வாழ்த்துக் கட்டுரை
மதுரை.ஆர்.கணேசன்

உலக மகளிர் தினம்’’ மார்ச் 8 ஆம் தேதி ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. மாறாக வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பெண்களையும் பெண் குழந்தைகளையும் கொண்டாட வேண்டும், கொண்டாடுவோம்!

குழந்தைகளுக்கு சொல்லித் தந்த காலம் கடந்து குழந்தைகளாகப் பார்த்து கற்றுக் கொள்ளும் காலமும்  மலர்ந்திருக்கிறது. 

குழந்தைகளிடம் இருக்கும் அபாரத் திறமைகள் கண்டு ஊக்குவிக்கும் பெற்றோர்கள் தான் குழந்தைகளின் சாதனைகளுக்கும் முதல் ஆசான்களாக விளங்குகிறார்கள்.

அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒருவரான விஷாலினி, தன் பெற்றோர் தந்த ஊக்கத்தால் மிகக்குறைந்த வயதில் ‘தானியங்கி வசதியுடன் கூடிய தண்ணீரில் மிதக்கும் பலூன் வீடு’ ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். 

இந்த ஐடியாவுக்காக ‘ஒரு தானியங்கி பல செயல்பாடு கொண்ட வாழ்க்கை மீட்பு வீடு’ என்ற தலைப்பில் கண்டுபிடிப்பு காப்புரிமை கோரி 2020 செப்டம்பர் 23-ஆம் தேதி இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதைப் பரிசீலித்த மத்திய அரசு இவருக்கு 2021 மே மாதம் 10 ஆம் தேதி ‘‘இளைய காப்புரிமை” வழங்கியிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அரசின் ‘பேட்டன்ட் ரைட்” பெற்ற முதல் குழந்தை விஷாலினி மற்றும் உலகிலேயே இரண்டாவது குழந்தை என்ற பெருமையும், அத்துடன் மத்திய அரசின் ‘‘பால புரஸ்கார் விருது’’ பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் புதுமையான கண்டுபிடிப்புக்கள், கல்வித்திறன், விளையாட்டு, கலை, கலாச்சாரம், பொதுச் சேவை மற்றும் வீரதீர மிக்க துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பிரதம மந்திரி ‘‘பால புரஸ்கார் விருது’’ தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு 2021- 2022 ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள 32 குழந்தைகளுக்கு சான்றிதழ் டிஜிட்டல் முறையில் சமீபத்தில் வழங்கப்பட்டன.

தமிழகத்திலிருந்து விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள் ஏழு வயதுடைய விஷாலினிக்கும் இந்த விருது கிடைத்திருக்கிறது.

இந்த வகையான வீடு கடல் பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் மீனவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இவரது கண்டுபிடிப்புக்கு  ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இளைய காப்புரிமை (வைத்திருப்பவர்) பெற்றிருப்பவர் என்பதற்காக அங்கீகாரம் அளித்து விருது வழங்கி கௌர வித்திருக்கிறது.

‘சிறு வயதி லேயே தன் திறமை மூலம் வெள்ளத்தால் உயிர் மற்றும் உடமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த விஷாலினி ‘‘ராஷ்டிரிய பால புரஸ்கார்’’ விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அச்சிறுமியின் தொலை நோக்கு கண்டுப்பிடிப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

என்.சி.விஷாலினி ஐதராபாத்தில் உள்ள டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸி cbsc ஸ்கூலில் தற்போது இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் மழலை தனம் குறையாமல் நம்மோடு பேசினார்.

‘ஒரு நாளைக்கு டி.வி.யில் நியூஸ்ல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்ப நான் யோசிச்சேன், பலபேர் அவுங்க திங்க்ஸ் இழந்துடுறாங்கா, சிலபேர் இறந்துடுறாங்கா அவுங்ககளுக்காக ‘‘தானியங்கி வசதியுடன் கூடிய தண்ணீரில் மிதக்கும் பலூன் வீடு’’ கண்டு பிடிக்கலாமுன்னு நினைச்சு கண்டுபிடிச்சேன்.

