உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-11
சமூகப் பற்றாளன் ஞானசித்தன்

அச்சம் அல்லது பயம்  என்கிற சொல்லானது, செயலானது, எண்ணமானது வாழ்வில் வெற்றி பெற்ற அனைத்து சாதனையாளர்களுக்கும் பிடிக்காத விரும்பாத ஒவ்வாத  சொல்லாகும்…

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வாழ்வில் வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அச்சம் அல்லது பயம் என்பது எதிரி போன்றதாகும்.

அதுவே அதற்கு நேர் மாறாக அச்சம் அல்லது  பயம் என்ற சொல்லானது, செயலானது,
எண்ணமானது வாழ்வில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தவர்களுக்கு கூடவே இருக்கும் நண்பன் போன்றதாகும்.

வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த, வரலாற்றில் நிலைத்த அனைத்து வெற்றியாளர்களும் அச்சத்தை தவிர்த்து அச்சத்தை விடுத்து அச்சத்தை மனதில் இருந்து துடைத்து தான் நினைத்த செயலை நினைத்தவாறு முடித்தவர்களாக இருப்பார்கள்.
அதுவே வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள் அச்சத்தை தனது வாழ்நாள் முழுவதும் துணையாக  கொண்டு வாழ்ந்தவர்களாக இருப்பார்கள்.

அச்சம் அல்லது பயம் ஏற்பட முக்கிய காரணம் என்ன?

பயத்தின் முக்கியக் காரணி – அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே ஆகும். சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் வாழ்க்கை சம்பவங்களை நிகழ்வுகளை நோக்கி மட்டுமே இருக்கின்றது..

ஒரு மனிதனுக்கு ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று நாம் பொதுவாக சொன்னாலும் அந்த அச்சம் அல்லது பயம் என்பது கவலை, பதற்றம், மன அழுத்தம், படபடப்பு, நடுக்கம், மன உறுதி இன்மை, மனக் கோளாறு, தவிப்பு, செயல்களை தள்ளி வைத்தல், செயலை புறக்கணித்தல், செயல்களை பாதியிலேயே விட்டு விடுதல்  போன்ற மேற்காணும்  வெவ்வேறு வகைகளாக ஏதேனும் ஒரு வகையில்  வெளிப்படுகிறது. எனவே அச்சத்தை துணையாகக் கொண்ட மனிதர்கள் தனது வாழ்வில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நபர்களாக வெற்றி பெறாதவர்களாக வாழ்வில் மாறி விடுகிறார்கள்..

நீங்கள் உங்கள் கண் முன் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை வெற்றியாளர்கள் மற்றும் வெற்றி பெறாதவர்கள் என்று வகைப்படுத்தி காணும் பொழுது வெற்றியாளர்கள் அச்சத்தை விடுத்து உச்சத்தை தொட்டவர்களாகவும் தோல்வியாளர்கள் அச்சத்தை துணையாகக் கொண்டு எதிலுமே வெற்றி பெறாதவர்களாகவும் இருப்பார்கள் என்பது நடைமுறை உண்மையாகும்.

மேலும் பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும்,
அங்கே பயம் என்பது எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே ஆகும்

அச்சத்தால் ஏற்படும் தீமைகள்

அச்சம் அல்லது பயம் உருவாகும் அந்த நொடி…
பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?

ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும்.

ஒரு மனிதனின் மனதிற்குள் பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. செயல் முடக்கம் வருகின்ற பொழுது வாழ்க்கையானது தோல்வியில் மட்டுமே முடிகிறது..

இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.

ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று ஒரு மனிதனின் மனதிற்குள்  கேட்டுக்கொள்ளும் கேள்வியால் நன்றாக செய்யக்கூடிய வெற்றியில் முடிய கூடிய காரியங்கள் கூட நன்றாக இல்லாமல் தோல்வியில் முடிவதாக மட்டுமே இருக்கும்.

எதற்கெடுத்தாலும் அச்சப்படும் மனிதர்கள் வாழ்வில் தான் நினைத்த காரியத்தை முடிக்காமல் பாதியில் விட்டு விடுவதால் அவர்களது வாழ்க்கையானது இருட்டில் இருப்பது போல அமைந்து விடுகிறது ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்று அவர்கள் சராசரி ஆகவே வாழ்ந்து மறைந்து விடுகிறார்கள்.

அச்சப்படும் மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது அதுவே அச்சத்தை விடுத்து உச்சத்தைத் தொட்ட மனிதனின் வாழ்க்கையானது இந்த உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு ஆச்சரியக் குறியாக மாறி விடுகிறது என்பது நடைமுறை உண்மையாகும்.

அச்சப்படும் மனிதனின் வாழ்வில் தோல்வி, வேதனை, விரக்தி, கஷ்டம், மனக் கஷ்டம் என அனைத்துமே தோன்றுவதால் அவர்களின் வாழ்க்கையும் வளர்ச்சியும்  வீழ்ச்சியை நோக்கி மட்டுமே செல்கிறது…

அதுவே அச்சப்படாமல் வாழும் மனிதர்கள் பதவி, பணம், பட்டம், புகழ், செல்வாக்கு என அனைத்து விதமான தளங்களிலும் வெற்றிவாகை சூடுகிறார்கள்.
அதனால், அவர்களது வாழ்க்கையானது வரலாற்றில் பாடமாக ஒரு படிப்பினையாக இந்த உலகத்திற்கு அமைகிறது.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் சராசரி மனிதர்கள் அனைவருக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் அனைவருமே அச்சப்படுவதை தனது தொழிலாக கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு இருப்பதால் அவர்கள் வாழ்க்கை இந்த சமூகத்திற்கு கடுகளவும் கூட பயன் இல்லாமல் போய்விடுகிறது.

ஆடு மாடு போல உண்டு உறங்கி, ஏதோ பிறந்தோம், இருந்தோம் இறந்தோம் என்று
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு  வேடிக்கை மனிதனாகவே தனது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையை வரலாறு புறக்கணிக்கிறது.

சராசரி மனிதனாக வாழாமல் சாதனை மனிதராக இருக்கும் மனிதர்கள் அச்சத்தை உடைத்து, அச்சத்தை விடுத்து உச்சத்தைத் தொடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாறு எடுத்துக் கொள்ளப்படுகிறது, இந்த சமூகமானது சாதனை மனிதர்களின் வாழ்க்கையை போற்றிப் புகழ்கிறது..

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் என்று போற்றப்படும் எம்ஜிஆர் அவர்கள் தனது காரில் அடிக்கடி கேட்கும் பாடல், அவரது காரில் அடிக்கடி ஒலிக்கும் பாடல், அச்சம் என்பது மடமையடா என்ற பாடலாகும்.

மேலும் ‘‘எனக்கு மிகவும் பிடித்த பாடல் அச்சம் என்பது மடமையடா’’ என்று  அவர் அளித்த  பல்வேறு பேட்டிகளில் அவரே குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் வீரம் செறிந்த வரிகளில் நமக்கு அச்சம் என்பது அறவே இருக்கக்கூடாது என்று பின்வருமாறு  கூறுகிறார்…

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

எனவே இந்த கட்டுரையை படிக்கும் நீங்களும் உங்கள்  வாழ்வில் அச்சத்தை விடுத்து  உச்சத்தை தொட வேண்டுகிறேன்…