இளைஞர் உலகம்
உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

சென்ற     இதழில் பார்த்த அசட்டை முகத்தினரின் 5ஆவது நற்பண்பாகிய “கடவுளின் அன்பை, அகமகிழ்வை, அமைதியை உணரும்” பண்பின் இன்னும் சில அம்சங்களைக் காண்போம்.

அகமகிழ்வு உடையவர்கள்

“மனித வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சிதான்” என்கிறார் தலாய்லாமா. இந்த மகிழ்ச்சியை நாம் புற மகிழ்ச்சி, அக மகிழ்ச்சி என பிரிக்கலாம். இவற்றுள் புற மகிழ்ச்சி நிலையற்றது. காரணம்், அது நமக்கு வெளியே நடப்பவைகளால் கட்டுப்படுத்தப்படுவதாகும். நமக்கு ஒரு நல்ல செய்தி வந்தால் அது நம்மை இந்த மகிழ்ச்சியால் நிரப்பும்; அதேவேளையில் ஒரு துக்க செய்தியை கேட்டதும், இந்த மகிழ்ச்சி காற்றாய் பறந்துவிடும். ஆனால் அகமகிழ்வு நமக்கு உள்ளே இருப்பது. “அகநக நட்பதே நட்பு” என்பதுபோல அகமகிழ்வுதான் உண்மையான மகிழ்ச்சியாகும். இந்த மகிழ்ச்சியை நாம் உள்ளே நமக்குள்ளேதான் தேடிக் கண்டுபிடிக்க முடியும். இதனை ‘பேருவகை’ எனவும் கூறுவர். இந்த மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவர்கள் ‘எல்லாம் நன்மைக்கே’ என வாழ்பவர்கள். கடந்ததை நினைத்தோ, வருவதை எண்ணியோ கவலைப்படாதவர்கள்; நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். இந்த மகிழ்ச்சியை இவர்களிடமிருந்து யாரும் பிரித்துவிட முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் இவர்கள் அசைக்கப்படுவதில்லை.

இன்றைய உலகில் நம்பர் ஒன் நோயாக இருப்பது மாரடைப்பு. புற்றுநோய் 2-ஆவது இடத்தில் உள்ளது. மன அழுத்தம் 3-வது இடத்தில் உள்ளது. என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் மனச்சோர்வு நோயாளிகளைப் பார்க்கும் போது சீக்கிரத்தில் மன அழுத்தம் என்னும் இந்த மனச்சோர்வு முதலிடத்தைப் பிடித்துவிடுமோ என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். தற்கொலை செய்யும் நோயாளிகளில் 60% முதல் 80% வரையில் மன அழுத்தம் உடையவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். எனவேதான் இப்போது ஆங்காங்கே சிரிப்பு கிளப்புகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

ஒருமுறை மனஅழுத்தத்தால் மகிழ்ச்சியை தொலைத்த ஒருவர் மருத்துவரை நாடிச் சென்றார். இவரைப் பார்த்த மருத்துவர், ‘‘மன அழுத்தத்திற்கு மருந்து என்று எதுவும் இல்லை; ஆனால் நான் சொல்வதைச் செய்தால் உங்கள் மகிழ்ச்சிக்கண் திறக்கும்; மன அழுத்தம் மாறிவிடும்’’ என்றார். ‘‘அதாவது காலையில் எழுந்தவுடன் ஒரு அரைமணி நேரம் வெளியே நடைபயிற்சி செய். நடந்து போகும் போது நீ கண்ட நபருக்கெல்லாம் வணக்கம் சொல். அவர்கள் பதிலுக்கு ஏதாவது செய்தால் நல்லது. இல்லையென்றால் நீ நகர்ந்து போய்க் கொண்டே இரு. பதிலுக்கு மற்றவர்கள் ஏதாவது சொன்னால் நீ அவர்களோடு உறவாடு’’ என்று சொல்லி அனுப்பினார்.

மன அழுத்தம் உள்ளவர் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் கால்வைத்ததும் பக்கத்து வீட்டிலுள்ளவர் கண்ணில் தெரிகிறார். இவர் முதலில் அவரோடு பேசத் தயங்குகிறார். ஆனால் இவர் திரும்பத் திரும்ப வணக்கம் சொன்னதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரின் மனம் இளகி அவரும் இவருக்கு வாழ்த்து சொல்லுகிறார்.

அடுத்து இவர் ஒரு பெண்மணி வீட்டு முற்றத்தை சுத்தம் பண்ணுவதைப் பார்க்கிறார். அவள் இவரது பக்கத்து வீட்டிலேதான் வசிக்கிறாள். அவளுக்கு இவர் வாழ்த்து சொல்கிறார். அந்தப் பெண்மணி இவரை வியப்புடன் பார்க்கிறார். இவரது அப்பாவை நமது ஹீரோ நலம் விசாரிக்கிறார். அந்த அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது.

வீதி ஓரக்கடை ஒன்றில் டீ குடிக்கும் ஒருவரிடம் அடுத்து மன அழுத்தம் உள்ளவர் நலம் விசாரிக்கிறார். அவர் இவருக்கு டீ கொடுக்க முன்வருகிறார். அவரோடு சிறிது பேசிவிட்டு நமது ஆள் அங்கிருந்து நகருகிறார். இப்படி ஒவ்வொரு நபரிடமும் பேச, பேச இவரது மன அழுத்தம் குறைவதைக் காண்கிறார்.

இப்போது ஒருவர் ஒரு பைக்கை நிறுத்தி ஏதேதோ பேசுவதைக் கவனிக்கிறார். அவர் பதட்டத்துடன் காணப்படுகிறார். எனவே அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார். அவரோ வண்டியில் பெட்ரோல் தீர்ந்ததால் கையை பிசைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் “நேரே போனால் 3 கிலோ மீட்டரில் பெட்ரோல் நிலையம் இருக்கிறது; வலது பக்கம் போனால் 300 அடி தூரத்திலே பெட்ரோல் போடலாம்” என்கிறார். அவர் இவருக்கு நெஞ்சார நன்றி சொல்கிறார்.

இறுதியாக வழியோரம் சோகத்துடன் அமர்ந்திருக்கும் ஒருவரை சந்திக்கிறார். இவரது கனிவான பேச்சு அவரை நெகிழச் செய்கிறது. “யார் யாரெல்லாமோ கடந்து போகிறார்கள். யாரும் என்னை கண்டுகொள்வதில்லை; எனக்கு உணவு வேண்டாம்; யாராவது ஒரு அன்பு வார்த்தை சொல்லமாட்டார்களா என ஏங்கினேன்; நீங்கள் வந்து நலம் விசாரித்தது கடவுளே இறங்கி வந்து அவரது அன்பை, மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டது போலிருந்தது” என்றதும், இவருக்குள் மகிழ்ச்சியை ஊற்றெடுத்தது. மகிழ்ச்சியை உள்ளே தேடாமல் போனேனே!’’ எனக்கூறி மகிழ்ந்தார்.

அவரது மன அழுத்தம் மறைந்து வாய்விட்டு சிரித்தார். ஏனென்றால் மகிழ்ச்சி என்பது நமக்குள்ளே தேடக்கூடிய ஒன்று என்பதை, அந்த இரகசியத்தை இவர் கண்டுகொண்டார். அசட்டை முகத்தினரிடம் இருக்கும் இந்த நற்பண்பு போற்றுதற்குரியது. நாம் கண்டு பின்பற்றத் தகுந்தது. =