கல்வி-அறிவு-ஞானம்-17

கடந்த இதழில், உடலில் பிராணவாயுவின் அளவை அதிகப்படுத்தவும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும் உதவும்அனுலோமா-விலோமா பயிற்சி குறித்துக் கண்டோம். இந்த இதழில் மேலும் சில எளிய மூச்சுப் பயிற்சிகளைக் காணலாம்.

அனுலோமா-விலோமா பயிற்சியை தொடர்ந்து ஒரு மாதம் செய்தபின் அடுத்த பயிற்சிக்குச் செல்லலாம்.

மூச்சுப் பயிற்சி எண்- 2 – பிராண சுத்தி

செய்முறை

இது அனுலோமா-விலோமா பயிற்சியின் தொடர் பயிற்சியாகும்.

அனுலோமா-விலோமா நான்கு சுற்றுகள் முடிந்தவுடன், கைகளை நாசியிலிருந்து எடுத்துவிட்டு, ஒரே நேரத்தில் இரண்டு நாசிகளின் வழியாகவும் மூச்சை ஆழமாக உள்ளே இழுக்கவும். பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு நாசிகளின் வழியாகவும் மூச்சை நீளமாக வெளியே விடவும்.

மீண்டும் அனுலோமா-விலோமா நான்கு சுற்றுகள் பின்னர் ஒரு பிராண சுத்தி என மொத்தம் நான்கு முறை செய்யவேண்டும்.

4 + 1, 4 + 1, 4 + 1, 4 + 1.

இந்த பிரணாயாம பயிற்சிக்கு நாடி சுத்தி, நாடி சோதனை என்ற பெயர்களும் உண்டு.

இந்த எண்ணிக்கையில் தினமும் காலையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும். ஒரு மாதம் செய்த பின்னர் அடுத்த பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளவும்.

பலன்கள்

  • சுவாசம் சீராகும்.
  • இரு நாசிகளோடு இணைக்கப் பட்டுள்ள இடகலை நாடி, பிங்கலை நாடி ஆகிய இரு பெரும் நாடிகளில் இருக்கும் சக்தித் தடைகள்
    விலகும்.
  • மூளைக்குத் தேவையான பிராண சக்தி தடையின்றி கிடைக்கும்.
  • உடல், மூளை, மனம் ஆகிய மூன்றும் சுறுசுறுப்பாகும்.
  • நினைவுத் திறன் அதிகரிக்கும்.
  • கற்றல் எளிதாகும்.

மூச்சுப் பயிற்சி எண்- 3

கபாலபதி பிராணயாமா

மூன்றாவது மாதத்திலிருந்து இந்த பயிற்சியைத் துவங்கலாம். முதல் இரு பயிற்சிகளோடு இதையும் சேர்த்துச்
செய்யவும்.

கபாலபதி என்ற வடமொழி சொல்லுக்கு கபாலத்தைப் பளபளப் பாக்குதல் என்பது பொருள். இங்கே கபாலம் என்பது நமது மூளையைக் குறிக்கும்.

மூளையை கூர் தீட்டி, அதிகத் திறனுடன் செயல்படவைக்கும் ஒரு அற்புதமான பயிற்சி இது. தினமும் தவறாமல் செய்யவும்.

செய்முறை

கழுத்தும், முதுகும் வளைவின்றி நேராக இருக்கும்படி தரையில் அல்லது ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள்.

இரு கைகளிலும் ஞான முத்திரையைச் செய்யவும். (ஆள்காட்டி விரலின் நுனிப் பகுதியால் பெருவிரலின் மேற்பகுதியைத் தொடவும். பிற மூன்று விரல்களும் சற்றே தளர்வாக இருக்கட்டும். அதே நிலையில் கைகளை தொடைகளின் மேல் வைத்துக் கொள்ளவும்– படம் பார்க்கவும்.)

இரு நாசிகளின் வழியே மூச்சை நிதானமாக நீளமாக உள்ளே இழுங்கள்.

இழுத்த மூச்சை உடனே வெளியே விட்டுவிடாமல் சற்று நேரம் உள்ளே அடக்கிக் கொள்ளுங்கள் – இவ்வாறு அடக்கிக் கொள்வதை ‘கும்பகம்’ என்பார்கள்.

உங்களால் சிரமமின்றி எவ்வளவு நேரம் அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூச்சு திணறும் நேரத்தில் வெளியே விடலாம்.

இந்த பயிற்சியில் வெளி மூச்சை ஒரே மூச்சாக விடாமல் நான்கு அல்லது ஐந்து சிறு மூச்சுகளாக அழுத்தமாக வெளியே விடவேண்டும்.

மீண்டும் உள்மூச்சு – கும்பகம் –நான்கு அல்லது ஐந்து சிறு வெளி மூச்சு.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

பலன்கள்

இந்தப் பயிற்சி மூளையைத் தூண்டும் பயிற்சியாகும். மூளை சுறுசுறுப்பாகும்.

மூளையில் செயல்படாமல் தூங்கிக் கிடக்கும் பல பகுதிகள் தூண்டப்படும்.

மூளையின் செயல் திறன் பலமடங்கு அதிகரிக்கும்.

நினைவுத் திறன் பெருகும்.

கற்றல் எளிதாகும்.

பிற பலன்கள்

கபாலத்திலும் சைனஸ்களிலும் தேங்கி நிற்கும் நீர் வெளியேறும். சைனஸ் எனும் பீனிச நோய் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைத் தொடந்து செய்து வர, மிக அருமையான பலன் தெரியும்.

உடலில் தேங்கி நிற்கும் அதிகப் படியான கொழுப்பையும் இந்தப் பயிற்சி கரைக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.

உடல் எடை குறைய இந்தப் பயிற்சியோடு வேறு சில மூச்சுப் பயிற்சிகளையும், சில முத்திரைகளையும் சேர்த்து செய்ய வேண்டும்.

சைனஸ் நோய்க்கும் இந்தப் பயிற்சியோடு சில முத்திரைகளையும் சேர்த்து செய்ய செய்தால் பூரண பலன் விரைவாகக் கிட்டும்.

எச்சரிக்கை

மூச்சுப் பயிற்சிகளை ஒரு குருவின் துணையோடு செய்வது தான் சரியான முறை. இங்கே நான் தந்துள்ள மூன்று பயிற்சிகளும் மிக எளிய பயிற்சிகள்.

செய்முறையை இரண்டு மூன்று முறை கவனமாகப் படித்து, தெளிவாகப் புரிந்து கொண்டு நீங்களே செய்யத் துவங்கலாம்.

அதிக ஆர்வத்தில், தரப்பட்டுள்ள எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. தரப்பட்டுள்ள கால அளவையும் அதிகரிக்கக் கூடாது.

குறிப்பு

இதுவரையில் நாம் கண்ட மூன்று மூச்சுப் பயிற்சிகளும் மிக எளிமையான பயிற்சிகள்.

ஆறு வயதிற்கு மேற்பட்ட அனைவருமே இந்தப் பயிற்சிகளை செய்யலாம். ஒரு மாதத்திலேயே மிக அருமையான பலன்களை உணர முடியும்.

செய்முறையில் சந்தேகங்கள் இருந்தால் இணைய தளத்தில் தேடிப் பாருங்கள். செய்முறை குறித்த பல வீடியோக்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து தெளிவு பெறலாம். =     (தொடரும்)