்காக சக ஆசிரியர்களுடன் நட்புக்கூட்டணி அமைத்து அர்ப்பணிப்புடன் உழைப்பது என்று தலைமை ஆசிரியை அர்ச்சனாவின் பணிகள் அங்கே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நல்விளைவாக, 2020-ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதை தலைமை ஆசிரியை அர்ச்சனா குருங்குக்கு மத்திய அரசு அறிவித்தது. லோமெஸ் தங்கெல் என்ற சிக்கிம் ஆசிரியருக்கும் அதே ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. லோமெஸ் தங்கெல், கேங்டாக்கின் சர் டாஸி நம்க்யால் மேல்நிலைப்பள்ளியில் அர்ச்சனாவிடம் கல்வி பயின்ற மாணவர்.

‘எனக்கு விருது கிடைத்ததைவிட, என் மாணவர் ஒருவர் என்னுடன் சேர்ந்து தேசிய நல்லாசிரியர் வாங்குவது பெருமையாக இருக்கிறது. மனநிறைவாக இருக்கிறது’ என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் அர்ச்சனா. லோமெஸும் தன் ஆசிரியைக்கு நெகிழ்வுடன் நன்றி சொன்னார்.

கிட்டத்தட்ட குருவின் வழியில்தான் சிஷ்யரான லோமெஸும் இயங்கி வருகிறார். அவர் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது சிக்கிமின் மக்கா என்ற சிறிய ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளியில். லோமெஸ் கணித ஆசிரியர். ஒவ்வொரு முறை வகுப்புக்குள் நுழையும்போதும் மாணவர்களின் கண்களில் பாடம் மீதான பயத்தை உணர்ந்தார் லோமெஸ். புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு கதைகள் பேச ஆரம்பித்தார். அவர்களைக் கதைகள் சொல்ல வைத்தார். உரையாடினார். சிரித்து மகிழ்ந்தார்கள். மாணவர்களுக்கு நெருக்கமான ஆசிரியரான பிறகு, கணிதத்தை விளையாட்டாகக் கற்பித்தார். எண்கள் இனித்தன. எக்ஸும் ஒய்யும், சைன் காஸ் டேன் டீட்டாக்களும் இன்னபிறவும் நண்பர்களாயின. ஃபார்முலாக்கள், ஃபார்முலா ஒன் பந்தயக்கார் வேகத்தில் காகிதத்தில் வந்து விழுந்தன.

2015-ம் ஆண்டில் லோமெஸ், Project Hariyo Makha என்ற திட்டத்தை ஆரம்பித்தார். அதன் உன்னத நோக்கம், சிக்கிமின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது. பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப்பது. அதை மறுசுழற்சி முறையில் உபயோகமான பொருளாக மாற்றுவது. அப்படி லோமெஸ், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மாணவர்களின் புத்தகங்களுக்கான கவர் தயாரிக்கும் முறையைக் கொண்டு வந்தார். அதை வெளியே விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். தவிர, மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும்விதமாக லோமெஸும் சக ஆசிரியர்களும் தங்கள் வருமானத்திலிருந்து உதவி செய்து வருகின்றனர். மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு வந்தால் ‘Golden Rupee’ திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய் வழங்கப்படும். அது எவ்வளவு அளவு இருந்தாலும் சரி. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுவதுடன் அவை மறுசுழற்சிக்கும் தகுந்த முறையில் அனுப்பப்படுகின்றன.

சூரிய சக்தியின் மூலமும் காற்றின் மூலமும் நமக்குத் தேவைப்படும் மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்வது எப்படி என்று மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். தன் குரு அர்ச்சனாவில் வழியில் நல்லாசிரியர் லோமெஸின் கல்விப்பணிகளும் சமூகப்பணிகளும் தொடர்கின்றன. இருவருமே சிக்கிமின் கல்விச் சேவகர்களாக மிளிர்கிறார்கள்.

‘ஓர் ஆசிரியரால் ஒரே இரவில் ஒரு மாணவனை மிகச்சிறந்தவனாக மாற்றவது இயலாது. அவனுக்குள் இருக்கும் ஒளியைத் தூண்டி விடுவதே ஆசிரியரின் முதல் பணி. அவனது தனித்திறமையை உணர வைப்பது அவசியமான பணி. ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் எல்லோராலும் செய்ய இயன்றதைவிட சற்றே கூடுதலாகச் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவ்வளவு தான்!’