தன்னம்பிக்கைத் தொடர்-6

சமூகப் பற்றாளன் ஞானசித்தன்

யானைக்குப் பலம் தும்பிக்கை மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கை என்ற வாசகமானது தன்னம்பிக்கை கொண்டு செயல்படும் இலட்சியத்தை அடைய நாளும் போராடும் அனைத்துச் சாதனையாளர்களுக்கும் பொருந்தும்..

முயற்சி மட்டுமே ஒரு மனிதனுக்கு முன்னேற்றத்தை தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எனது வாழ்வில் நடந்த உண்மையான சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள நான்  ஆசைப்படுகின்றேன்…

அந்த வகையில் 2007 – ஆம் ஆண்டு நான் சேலத்தில் நடைபெற்ற உதவி ஆய்வாளர் தேர்வுக்கு சற்று தாமதமாகச் சென்று தேர்வு எழுதும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன்.!!!

அதற்கான காரணங்கள்

1) அன்று எனது பிறந்த நாள் என்பதால் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டேன்.!!!

2) 20 – 05 – 2007 அன்று ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான முதன்நிலை தேர்வு ஒருபக்கம், உதவி ஆய்வாளர் தேர்வு மறுபக்கமென இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் வந்ததன் விளைவால் மதில் மேல் பூனையாக எனது மனநிலை.

3) அப்போது விழுப்புரத்தில் ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்றதால்
இரயில்வே கேட்டில் காத்துகிடந்த ஏராளமான வாகனங்களால் ஏற்பட்ட வாகன நெரிசல் அதனால் உண்டான கால தாமதம்..

4) என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற தைரியம், தன்னம்பிக்கை துணிச்சல்.

5) அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி எனது காலதாமதத்திற்கு  கருணை காட்டாத போக்கு.

6) மனம் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டுமென அடம் பிடித்தது
அரைமனதாய் தேர்வுக்கு சென்றேன்.

போன்ற பல்வேறு காரணங்களால்  அச்சமயத்தில் என்னால் உதவி ஆய்வாளர் தேர்வு எழுத முடியவில்லை…

தேர்வு எழுத என்னை அனுமதிக்காததால் அதனால் நான் எள்ளளவு கூட
கவலை கொள்ளவில்லை…

சிறுவயதில் இருந்தே பல தடைகளை தாண்டியவன்
நான். அதனால் எதையும் தாங்கும் இதயம் கொண்டவனாக எனக்குள்ளே இருக்கும் ஒருவனை ஞானசித்தனை கண்டுகொண்டேன்…

எதிர்காலத்தை பற்றி நான் கவலைப் படவில்லை என்
மனம் முழுவதும் தன்னம்பிக்கை மட்டுமே நிறைந்து இருந்தது…

தேர்வு எழுதும் மையத்திலிருந்து வேகமாய் வெளியேற்றப்பட்டேன்.

அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று ஒரு டீ சொல்லிவிட்டு டீக்கடையில் அமர்ந்தேன்…

டீ வருவதற்குள் ஹால் டிக்கட்டின் பின்புறம் உள்ள காலியான பகுதியில்.
‘வானம் உன் கையில்’ என்கிற தலைப்பில் கவிதை எழுதினேன்…

டீயை குடித்து விட்டு நான் வெளியே வருவதற்குள் அன்றைய லைவ் நியூஸ்சில்,
அன்றைய மாலை மலரில், மறுநாள் தினத்தந்தி நாளிதழில் என் போட்டோவை போட்டு
‘‘காலதாமதமாக சென்ற போலீஸ்காரர் கண்ணீர் மல்க சென்றார்’’ என்ற தலைப்பில் கொட்டை எழுத்தில் போட்டுவிட்டார்கள்..

இதை அறிந்த எனது மாமா சக்தி அவர்கள் போனில் கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார்…

எனது மாமாவிடம் நான் சவால் விட்டுச்  சொன்னேன்
நான் தற்போதைய தேர்வைதான்  தவறவிட்டேனே தவிர
வாழ்வில் தடம் பதிக்காமல் சாதிக்காமல் நான் சாகமாட்டேன் என்று மாமாவிடம் கூறினேன்..

