வழிகாட்டும் ஆளுமை – 3

திரு. நந்தகுமார் IRS

ஒரு முறை என் மாப்பிள்ளை அதாவது என் தங்கையின் கணவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். “இந்த மாதிரி மாப்ள கீர்த்திக்கு காது குத்தப் போறோம்” என்று சொன்னார். நான் “அப்படியா மாப்ள! ரொம்ப சந்தோஷம்” என்றேன். பொதுவாக காது குத்துதல் இயல்பாகவே நம் வீடுகளில் நடைபெறக் கூடிய ஒரு சுபநிகழ்ச்சி தானே. அடுத்து அனைவரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால், நான் தாய்மாமா அல்லவா!.

நமது தமிழர் கலாச்சாரம் தாய்மாமன் சீர் செய்ய வேண்டும். எனவே தாய்மாமாவுக்கு செலவு இருக்கும் என்று கணக்கு போட்டுவிட்டார்கள். எங்க அம்மா “நீ தாய்மாமன், நல்ல முறையில் சீர் செய்யவேண்டும்” என்று சொன்னார்கள். நானும் “சரிம்மா கட்டாயமா நான் செய்கிறேன்” என்றேன். அதற்குப் பிறகு என் தங்கை “அண்ணா எனக்கு என்ன சீர் செய்வாய்!” என்றாள்.

அதற்கு நான் “உனக்கு ஏன் இப்போ அவசரம், நான் செய்யும்போது பார்த்துக்கொள்” என்றேன். “இல்ல இல்ல அதை வைத்து தான் பல கணக்குகளைப் பண்ண போகிறேன்” என்றாள். “என்ன கணக்கு?” என்றேன். “இல்லண்ணா, பெண் பிள்ளை அல்லவா அதற்காக அவளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக கேட்டேன்” என்றாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் தம்பியும், உடனே அக்கா காது குத்துகிறாள், நாமும் நம் பிள்ளைகளுக்கு காது குத்தலாம் என்று எண்ணி, என் தம்பியும் “அண்ணா நானும் என் பையனுக்கு காது குத்துகிறேன்” என்றார். ஆனால் என் தம்பிக்கோ பையன். என்னடா இது ஒரே காது குத்துற கதை ஆயிருச்சே என்று பேசிக்கொண்டிருந்தோம்.

காலப் போக்கில், இந்த காது குத்துதல் என்ற சொல் எதிர்மறைச் சொல்லாக மாறிவிட்டது. யாராவது ஏதேனும் சொன்னால் உடனே நாம் ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு நீ கிளம்பு’ என்று சொல்லுவோம். எதற்காக நமக்கு காது குத்துகிறார்கள், அதுவும் குறிப்பாக பெண்களுக்கு காது குத்துகிறோம் என்று சொன்னால், இயல்பாகவே பெண்களுக்கு பல பிரச்சனைகள் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி அடிக்கடி உருவாகும். அப்போது இந்த இரண்டு காதுகளிலும் ஓட்டை இட்டு காது குத்தினால் அவர்களை அது இயல்பாக வைத்துக்கொள்ளும். அதேபோல அந்த இடத்தில் அவர்கள் தோடுகளை அணிவார்கள். அது அவர்கள் ஆற்றலைத் தூண்டி அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இன்னமும் சொல்ல வேண்டுமென்றால், ஆண்கள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வெளியில் சென்று ஒரு தேனீர் அருந்திவிட்டு வந்துவிடுவோம்.

ஆனால், பெண்களுக்கு நம்மை விடப் பல பிரச்சனைகள், அவர்கள் நம்மைப் போல் வெளியிலும் வரமாட்டார்கள். இதுபோன்ற பல உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அவர்கள் தோடு அணிந்திருக்கக்கூடிய அந்த ‘மெரிடியன் பாய்ண்ட்’ அவர்களை இயல்பாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன என பல ஆய்வுகள் கூறுகின்றது.

எதற்காக இதை நான் கூறுகிறேன் என்று சொன்னால். எப்படி நாம் காது குத்தும் போது நம் காதுகளை, நாம் ஓட்டையிட்டு பஞ்சர் செய்கிறோமோ, அதுபோல நாம் நிறைய விஷயங்களை நம் வாழ்க்கையில் பஞ்சர் செய்ய வேண்டியுள்ளது. கெட்ட விஷயங்களை பஞ்சர் செய்ய வேண்டியுள்ளது. நல்ல விஷயங்களைத் தூண்டி விடுவதற்கும் பஞ்சர் செய்ய வேண்டியுள்ளது. எனக்கு, என் வாழ்க்கையில் வராத, ஒரே விஷயம் படிப்பு மட்டும் தான்.

