சமூகப் பார்வை – 28

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் 

ன்றைக்குப் பெண்கள் பல்வேறு துறைகளில் பரிணமிக்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். என்றாலும், தொடர்ந்து பாலினப் பாகுபாட்டிற்கு ஆளாகி வருகிறார்கள். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பாகுபாடு தொடர்கிறது. இத்தகைய சூழலில்தான், “பாலினச் சமத்துவத்துக்கான  புதுமை மற்றும் தொழில்நுட்பம்” (DigitALL: Innovation and technology for gender equality) என்பது, இந்தாண்டுக்கான மகளிர் தினத்தின் மையக் கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையக் கருத்தானது, டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைவருக்குமானது என்பதோடு, தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பாலின சமத்துவ ஆர்வலர்களை ஒன்றிணைத்து, ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு டிஜிட்டல் அணுகலைச் சாத்தியப்படுத்துவதற்கு வலியுறுத்துகிறது. பாலின சமத்துவம் இல்லாமல் நிலையான மற்றும் சமமான எதிர்காலம் சாத்தியமில்லை.

பாலின பாகுபாடு

“உலகமானது, பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 132 ஆண்டுகள் ஆகும்” என்று “உலகளாவிய பாலின அறிக்கை – 2022” சொல்கிறது. குறிப்பாக, தெற்காசியா நாடுகள் பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 197 ஆண்டுகள் வரை ஆகலாம் என அது கணித்துள்ளது. உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (2022), மொத்தம் உள்ள 146 நாடுகளில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் இந்த முக்கியமான அறிக்கையில், இந்தியா அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவுகள் (117) மற்றும் பூட்டான் (126) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்னால் உள்ளது. இது கொஞ்சம் அவமானகரமானது. அதே நேரத்தில் எந்த நாடும் முழு பாலின சமத்துவத்தை அடையவில்லை. என்றாலும், ஐஸ்லாந்து  உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் உள்ளன. அயர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடம்.

பெண்களுக்கான பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்தல், அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் பாலின சமத்துவத்தை வரையறுத்து இந்த அறிக்கை, தயாராகியிருக்கிறது. தற்போது நிலவும் பாலினப் பாகுபாடு அப்படியே டிஜிட்டல் உலகிலும் செயல்படத் துவங்கியிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் இந்தாண்டு மகளிர்தின மையக்கருத்தின் நோக்கம்.

டிஜிட்டலில் பெண்கள்

இன்று  நமது வாழ்வின் பெரும்பான்மையான நடவடிக்கைகள் டிஜிட்டல் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.  இணையமும் மொபைல் போனும் இதனைச் சாத்தியமாக்கி உள்ளன. இந்த வளர்ச்சியானது ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவருக்குமானதாகவும், அனைவரோடும் இணைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்று, டிஜிட்டல் வளர்ச்சியிலும் பாலினப் பாகுபாடு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பெண்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்களே, இணையதளத்தை உபயோகப்படுத்துகின்றார்களே என்று நாம் நினைக்கலாம். மொபைல் போன் வைத்துள்ள அனைவரிடமும் இணையதளம் உள்ளதா என்றால், இல்லை என்பது தெரியவரும். 

உலக அளவில்

ஐ.நா.சபையின் பெண்கள் அமைப்பானது, உலக அளவில் 37 சதவிகிதப் பெண்கள் இணையத்தைப் பயன்படுத்தவில்லை என்கிறது. 46 சதவிகிதச் சிறுவர்கள் தங்களின் மொபைலில் இணைய வசதியைப் பயன்படுத்தும் பொழுது சிறுமிகளில் 27 சதவிகிதத்தினர் மட்டுமே இணைய வசதியைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக மாறிவரும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பில் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது. இது பொருளாதாரத்தில் பாலின இடைவெளியை அதிகரிக்கச் செய்யும்.  

இந்திய அளவில்

இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (53.9%) மொபைல் போன்களை வைத்திருக்கிறார்கள், ஆனால் இவர்களில் 22.5 சதவிகிதம் பேர் மட்டுமே நிதி பரிவர்த்தனைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதாகவும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தெரிவித்துள்ளது. ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த பெண்களில் வெறும் 8% பேர்தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

“இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்’’ என்று ஆக்ஸ்பாம் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. நாட்டில் ஆண்களை விடப் பெண்கள் மொபைல் போன் வைத்திருப்பது 15 சதவிகிதம் குறைவாகவும், மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது 33 சதவிகிதம் குறைவாகவும் உள்ளது என்றும் கூறியுள்ளது.

“ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதம் 13 சதவிகிதம் இருந்தபோதிலும், கிராமப்புற மக்களில் 31 சதவிகிதத்தினர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 67 சதவிகிதத்தினர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்” என்று “இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை -2022” கூறுகிறது.