அந்தநாளில் என் மனதில் சபதம் எடுத்துக் கொண்டேன்..

காவலர் பணியை பார்த்தவாறே கிடைக்கும்
ஓய்வு நேரங்களில் சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்திற்கும், தேவநேய பாவணார் நூலகத்திற்கும் சென்று கால நேரம் பார்க்காமல் சளைக்காமல் உழைத்தேன்.

நான் செய்த விடாமுயற்சியின் பலனாக 2011 – உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றதோடு அந்த நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு கூட
மிக எளிதாக பதில் கூறி 2011 – ஆம் ஆண்டு நான் உதவி ஆய்வாளரானேன்….

நான் உதவி ஆய்வாளராகி தற்போது பத்தாண்டுகள் கடந்து விட்டது.  இந்த பத்தாண்டுகளில் என்னால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்..

குறிப்பாய் கஷ்டமான இந்த கொரோனா காலங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, கொரோனா பற்றிய பொதுமக்களுக்கு மனநிறைவோடு வழங்கினேன்,
மேலும் என்னால் முடிந்த உதவிகளை பலபேருக்கு செய்து வருகின்றேன்…
மனிதநேயம் மட்டுமே எனது மார்க்கமாக அறம் செய்ய விரும்பென்ற தாராக மந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரியோர் கூறிய வழியில் சென்று கொண்டு இருக்கின்றேன்…

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

அதாவது வலிமை மிகுந்த யானைக்குக் குறிவைத்து அந்தக் குறியானது தப்பினாலும்கூட பரவாயில்லை அது வலிமையற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது என்கிறார் நமது தெய்வப்புலவர்…

எனது தற்பெருமையை உங்களிடம் பறை சாற்றுவதற்காகவோ, வீண் தம்பட்டம் அடிப்பதற்காகவோ, நீங்கள் என்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ,
வெற்று விளம்பரத்திற்காகவோ இக்கட்டுரையை
நான் எழுதவில்லை..!!!

இக்கட்டுரையின் நோக்கம் முயற்சியே முன்னேற்றத்தை தரும் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே ஆகும்..

மேலும் உங்கள் வாழ்வில் இன்பமோ துன்பமோ, இலாபமோ நஷ்டமோ, ஏற்றமோ இறக்கமோ எது நடந்தாலும் சரி நீங்கள் உடனே இடிந்து போகாதீர்கள்..

என்னடா வாழ்க்கை என்று நொடிந்து விடாதீர்கள்…

மனம் தளராதீர்கள் மனவுறுதியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.!!!

இலட்சியத்தை நோக்கிய உங்கள் பயணத்தை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.!!!

பிறருக்காக உங்கள் பிடிவாதத்தை தளர்த்தாதீர்கள்.!!!

எதிரிகளுக்கு பிடி கொடுக்காதீர்கள்.!!!

முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்.!!!

தோல்வியெனும் தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றுங்கள் தன்னம்பிக்கையால் தலைநிமிருங்கள்.!!!

உங்கள் சிந்தையால் செய்கையால் வானளவு உயருங்கள்.!!!

சிரமத்தைக் கடந்து சிகரத்தை தொடுங்கள்.!!!

கண்ணீரை வரவழைக்கும் கவலைகளை உங்கள் காலில் போட்டு மிதியுங்கள்.!!!

தன்பெண்டு, தன்பிள்ளெயென சராசரி மனிதனாக வாழாதீர்கள்.!!!

காசேதான் கடவுளென கருமியாக இருக்காதீர்கள்.!!!

ஆடு மாடு போல உண்டு உறங்கி  ஏனோ தானோவென வாழ்ந்து இறக்காதீர்கள்…

சாதனை மனிதனாக மாற முயலுங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பதை மறவாதீர்கள்…
மொத்தத்தில் அய்யன் திருவள்ளுவர் கூறியது போல
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதை ஒருபோதும் நீங்கள் மறக்காதீர்கள். 