வெற்றியோடு விளையாடு! 03


நாகேந்திர பிரபு

பொருளாதாரப் பின்னணி,  அரசியல் பின்னணி, சமூகப் பின்னணி என்று ஏதாவது ஒரு பின்னணி இருந்தால் தான் ஒரு மனிதனால் முன்னேற முடியும்.  எந்த ஓர் ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர், எந்த ஒரு வெற்றிப் படியையும் பெரிய அளவில் தொட முடியாது, என்ற அவநம்பிக்கையை உடைத்து எறிந்து இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்தான் நாகேந்திர பிரபு.  மதுரை அருகே சோழவந்தான் கிராமத்தை சேர்ந்தவர்.  எம்.ஏ., எம் ஃபில்., பட்டங்களைப் பெற்ற பிறகு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியைத் தொடங்கியவர்.

ஆனால், சுற்றுலாத் துறையின் மீது அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார்.  தமிழகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் எப்படியாவது ஏதாவது ஒரு ரூபத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவு ஆழ்மனதில் கனன்று கொண்டே இருந்தது.

‘நீ எதை நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய்’ என்பது இவர் வாழ்க்கையில் பலித்தது. அவர் கனவை நனவாக்க வந்தது ஓர் அழகிய வாய்ப்பு.  வந்த அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
சுற்றுலாத்துறை பணிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்தது. உடனே அந்த சுற்றுலாத் துறைத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். சுற்றுலா வழிகாட்டியாகப் பணியில் சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை இவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் அதிகம்.   வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நமது நாட்டின் கருத்தாழமிக்க பாரம்பரிய விளையாட்டுகள்,  தமிழ் மன்னர்களின் வீரம், அன்பு, கொடை என்று விழுமியங்களை எடுத்துரைத்து வருகிறார்.

‘விருந்தினர்களுக்கு விழுமியங்களை எடுத்துரைப்பது என்பது ஒரு கலை. அக் கலை இவரது உச்சி முதல் உள்ளங்கால் வரை நடனம் ஆடுகிறது’ என்கிறார்கள் இவரிடம் விளக்கம் பெறும் சுற்றுலாப் பயணிகள்.

பாரம்பரியச் சின்னங்களை பார்வையிட  வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒவ்வொரு சிற்பமாக எடுத்துக்காட்டுகிறார். கோயில்களில் உள்ள சிற்பங்களின் தத்ரூபமான தரிசனத்தை, தனது தனித்திறமையான கலை நுட்பத்தால் விளக்குகிறார். தன்னுடைய நடன அசைவுகளால் அந்த சிற்பம் எப்படிப்பட்ட சிற்பம் என்பதை விளக்கி அசர வைக்கிறார்.  அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நடனமும், கற்றுத் தருகிறார்.‌ இதனால் சுற்றுலாப் பயணிகள் மன மகிழ்ச்சியுடன் தங்களது பயணத்தை ரசிக்கிறார்கள்.

இவரது அற்புதமான இந்தத் திறனைப் பார்த்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் புதிதாக வரும் வழிகாட்டிகளுக்கு இவரை ரோல் மாடலாக எடுத்துச் சொல்கிறது.

தமிழக அரசு வழங்கிய  சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது, சர்வதேச முத்தமிழ் விருது, மதுரை மாவட்ட ஆட்சியர் விருது, உட்பட 50 க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்து விருதுகளின் நாயகனாக இருக்கிறார்.‌ கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.‌

இது தவிர, இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். தான் இயற்கை விவசாயம் செய்வதுடன், இளைஞர்களையும் இயற்கை விவசாயத்தின் பால் ஈடுபடுத்தி வருகிறார். தன்னலமற்ற சேவை புரிந்து, இளைஞர்களை ஊக்குவித்து வரும் இவரிடம் ‘‘தங்களது வெற்றிக்கு காரணம் என்ன?’’ என்று கேட்டோம்.

‘ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றுத் தரும்’ என்கிறார்.

உண்மைதான். ‘வெற்றியோடு விளையாடும்’ நாகேந்திர பிரபு அவர்களை வாழ்த்துவதில் ‘ஆளுமைச் சிற்பி’ பெருமை கொள்கிறது. 