அதாவது ஐந்து பாடங்களில் குறைந்தது மூன்று பாடங்களிலாவது தேர்ச்சி பெற்றால் தானே அடுத்த வகுப்பிற்கு அனுப்புவார்கள். நான் ஐந்து பாடங்களிலுமே தோற்றதால் எப்படி என்னை அடுத்த வகுப்பிற்கு அனுப்புவார்கள். அதனால் வெளியில் அனுப்பிவிட்டார்கள். ஆறாவது வரை எப்படியோ வந்துவிட்டேன். ஆனால், ஏழாவது வகுப்பிற்கு என்னைச் சேரவிடாமல் பஞ்சர் செய்து விட்டார்கள். எப்படி சைக்கிளில் காற்றை இறக்குவதற்கு பஞ்சர் செய்வார்களோ, அதுபோல என் ஆளுமையை பஞ்சர் செய்து விட்டார்கள். பஞ்சர் செய்து வெளியே அனுப்பிவிட்டார்கள். இப்போது நான் பஞ்சரான ட்யூப் போல காற்றடிக்க வெளியே ஓடிக்கிட்டே இருக்க வேண்டும். ஆனால் என் ட்யூப் ஆசிரியர்கள், மற்றவர்கள், உறவினர்கள் என்று பல பேர் பஞ்சர் செய்த ட்யூப்.

வடிவேலு ஒரு திரைப்படத்தில் வார்டனாக இருப்பார். அப்போது, போற வர்றவங்க எல்லாரும் அவரை அடித்து விட்டுச் செல்லுவார்கள். அதுபோல போறவங்க வர்றவங்க எல்லோரும் என்னை குத்தி ட்யூயை பஞ்சர் செய்துவிட்டார்கள். என்னுடைய ஆளுமை ட்யூபில் பஞ்சர் அடித்தாலும் காற்று நிற்கவில்லை. ஆகவே பள்ளியை விட்டு வெளியே வந்ததும் வேலைக்குச் சேர்ந்தேன். எப்படிச் சைக்கிளில் பஞ்சர் ஒட்டுவார்களோ அதுபோல என் பஞ்சர்களை அதாவது என் ஆளுமையை ஒட்ட வேண்டியிருந்தது. அதற்காக என் ஆளுமையை, பஞ்சரை யாருக்கும் தெரியாமல் ஒட்ட ஆரம்பித்தேன். எப்படியோ ஒரு வழியாக என் பஞ்சரை முழுவதுமாக ஒட்டிவிட்டேன். இப்போது நான் என் ட்யூபில் காற்றை நிரப்பவேண்டும். காற்றை நிரப்பினால் தான் என் வண்டி ஓடும். எனவே மீண்டும் யாருக்கும் தெரியாமல் காற்றை நிரப்ப ஆரம்பித்தேன். அதாவது கெட்ட விஷயங்களை தான் நாம் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக செய்வோம். ஆனால், நான் நல்ல விஷயத்தையே, நான் படிப்பதையே யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக செய்ய வேண்டியிருந்தது.

ஏனென்றால் என்னைக் கேலி செய்துவிடுவார்கள் என்ற அச்சம். திருட்டுத்தனமாக படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்து சிறிது சிறிதாக என் டயரில் காற்றை நிரப்ப ஆரம்பித்தேன். என் ஆளுமை டயர் இப்போது ஓடத் தொடங்கியது. அதாவது நல்ல சுத்தமான பாதையில் என் வண்டி பயணிக்க வில்லை. கரடு முரடான, முட்கள் நிறைந்த பாதையாக இருந்தது. மெல்ல மெல்ல என் ஆளுமையை வளர்த்து, காற்றடித்துக் காற்றடித்து 8-ஆவது, 10-ஆவது என்று வளர்ந்து பெரிய டயராக மாறிவிட்டது அன்று உருள ஆரம்பித்த என் ஆளுமை வண்டி எங்கு போய் நின்றது தெரியுமா? சிவில் சர்வீஸ் தேர்வில் நான் தான் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தேன்.

அதாவது திரைப்படங்களில் ஹீரோ ஒரே அடியில் 30 பேரையும் அடித்து தூக்கி விலாசுவர். உடனே நாம் எல்லோரும் கைதட்டி ‘அஜித் பாத்தியா எப்படி அடிக்கிறாரு’ என்று தியேட்டரில் துள்ளிக்குதிக்கிறோம். ஹீரோ எப்படி அனைவரையும் குத்தி அடித்து வீழ்த்துகிறாறோ அதுபோல நானும் வீழ்த்த வேண்டியிருந்தது. அதுவும் 30 பேர், 50 பேர் அல்ல, 8 லட்சம் பேரை வீழ்த்தி நான் முதலிடம் பெற்றேன். அதுவரை, கடவுளின் மேல் கோபம் கொண்டேன், என்னை, குறையோடு படைத்துவிட்டார் என்று. ஆனால் அதன்பிறகு தான் புரிகிறது குறையோடு படைத்தது, என் குறையைக் களைந்து இந்த வெற்றியை பெறுவதற்காக என்று எனக்குப் பின்னர் தான் புரிந்தது.

நான் இந்த 8-லட்சம் பேரை வீழ்த்தி வெற்றி பெற்றது எனக்குப் பெருமையாக கருதவில்லை. குறையோடு படைத்த அதே இறைவன் என்னை என்ன செய்ய வைத்தார் தெரியுமா? இந்தியாவின் மிகவும் சிறிய வயதில் செயலாளராக பொறுப்பேற்ற பின், நான் எழுதித் தருவதை குடியரசுத்தலைவரும், பிரதமரும் நாடாளுமன்றத்தில் படித்தார்கள். அந்த அளவுக்கு கடவுள் என் ஆளுமையை வெளிக்கொணரச் செய்திருக்கிறார். எனக்கு அந்த அரிய வாய்ப்புக் கிடைத்தது. அது தான் எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். ஒரு பஞ்சர் அல்ல, ட்யூப் முழுவதும் பஞ்சர், என் ட்யூபை மாற்ற முடியுமா என்றால் இந்த ஜென்மத்தில் முடியாது. என் ட்யூபை மாற்ற முடியும் என்பது மிகவும் கஷ்டம். நம் வண்டியில் டயர் முழுவதுமாக பழுதடைந்து விட்டால் மெக்கானிக் முழுவதையும் மாற்ற சொல்லுவார். அதுபோல என் ட்யூபை மாற்ற வேண்டும் என்றால் அடுத்த பிறவியில் தான் முடியும். இப்படி இருந்த என் வாழ்வில், என் ட்யூபில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் அடைத்துவிட்டு மெல்ல மெல்ல ஓட்டத் தொடங்கினேன்.

உங்களுக்குள்ளே நீங்கள் பலவற்றை நீங்களாகவே நினைத்துக் கொள்கிறீர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன், குடும்ப வறுமை என்று உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளக் கூடாது. நமது வாழ்க்கையை எந்த அளவிற்கு எங்கே எடுத்து செல்லப் போகிறோமோ, அந்த அளவிற்கு நமது மனதும், உடலும் நம்மை அந்த இடத்தை அடைய எடுத்துச் செல்லும். நமது உடலும் மனதும் எப்போதும் தயாராக வைத்திருந்தால் அது தானாகவே நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே அழைத்துச் சென்றுவிடும். நான் தேர்வெழுதும் போது 8 லட்சம் பேர்களோடு போட்டி போடுவேன் என்று தெரியாது. அதற்கு நான் அஞ்சவும் இல்லை. என் உடலும் என் மனதும் தைரியமாக இருந்தது. என்னை இந்த 8 லட்சம் பேரோடு போட்டிபோட்டு முதலிடத்தில் வர வைத்தது.

அதுபோல நீங்களும் இந்த இடத்திற்கு வர வேண்டும், இந்த நிலையை அடைய வேண்டும். இந்த விஷயம் எனக்கு கிடைக்கவேண்டும் என்று சொன்னால் உங்கள் மனதும், உடலும் தயாராக வைத்துக் கொண்டால், இயற்கையாகவே அது உங்களை அந்த இடத்திற்கு கூட்டிச் செல்லும். நமக்கு வரவில்லை என்று அதனை விட்டுவிட்டால் தான் அது தவறு. திரும்ப திரும்ப அந்த விஷயத்தை செய்வது தவறல்ல, எனவே நீங்களும் இதனைச் செய்தால் எந்த சிரமும் இல்லாமல், எந்த தடையும் இல்லாமல் இயற்கையாகவே அது நடக்கும். மற்றவர்கள் உங்களை பஞ்சர் செய்தாலும், கெட்ட விஷயங்களால் நீங்கள் பஞ்சர் ஆகியிருந்தாலும் அதனை ஒட்டி ‘ஆளுமை’ என்னும் காற்றடித்து உங்கள் வண்டி என்னும் வாழ்கையை ஓட்ட ஆரம்பியுங்கள் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் அந்த வெற்றியை அடைய வைக்கும். வாழ்த்துகள்… =