மாண்புமிகு ஆசிரியர்கள் -2    

முகில்

‘எழுத்தறிவு பெற்று ஆரம்பப் பள்ளியை விட்டுச் செல்வதும், வாழ்நாள் முழுவதும் எழுத்தறிவோடு திகழ்வதுமே தொடக்கக் கல்வியின் நோக்கமாகும். ஆனால், புள்ளிவிவரங்களின்படி ஆரம்பப் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் 100 குழந்தைகளில் 18 குழந்தைகள் மட்டுமே நான்காம் வகுப்பை எட்டுகின்றனர். மீதமுள்ள 82 பேர் எழுத்தறிவின்றித் தவிக்கின்றனர்’ என்றார் அம்பேத்கர்.

இது அவர் வாழ்ந்த காலத்தின் புள்ளிவிவரம். ஆனால், தேசம் ஐம்பத்து நான்கு சுதந்திர தினங்களைக் கடந்த பிறகும் தனது பகுதியில் வாழும் பழங்குடிக் குழந்தைகளின் நிலையானது அம்பேத்கர் அன்று சொன்னதைவிட மோசமாக இருக்கிறது என்று உண்மையாகவே கவலைப்பட்டார் அந்த இளைஞர். வெறுமனே கவலைப்பட்டு உச் கொட்டிக் கொண்டிருப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று உணர்ந்து எதையாவது ஆரம்பிப்போம் என்று களத்தில் இறங்கினார். இன்றைக்கு 11 கிராமங்கள் அந்த இளைஞரால் ஒளி பெற்றிருக்கின்றன. அந்த அறிவொளியை ஏற்றியவர் பெயர் உத்தம் டெரோன்.

அஸ்ஸாமின் கௌகாத்திக்குச் சற்று தொலைவில் வனப்பகுதியில் அமைந்த பமோஹி என்ற கிராமத்தில், கர்பி என்ற பழங்குடி இனத்தில் பிறந்தவர் உத்தம் டெரோன். அவரது தந்தை ரயில்வே பணியாளர். சிறுவயதிலேயே உத்தம் சக பழங்குடிச் சிறுவர்களுடன் சேர்ந்து, காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அருகிலுள்ள ஊர்ச்சந்தையில் அதை விற்று வீட்டுக்குக் காசு கொடுப்பார். மற்ற நேரங்களில் விளையாட்டு. பெரும்பாலும் கால்பந்து. தொடக்கப் பள்ளி ஒன்றில் உத்தம் படித்துக் கொண்டிருந்தார். படிப்பின் மீது பெரிதாக ஆர்வம் இல்லை. உத்தமின் தாய் படித்தவர் இல்லை. இருந்தாலும் தனது மகன் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று வர வேண்டுமென்பதில் கண்டிப்புடன் நடந்து கொண்டார். ஆகவே, உத்தம் அறியாமலேயே அவருக்குள் கல்வி இயல்பாக இறங்கிக் கொண்டிருந்தது. அவருடன் கல்வி படித்த பலரும் பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருந்தார்கள். ஆனால், உத்தம் மட்டும் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, அருகிலிருக்கும் ஒரு பெரிய கல்லூரியில் பட்டப்படிப்புக்காக சேர்ந்தார்.

டிகிரி வாங்கிய பிறகு வருமானத்துக்காக ஏதாவது ஒரு வேலை தேட வேண்டும் என்ற சூழல். அதுவரையிலான வருமானத்துக்கு டியூசன் எடுத்தார். விறகு வெட்டவும் சென்று கொண்டிருந்தார். 2001-ம் ஆண்டு. காட்டில் நிறைய சிறுவர்கள், சிறுமியர்கள் தென்பட்டனர். எதார்த்தமாகப் பேச்சு கொடுத்தார். எல்லாம் சுற்று வட்டார பழங்குடி கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அதில், பமோஹியைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர். அவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார்கள் என்றும், பலர் பள்ளிக்கே சென்றதில்லை என்றும் உத்தமுக்குத் தெரிய வந்தது. உத்தமின் சிறு வயதில், கல்வியின் அவசியத்தை அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை. இப்போது அந்தக் குழந்தைகளுக்கு அதை எடுத்துச் சொல்ல, அவர்களை அறிவின் பாதையில் அழைத்துச் செல்ல தான் மட்டுமே அங்கே இருப்பதாக உத்தம் உணர்ந்தார்.

இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்டார். உழைத்து கொஞ்சம் பணம் சேமித்தார். வீட்டின் அருகே பழைய, பயன்படாத மாட்டுக் கொட்டகை இருந்தது. நண்பர்களது உதவியுடன் மூங்கில்களை வெட்டி, சுவர் அமைத்து, தகரங்கள் கொண்டு கூரை அமைத்தார். உள்ளூர் தச்சர் ஒருவர் ஒரு ஜோடி டெஸ்க் – பெஞ்ச் செய்து கொடுத்தார். கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு உத்தம் எழுதினார், பாரிஜாத் அகாடெமி. பாரிஜாத மலர்போல குழந்தைகளின் வாழ்க்கையும் கல்வியால் மலர வேண்டும், மணக்க வேண்டும் என்று கனவு கண்டார். முதலில் ஊள்ளூர்க் குழந்தைகள் நான்கு பேர் உத்தமை நம்பி வந்தனர். 2003-ம் ஆண்டில் உத்தமின் ஆசிரியர் பயணம் ஆரம்பமானது.

கல்வியை உயிரெழுத்துகளில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால், உத்தம் விளையாட்டாக ஆரம்பித்தார். ஆடல், பாடல், பொம்மைகள் செய்தல் என்று விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். தான் ஓர் அனுபவமிக்க ஆசிரியர் கிடையாது என்பதில் உத்தம் தெளிவாக இருந்தார். ஆனால், குழந்தைகள் மகிழ்வோடு இருந்தனர். ‘நான் உத்தம் மாமா நடத்துற ஸ்கூலுக்குப் போனேன். சந்தோஷமா இருந்துச்சு’ என்று குழந்தைகள், தங்கள் நண்பர்களிடம் செய்தியைப் பகிர்ந்தனர். பாரிஜாத் அகாடெமியைத் தேடி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. 

ஆங்கிலம், அஸ்ஸாமி, இந்தி மூன்று மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் விளையாட்டுப் போக்கில் உத்தம் கற்றுக் கொடுத்தார். உத்தமிடம் படிக்கும் குழந்தைகளின் வளர்ச்சியை உணர்ந்த ஊர் மக்கள் சிலர், தங்கள் குழந்தைகளையும் பாரிஜாத் அகாடெமிக்கு அனுப்பி வைத்தனர். மூன்றே ஆண்டுகளில் 32 மாணவர்கள்.

உத்தமுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவர் தனது உழைப்பால் ஈட்டிய பணத்தைத்தான் செலவு செய்து கொண்டிருந்தார். அவர் வாழ்க்கைக்குத் தேவையான வருமானம்? உத்தமின் பெற்றோருக்குக் கவலையாக இருந்தது. ‘நீ ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும்? நீயும் சம்பாதிக்க வேண்டாமா?’ என்று மகன் மீதான அக்கறையில் கோபப்பட்டார்கள். உத்தம் எடுத்துச் சொன்னார். ‘குழந்தைகள் வெறுமனே காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தால் அவர்களது வருங்காலம் என்ன ஆகும்? நான் கற்ற கல்வியின் துணையோடு அவர்களது கரங்களையும் பற்றி அழைத்துச் செல்கிறேன். இதை நான் பணத்துக்காகச் செய்யவில்லை. என் மனம் என்ன சொல்கிறதோ அதையே செய்கிறேன்.’

அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று எல்லோரிடமும் சென்று உதவி கேட்க உத்தம் தயங்கவே இல்லை. ‘நான் பழங்குடியினக் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை எனது சொந்த முயற்சியில் நடத்துகிறேன். அவர்கள் படிப்பதற்காக நோட்டு, புத்தகம், பென்சில், பைகள் என்று எது வேண்டுமானாலும் தாருங்கள். சிலேட்டு உடைந்திருந்தால்கூட பரவாயில்லை. எங்களிடம் அதுகூட இல்லை. பாதி எழுதிய நோட்டு என்றாலும் பிரச்னையில்லை. மீதி இருக்கும் வெள்ளைத் தாள்களில் எங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அறிவைப் பெருக்கிக் கொள்வார்கள்!’

உதவிகள் கிடைக்கத் தொடங்கின. ஜப்பானிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மூலமாக இணையம் பற்றி உத்தம் அறிந்து கொண்டார். அந்த ஜப்பானியர் உத்தமுக்கும் இமெயில் ஐடி உருவாக்கிக் கொடுத்தார். உத்தம், சேவை நிறுவனம் ஒன்றுக்கு மெயில் அனுப்பினார். ‘என்னை நம்பி 32 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உபயோகப்படுத்திய உடைகள், நோட்டுகள், புத்தகங்கள் அனுப்பி உதவுங்கள்.’ மெயிலுக்கு நல்ல பதிலும் கிடைத்தது. உத்தம் கேட்டதற்கு மேலாகவே கிடைத்தது. அகாடெமியை விரிவுபடுத்த 32000 ரூபாய் பணமும் வந்து சேர்ந்தது. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையில் முதன் முறையாக பள்ளிச் சீருடை அணிந்து சிரித்தனர். உத்தம் உற்சாகமாக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கத் தொடங்கினார்.

ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் உத்தமைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போனார். வெளியான செய்தி மேலும் வெளிச்சத்தைக் கொடுத்தது. அக்கம் பக்கத்துப் பழங்குடி கிராமங்களிலிருந்து கூடுதலாகக் குழந்தைகள் பாரிஜாத் அகாடெமியைத் தேடி வர ஆரம்பித்தார்கள். உத்தமின் குடும்பத்தினரும் தங்கள் மகனைப் நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

அதேசமயம் உத்தமுக்கு அழுத்தம் அதிகமாகியது. கூடுதல் மாணவர்கள். நம்பி வந்துவிட்டார்கள். யாரிடமும் ‘முடியாது’ என்று சொல்லிவிட முடியாது. கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் பொருள்கள், கூடுதல் பணம் எல்லாமே தேவை. கூடுதல் பொறுப்பும்கூட. கூடுதலாக உழைத்தார். உத்தமுக்கு கூடுதல் உதவிகளும் கிடைக்கத் தொடங்கின.

இலக்கே இன்றி காடுகளில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த பழங்குடிக் குழந்தைகள், தனியார் பள்ளிகளின் மாணவர்களைப் போன்ற நேர்த்தியுடனும் ஒழுங்குடனும் கல்வியை விரும்பிக் கற்கத் தொடங்கினர். ‘பாரிஜாத் அகாடெமி’ என்பது தான் போட்ட விதை. அது மாபெரும் விருட்சமாக வளரும் வரை, இந்த மாணவர்கள் விழுதுகளாக மாறி இந்த விருட்சத்தைத் தாங்கிப் பிடிக்கும் காலம் வரை, எத்தனை இடர்கள் வந்தாலும் தன் முயற்சிகளைக் கைவிட்டுவிடவே கூடாது என்ற மன உறுதியுடன் உத்தம் இயங்கிக் கொண்டே இருந்தார். இருக்கிறார்.

இப்போது கல் கட்டமாகத் திகழும் பாரிஜாத் அகாடெமியில் சுமார் 550-க்கும் மேற்பட்ட பழங்குடிக் குழந்தைகள் படிக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு தொடங்கி பத்தாம் வகுப்பு வரை அங்கே கல்வி பயலும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் வசதிகள், இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணி செய்கிறார்கள். உத்தம் அவர்களுக்குத் தன்னால் இயன்றதைச் சம்பளமாக வழங்குகிறார். நூலகம், கம்ப்யூட்டர் லேப் என்று நவீன வசதிகளுடன் பாரிஜாத் அகாடெமி அஸ்ஸாமின் முன்னோடி பழங்குடிக் கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அங்கே மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. நடனம், பாட்டு, ஓவியம், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு என்று கலைகளிலும் மாணவர்கள் மிளிர்கிறார்கள். மாநில அளவில், தேசிய அளவில் பள்ளிகளுக்காக நடைபெறும் போட்டிகளில் பாரிஜாத் மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு வரை அகாடமியைத் தரம் உயர்த்த உத்தம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். 11 பழங்குடி கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் அகாடெமியில் படிக்கிறார்கள். தொலைதூரத்தைச் சேர்ந்தவர்களுக்காக தன் அகாடெமியில் ஹாஸ்டலும் தொடங்கியிருக்கிறார் உத்தம். கூடவே எல்லா மாணவர்களுக்கும் மதிய உணவும் வழங்கி வருகிறார். ஆம், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தனி ஓர் ஆசிரியர் மிகுந்த சிரமங்களுடன், அர்ப்பணிப்புடன் தொய்வின்றிச் செய்து வருகிறார்.

2011-ம் ஆண்டில் CNN IBN நிறுவனம் Real Hero விருதை உத்தமுக்கு வழங்கியது. மேலும் பல விருதுகளும் வாங்கியிருக்கிறார். அவற்றையெல்லாம்விட பெருமை எதுவென்றால், உத்தமிடம் ஆரம்பத்தில் உயிர் எழுத்து பயின்ற ஒரு சில மாணவர்கள், இப்போது கல்லூரிப் படிப்பை முடித்து, வேலையும் கிடைக்கப் பெற்று வாழ்வில் நிமிர்ந்து நிற்கும் தருணம்தான்.

ஔவையார், அஸ்ஸாமின் உத்தம் டெரோனைக் கண்டிருந்தால் தான் எழுதியதைச் சற்றே மாற்றியிருக்கக்கூடும்.

கற்பித்தல் நன்றே கற்பித்தல் நன்றே

பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே!