வெற்றியோடு விளையாடு – 01


டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
மாணவர்களை விஞ்ஞானியாக்கும் ஆசிரியை!

‘‘தன்னிடம் படிக்கும் மாணவர்களை அறிவாளி ஆக்க வேண்டும்’’ என்பதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் கனவாக இருக்க முடியும்.  ஆனால்,  அதைவிட ஒரு படி மேலே போய் தன்னிடம் பயிலும் மாணவர்களை அறிவாளி ஆக்குவதோடு, அறிவியல் விஞ்ஞானியாகவும் ஆக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியை.  ‘’கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை செந்தில் வடிவு’’ அவர்கள்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்.

தங்களுக்கு எப்படி இப்படி ஒரு ஆசை வந்தது? என்று கேட்டோம்!

‘‘மாணவர்களின் மீதான அன்புதான் காரணம். ஒவ்வொரு மாணவரும் ஒரு வகையில் விஞ்ஞானிதான்.  ஒவ்வொரு மாணவனிடமும் விஞ்ஞான சிந்தனைகள், கண்டுபிடிப்புக்கான சிந்தனைகள் நிறைந்து கிடக்கும்.  அதன் அளவு வேண்டுமானால்  மாணவர்களிடையே வேறுபடலாம். அவர்களிடம்  மறைந்திருக்கும் அறிவியல் திறமையை அடையாளம் கண்டு கொண்டால் போதும் அவர்களை விஞ்ஞானி ஆக்கி விடலாம்’’ என்கிறார் உறுதியாக.

சொல்வதோடு மட்டும் இல்லாமல் மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் விஞ்ஞானச் சிந்தனைகளைக் கண்டுபிடிப்பதற்காக சின்னச் சின்ன சோதனைகள் செய்கிறார்.  அவர்கள் அறிவியலின் எந்தப் பிரிவில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களை வேதியியல் பிரிவு, உயிரியியல் பிரிவு, இயற்பியல் பிரிவு என்று ஊக்குவிக்கிறார். அதன் மூலம் அவர்களுடைய விஞ்ஞான அறிவை வெளிக்கொண்டு வந்து சாதனை படைக்கத் தூண்டுகிறார். 

2005 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை தன்னிடம் பத்தாம் வகுப்பில் படித்து முடித்த அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். “கிட்டத்தட்ட 20 வருடங்களாக  நான் நடத்தும் சயின்ஸ் பாடத்தில் சென்டம் ரிசல்ட் கொடுத்து வருகிறேன்” என்கிறார் பெருமை பொங்க.  இதுதான் அவருடைய பணித் திறமைக்கு மிகப்பெரிய சான்று.

இது மட்டுமல்லாமல் மரம், செடி,  கொடிகள் மீது பற்று கொண்டவர்.  அதற்கு ஏற்றபடியே இவரிடம் தேசிய பசுமைப் படையின் பொறுப்பு வந்து சேர்ந்தது.  அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய பள்ளி வளாகத்தை சோலைவனமாக மாற்றியதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விருது பெற்றிருக்கிறார். இதையெல்லாம் தாண்டி இவருடைய ஒட்டுமொத்தப் பணிக்காக கும்பகோணத்தில் செயல்படும் வாணி விலாச சபா என்ற அமைப்பு ‘‘அறப்பணிச் செம்மல் விருது’’ வழங்கி கௌரவித்திருக்கிறது. ஆசிரியையின் அரும்பணி தொடர ஆளுமைச் சிற்பியும் வாழ்த்துகிறது.