“பெண்களின் மொபைல் போன் பயன்பாடு குறைவாக இருப்பதால், இணையப் பயன்பாட்டில் பாலின இடைவெளி இருக்கும்” என்று பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் பெண்களை முன்னேற்றுவதற்கான முயற்சி அமைப்பின் நிபுணர் சோனா மித்ரா கூறுகிறார்.

வேலைவாய்ப்பு

பொதுவாகவே, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. 2017 – 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 21 மில்லியன் பெண்கள் வேலை இழந்தனர் என்று தனியார் ஆராய்ச்சி நிறுவனமான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சமூக வலைப்பின்னல் தளமான LinkedIn இன் 2022ஆம் ஆண்டு அறிக்கையானது, “டிஜிட்டல் திறன்கள் தேவைப்படும் வேலைவாய்ப்பில், பெண்கள் வாய்ப்புகளை அதிகமாக இழக்கிறார்கள்” என்கிறது. டிஜிட்டல் சார்ந்து இந்தியப் பெண்களின் தற்போதுள்ள நிலையினை சரிசெய்யாவிட்டால் அது அவர்களின் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து பாதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கிறது.

பாதிப்பு

பெண்களுக்கு இணைய வசதி கிடைக்காதது டிஜிட்டல் பாலின இடைவெளியை அதிகரிக்கின்றன. கிராமம் முதல் நகரம் வரை சமமான ஊதிய உயர்வின்மை நிலவிவரும் சூழலில், இத்தகைய அறிவுசார் பற்றாக்குறை ஏற்படும் பொழுது தானாகவே மேலும் பெண்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக, ஆண்களைச் சார்ந்து இருப்பவர்களாக மாறுவார்கள். இது பெண்களை அதிகாரப்படுத்தும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.

இன்று இருக்கும் கணிப்பொறியியல் மற்றும் நிரலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரைப் பெண்களின் உழைப்பு பெருமளவு இருக்கிறது என்கிறார் இல்லியனொஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் மார் ஹிக்ஸ். ஆனால், “அவர்களது முயற்சி மிகக்குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ஸ்டெஃபனீ ஷீர்லி. இவர், 1960களிலேயே முழுக்க முழுக்க பெண்களால் இயங்கும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்தவர். இணையத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவிலிருந்ததாக அவர் கூறுகிறார்.

பாதுகாப்பு இல்லை

இப்போது டிஜிட்டல் வெளியிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.  “பெண்கள் மீதான டிஜிட்டல் வன்முறை“ அதிகரித்து வருகிறது.  சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் 10 பெண்களில் ஆறு பேர் ஏதேனும் ஒரு வகையான ஆன்லைன் வன்முறையை அனுபவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.  2020 ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதில் ஆண்களை விடப் பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் பலன்கள் அளிப்பவை, தவிர்க்க முடியாதவை என்ற பார்வையைப் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு அடிப்படை டிஜிட்டல் அறிவு இருந்தால் அவர்கள் தங்களின் பெண்குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க உதவுவார்கள்.

என்ன செய்யலாம்

கல்வி, பயிற்சி, வேலை ஆகிய மூன்றிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். “பெண்ணால் முடியுமா?” என்ற கேள்வி எங்கும், எப்போதும் எந்தச் சூழலிலும் எழக்கூடாது.  டிஜிட்டல் வெளியில் நிலவும் ஆணாதிக்கத்தை மாற்ற டிஜிட்டல் அடிப்படை அறிவை ((Digital Literacy) மகளிர் மத்தியில் பரவலாக்க வேண்டும்.  

 டிஜிட்டல் திறன்கள் இல்லையென்றால் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் பெண்களால் வேலைவாய்ப்பைப் பெற முடியாது. இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண ஏராளமான கலந்துரையாடல்களை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு சமூக விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஒத்துழைத்தல் அவசியம்.

எந்த ஒரு தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு புத்தாக்கமும் பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும், அல்லது பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.   புதிய சிந்தனைகளை வளப்படுத்த ஆண்களும் பெண்களும் இணைந்த பன்முகத்தன்மை அவசியமாகும். அது மாத்திரமின்றி சமூகம் பற்றிய புரிதலுடனான வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும்.  எனவே சமூக வெளி, டிஜிட்டல் வெளி என எந்த ஒரு வெளியாக இருந்தாலும் அந்த வெளியில் பெண்களுக்கான இடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  அனைத்திலும் மகளிரின் பங்களிப்பை அதிகப்படுத்துதல் மட்டுமே பாலினப் பாகுபாட்டினை அகற்றுவதோடு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும். =