வெற்றித் திசை

ஆதவன் வை.காளிமுத்து

 

 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது ஒரு அழகான முதுமொழி. அதுபோல மனிதனின் உடல் நலமாக இருந்தால்தான் மனித வாழ்வு நலமாகவும், பொருள் உள்ள வாழ்க்கையாகவும் அமையும். உடல் நலமாக இருந்தால்தான் மனம் வளமாக இருக்கும். உடல்நலமும், மனவளமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இரண்டு நலன்களையும் பேணுவது என்பது தனிமனிதக் கடமை மட்டும் அன்று, அது ஒரு சமுதாயக் கடமை. நலமான உடலும், வளமான மனமும் அமையப்பெற்ற மக்கள் சமுதாயமே சிறந்த சமுதாயமாகும். அவ்வாறான சமுதாயத்தில் மக்கள் அமைதியோடும், வளமோடும் எல்லாவித உயர்வோடும் வாழமுடியும்.

எனவே அவரவர் உடல் நலன் மற்றும் மன நலனில் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் முதற் கடமையாகும்.

“உள்ளம் பெருங்கோயில்
ஊன் உடம்பு ஆலயம்”

என்பது திருமந்திரம். இதிலிருந்து நம் உடலின், உள்ளத்தின் மதிப்பை நாம் உணரவேண்டும். நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுத்து உறங்கும் வரை யார் யாருக்கோ என்ன என்னவெல்லாமோ செய்துவிட்டோம். அப்படி நாம் செய்தது நம் தொழிலாக இருக்கலாம், அரசுப்பணியாக இருக்கலாம், அல்லது பொது நோக்க சமுதாயத் தொண்டாகவும் இருக்கலாம்.

ஆனால் இரவு உறங்கச் செல்லும் முன்னர் நமக்கு, நம் உடலுக்கு நம் நலத்திற்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால், ஒன்றுமே செய்யவில்லை என்பது விளங்கும்.

மாறாக என்ன என்ன தீமைகளை, வன்முறைகளை நமக்கு நாமே செய்து கொண்டோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். என்ன சார்? எனக்கு நானே என்ன தீமை செய்தேன்? செய்வேன்? செய்யமுடியும்? என்று கேட்டால் ஏராளமாக உள்ளது பதில்கள். ஆனால் பழக்கத்தினாலும், அறியாமையினாலும், சிந்திக்காததுனாலும் நமக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அதிகாலையில் ஒரு தேனீர் அருந்துகிறோம். பின் பணிக்கு செல்லும் முன் காலை உணவு எடுத்துக் கொள்கிறோம். பிறகு 11.00 மணியளவில் பழகிவிட்ட காரணத்தால் தேனீர், அல்லது காபி என்று ஏதாவது சூடாக அருந்துகின்றோம். பிறகு மதிய உணவு. அதன் பின்பு 3 மணிக்கு ஒரு தேனீர். மாலையில் 6 மணிக்கு தேனீர். இரவு உணவு என்று தான் நம் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது.

ஆனால் இத்தோடு நிறுத்திக்கொண்டால் ஓரளவு நம் உடலுக்கு நன்மையாக அமையும். இந்த நேரங்களுக்கு இடையிடையே பழக்கத்தினால், அல்லது சூழ்நிலைக்கு ஆட்பட்டு அல்லது நண்பர்களுக்காக என்று இடையிடையே தேனீர், ஏதாவது கண்டகண்ட நொறுக்குத் தீனி, அல்லது இனாமாக கிடைக்கின்றது என்று அல்லது இருப்பது வீணாய் போய்விடும் என்று இப்படி எதை எதையோ உள்ளே போடுகின்றோமே இவையெல்லாம் தான் நமக்கு, நம் உடலுக்கு நாம் செய்யும் கேடு. நம் உடல் உறுப்புகளின் மேல் நாம் நடத்தும் வன்முறை.

இவ்வளவையும் செய்துவிட்டு உடல் நலமாக இருக்க வேண்டும். மனம் வளமாக இருக்க வேண்டும். நாம் வேண்டியது வேண்டியவாறு கிடைக்க வேண்டும். நாம் நினைத்தது நினைத்தவாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசையே.

உடலை நலமாகவும், மனத்தை வளமாகவும் வைத்திருக்கின்றார்களே அவர்களுக்கு மட்டும் தான் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் என்பதான இயற்கையின் இரகசியம். நாம் இன்று யாருக்கு என்ன நன்மை செய்தோம் என்பதை விட இன்று நாம் நமக்கு என்ன  நன்மை செய்தோம் என்ற சிந்தனை நம் உடலை, உள்ளத்தை பேணவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும்.

உடல்நலம்,  மனவளம்,  நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல விளைவு

உடல் நலமாக இருந்தால் தான் மனம் வளமாக இருக்கும். மனம் வளமாக இருந்தால் தான் அந்த மனத்தில் தெளிவான நற்சிந்தனைகள் வளரும். நல்ல சிந்தனையினால் நல்ல செயல்களையே தேர்ந்து செய்வோம். நல்ல செயல்களுக்கு நல்ல விளைவே உண்டாகும். நல்ல விளைவு நமக்கும் மற்றோர்க்கும் எப்போதும் இன்பமே பயக்கும். இதுதானே வாழ்வின் நோக்கம். இந்த இன்பம் தானே வாழ்வின் வெற்றி.

இவை அனைத்திற்கும் அடிப்படை நமது உடல். உடல் இயற்கை தந்தது. நாமாக பெற்றது அல்ல. உடல் தானாக நோய்வாய்ப்படுவது இல்லை. நோய்வாய்ப்பட நாமே காரணம். உடலுக்கு துன்பம் தானாக வருவது அல்ல. உடலுக்கு வரும் துன்பம் எல்லாம் நாமே செய்தது என்ற புரிதல் வந்துவிட்டால் போதும், உடல் நலம் தானே வந்துவிடும். ஏனென்றால் உடல் தன்னைத் தானே சரிசெய்யும் வல்லமை படைத்த மாபெரும் வைத்தியனாகவும் இருக்கிறது.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பேரறிவு உடையது. நம்முடைய உதவியோ, அல்லது கட்டளையோ இன்றி தாமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாம் இயக்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை உணரவேண்டும். நம் உடலை இயக்க சத்தியமாக நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதை ஆணித்தரமாக நமக்குப் புரியவேண்டும்.

இந்த புரிதலில்தான் நம் உடலின் மற்றும் மனதின் மேன்மையும், மதிப்பும், மேலும் நாம் இனி நமது உடலுக்கு கேடு விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியும், நான் என் உடலின் இயற்கை அமைப்பிற்கு எந்த சிறு அளவிலும் முரண்பாடு இல்லாமலும் உடல் இயற்கை அமைப்பிற்கு ஒத்தும் நடப்பேன் என்ற தெளிவும் உண்டாகும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது வெறும் சொல்லாடலா? அல்லது நாம் அடைய வேண்டிய இன்ப அனுபவமா? சிந்திப்போம்.

சென்ற கட்டுரையில் மனம் செம்மையுற எண்ணம் மேன்மைபெற சில செய்திகளை தொட்டுப் பார்த்தோம். அடுத்து உடல் நலத்தை பேண வேண்டும் என்று சிந்தித்துள்ளோம். தொடர்ந்து  அன்றாட வாழ்வில் நாம் நடைமுறைப்படுத்துவதற்கான ‘நமக்கு நாமே’ திட்டம் என்ன? சிந்திப்போம்.