வெள்ளோட்டம் வெல்லட்டும் – 14

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

போர்கள் தவிர்க்கப்பட வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கனவு. ராணுவ விஞ்ஞானிகளுக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் போர் மேகம் சூழும் காலத்தில், தேசத்துக் குடிமக்களை, சொத்துகளை, மண்ணைக் காக்க போர் ஆயுதங்கள் இன்றியமையாதவையாகின்றன.

ஊடகங்களில் போர்ச்செய்திகளை நாம் பார்த்து, படித்து அறிகிறோம். உலகின் ஒரு பகுதியில் நிகழும் போர், பல படிப்பினைகளை, போரிடும் நாடுகளுக்குத் தருகிறது. தொலைதூரத்து தேசங்களுக்கும் போர்ச்செய்திகள் படிப்பினைகளைத் தருகின்றன. நமது அனுபவங்களின் மூலம் நாம் படிப்பினைகளைப் பெறுகிறோம். கூடவே பிறரது அனுபவங்களின் மூலமும் படிப்பினைகளைப் பெறலாம்.

பிரமோஸ் உதயம்

1991-ல் நடந்த வளைகுடாப் போர் நிகழ்வுகளை டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட நமது இந்திய ராணுவ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வந்தனர். போரில் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்க குறைந்த உயரத்தில் அதிவேகத்தில் பறந்து, இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் (சீரியங்கு) ஏவுகணை தேசத்தின் அத்தியாவசியத் தேவை என்பதே வளைகுடாப் போர் அவர்களுக்கு கொடுத்த படிப்பினை. அந்தப் படிப்பினையின் விளைவாக உருவாக்கப்பட்டதே பிரமோஸ் சூப்பர்சானின் (மிகை வேக) க்ரூஸ் ஏவுகணை.

கூட்டுத் திட்டம்

1980-களில் இந்தியா செயல்படுத்திய ஐ.ஜி,எம்.டி.பி(IGMDP) என்ற ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டங்களின் மூலம் பெற்ற நிபுணத்துவத்தைக் கொண்டு மீமிகை வேகத் துல்லிய தாக்கு ஏவுகணையை உருவாக்குவது எனத் திட்டமிடப்பட்டது. ஆசியக்கண்டத்தில் நிலவிய அரசியல் சூழலால், இந்த ஏவுகணையை மிகவிரைவாக உருவாக்கப்பட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.

போர்விமானம் அல்லது ஏவுகணையின் வேகத்தை ஒலியின் (Sound) வேகத்தோடு ஒப்பிடுவார்கள். மாக் (Mach Number) எண்ணில் இவ்வேகம் அளக்கப்படும். ஏறக்குறைய வினாடிக்கு 344 மீட்டர் வேகத்தில் காற்றில் ஒலி அலைகள் பயணிக்கும். ஒலியின் வேகத்தில் ஒரு ஏவுகணை பறந்தால் அதன் வேகம் மாக்-1 என்று குறிப்பிடப்படும். ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறந்தால், அதன் வேகம் மாக்-2 . ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பறப்பது சூப்பர்சானிக் (மிகை வேகம்) எனப்படும். ஒலியின் வேகத்தைவிட  5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பறப்பது ஹைப்பர்சானிக் (மீமிகை வேகம்) எனப்படும். ஒலியின் வேகத்தைவிட குறைவான வேகத்தில் பறப்பது சப்சானிக் (குறைவேகம்) என்று குறிப்பிடப்படும்.

சிவதாணுபிள்ளை

சூப்பர்சானிக் வேகத்தில் பறக்கக்கூடிய ஏவுகணையை இயக்குவதற்கு எஞ்சின் தேவை. நமது ஏவுகணைத் திட்டங்களின் மூலம் திட எரிபொருளால் இயங்கும் ராம்ஜெட் (Ramjet) ஏவுகணை எஞ்சின் தொழில்நுட்பத்தில் நாம் நிபுணத்துவம் பெற்றிருந்தோம். ஆனால், திட எரிபொருளால் இயங்கும் எஞ்சினை விட திரவ எரிபொருளால் இயங்கும் ராம்ஜெட் எஞ்சின் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக செயல்திறன் (Efficient) வாய்ந்தது. திரவ ராம்ஜெட் எஞ்சினை ரஷ்யா உருவாக்கியிருந்தது. குறுகிய காலத்தில் ஏவுகணையை உருவாக்க இரு நாடுகளின் கூட்டுத்தொழில்நுட்பத்தில் இயங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இதற்காக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. 50.5% இந்திய மூதலீடும் 49.5% ரஷ்ய முதலீட்டோடும் புதுதில்லியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாக விஞ்ஞானி ஆ.சிவதாணுபிள்ளை பொறுப்பேற்றார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தமிழ் வழியில் கல்வி கற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.

ரஷ்யாவின் எஞ்சின் தொழில்நுட்பம், இந்தியாவின் ரேடார், துல்லிய தாக்கு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் என இரு நாட்டுத் தொழில்நுட்பக் கூட்டணியில் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பிரமோஸ் ஏவுகணையின் வேகம் மாக்-3! ஹைப்பர்சானிக் வேகத்தில் செல்லும் பிரமோஸ்-II ஏவுகணையின் ஆராய்ச்சிகள் தற்போது தொடர்கின்றன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராயுதம், பிரம்மாஸ்திரம் என்ற ஒலிக்குறிப்பு வரும்படியாக, பிரம்மபுத்ரா (இந்தியா) மற்றும் மோஸ்க்வா (ரஷ்யா) ஆகிய நதிகளின் பெயர்களை ஒன்றிணைத்து பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

உலக அளவில் சிறப்பிடம்

பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கியதின் மூலம் உலகின் அதிக வேக துல்லியத்தாக்கு ஏவுகணையைக் கொண்ட நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது.

 பிரமோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்தும், போர் விமானத்திலிருந்தும், போர்க் கப்பலிலிருந்தும், நீர்மூழ்கிக்கப்பலிலிருந்தும் ஏவி, கடலிலும் நிலத்திலும் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கலாம் என்பது மிகச்சிறப்பு. பிரமோஸ் ஏவுகணை நமது பாதுகாப்புப் படைகளில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. பிற நாடுகளும் பிரமோஸ் ஏவுகணையைத் தங்களது ராணுவத்தில் சேர்க்கத் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே, பிலிப்பைன்ஸ் நாடு பிரமோஸ் ஏவுகணையை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பிற நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா, ராணுவத் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கிறது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

இந்தியா உருவாக்கிய ஏவுகணைகளைப் பற்றி பார்த்தோம். ஏவுகணைகளை எப்படிச் சோதனை செய்கிறார்கள்?

(சோதனை தொடரும்)