அதுக்குள்ள சிறிய ஆக்சிஜன் சிலிண்டர், உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ்.வசதி, அவசர அலாரம், மின்சார சாதனங்கள், இயக்குவதற்கு மின்கலன், சூரிய ஒளிதகடுகள், குறிப்பாக தண்ணீர் பட்டாலே தானாக விரிந்து கொள்ளும் தன்மையுடன் கூடிய போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது.

இந்த வீட்டுக்குள் (நாலைந்து பேர் தங்கும் வசதி உண்டு) போய் உட்காரும் போது போலீஸ் மற்றும் ரெஸ்க்யூ டீம்க்கு தகவல் தெரிவிக்கும் அவுங்க வந்து நம்மல காப்பாத்திடுவாங்க இதற்காகத் தான் ‘‘பேட்டன்ட் ரைட்’’ கிடைச்சது.

அப்புறம் நான் பிரைம் மினிஸ்டர் கிட்ட இருந்து அவார்ட் வாங்கி இருக்கேன். அதற்காக பிரைம் மினிஸ்டர்க்கு நன்றி சொல்லிக்கிறேன்.

எங்க ஸ்கூல்ல எனக்கு ‘அவார்ட்’ கொடுத்தாங்க. அப்புறம் பிரின்ஸ்பால் எனக்கு “எக்ஸலன்ட்’’ சொன்னாங்க ‘‘இப்படியே கண்டினுவ் பண்ணுனு கீப்பிட்டப்’’ ‘‘உன்னை நினைச்சு பெருமைப்படுகிறேன் என்று சொன்னாங்க எனக்கு ஹாப்பியா இருந்தது’’.

பெற்றோர் நரேஷ்குமார் சித்ரகலா.,

‘‘விஷாலினி குழந்தை பருவம் முதலே கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். அவளுக்கு பதில் தேடி கண்டு பிடித்து சொல்வதற்கு எனக்கும் ஆர்வமாக இருக்கும். 

ஒருமுறை மழை வெள்ளம் ஏற்பட்டால் காற்று நிரப்பக் கூடிய நீச்சல் தொட்டியில் அமர்ந்து கொண்டு பேரிடரிலிருந்து காத்துக் கொள்ளலாமே என்று கேட்டாள்? ‘‘அது விழுந்து விடும்’’ என்றேன்.

அவள் ‘‘அது விழுந்து விடாத வகையில், அதில் அமர்ந்து கொள்பவர்களுக்கும் தேவையானவை இருக்கும் வகையில் இருக்க வேண்டும்’’ என்றாள்.

அவளது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அதில் இருக்கும் குறைகளை களைந்து மேலும் பல அம்சங்களை சேர்த்து உருவானது தான் இந்த தானியங்கி உயிர்காக்கும் வீடு.

விஷாலினிக்கு இந்த மாதிரி ஐடியா தோன்றியவுடன் காப்புரிமைக்காக பதிவு செய்தோம். அப்பொழுது அவளுக்கு ஆறு வயசு எட்டு மாதம் இருக்கும். அதற்காக இளம் காப்புரிமை உரிமையாளர் என இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்தார்.

அதற்கு பிறகு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுக்கும் விண்ணப்பித்தோம். விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்திப் பேசினார் மற்றும் மத்திய மீன் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ரவி போன்ற ஆளுமைகள் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

என் மகளைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். விஷாலினியின் இன்னும் இரண்டு ஐடியாக்கள் காப்புரிமைக்காக அனுப்பி உள்ளோம் அதற்கும் காப்புரிமை கிடைக்கும் என நம்புகிறோம்.

பெற்றோர்கள் முதலில் குழந்தைகள் என்ன பேச நினைக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அதிக பிரசங்கி என்று வாயடக்கக் கூடாது அவர்களது கருத்துக்கு மதிப்பு அளித்து ஆராய வேண்டும். அதில் உள்ள நல்லது கெட்டது சொல்லி புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்களது சிந்தனை சிறகுகள் விரிந்து பறப்பதற்கு உதவி புரியுங்கள். அப்படித்தான் என் மகள் விஷாலினியின் சிந்தனைக்கு உயிர் கொடுத்தேன், அதனால் விருது, பரிசு பாராட்டுக்கள் குவிகிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’.

மிக இளம் வயதில் அபாரச் சாதனை புரிந்துள்ள விஷாலினி, இன்னும் பல சாதனைகள் புரிய ‘ஆளுமைச்சிற்பி’ வாழ்த்துகின்றது.