வெள்ளோட்டம் வெல்லட்டும் – 11 

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

திரி நாட்டுக் கப்பலையும், நீர் மூழ்கிக்கப்பலையும் போரில் அழிக்க நீர் ஏவுகணைகள்
(Torpedos)  பயன்படுத்தப்படுகின்றன. கடல் ஏவுகணைகள் வடிவமைக்கப்படும் போது, பல தொகுதிகளாகச் சோதனை செய்யப்பட்டு, பின் முழு ஏவுகணையாக ஒருங்கிணைக்கப்படும்.

ஆயுத சோதனை அவசியம்

ஆயுதங்கள் போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஆயுதங்களை இயக்கும் போது அவை தவறாமல் இயங்க வேண்டும். தவறி, ஆயுதங்கள் பொய்த்தால் அல்லது இலக்கைத் தப்ப விட்டால், பெரும் பின் விளைவுகள் ஏற்படும். தேச மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே கடுமையான சோதனைகளைக் கடந்த பிறகே ஆயுதங்கள் இராணுவத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

ஏரியில் ஏவுகணை

நீர் ஏவுகணைகளை ஏவி சோதிக்க நீர் நிலைகள் தேவை. மிகப்பெரிய நீர்த்தொட்டியை அமைத்துச் சோதனை செய்வது பெருத்த பொருட்செலவை ஏற்படுத்தும். பிறகு எப்படி நீர் ஏவுகணைகள் சோதிக்கப்படுகின்றன?

தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணைக்கட்டுப் பகுதியிலுள்ள, நாகார்ஜுன சாகர் ஏரியில் தான் இந்தியாவில் நீர் ஏவுகணைகள் சோதிக்கப்படும் சோதனைக்கூடம் அமைந்திருக்கிறது. 4 கி.மீ நீளம் மற்றும் 2 கி.மீ அகலமுள்ள பகுதியில் நீர் ஏவுகணை செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 30 முதல் 60 மீட்டர் வரை ஆழம் கொண்டது இந்த ஏரி.

ஏரிக்கரையில் ஏவுகணைகளை சோதனைகளுக்குத் தயார்படுத்தவும் பராமரிப்புப் பணிகளுக்காகவும் குளிர்பதனம் செய்யப்பட்ட பணிமனையும் உண்டு. தயார்படுத்தப்பட்ட ஏவுகணைகளையும் சோதனைப் படகுகளில் வைத்து ஏரிக்கு கொண்டு செல்ல ரயில் பாதை அமைப்பும் இங்கு உண்டு.

நீர் ஏவுகணை கடல் சோதனை

ஏரியில் சோதனைகள் முடிந்த பின்பு கடலில் நீர் ஏவுகணைகள் சோதிக்கப்படும். போரில் ஏவுகணை கடலில் தான் பயன்படுத்தப்படும். எனவே, கடல் நீரில் அதன் அலைகள் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் ஏவுகணை சோதிக்கப்படுவது அவசியம்.

கடலில் நீர் ஏவுகணைகளை சோதிப்பதற்காக ஒரு மிதக்கும் சோதனைக்கூடம் உண்டு. இந்தச் சோதனைக்கூடத்திலிருந்து நீர் ஏவுகணைகள் செலுத்தப்படும். வெடிபொருள் இல்லாமல் சோதிக்கப்படுவதால், சோதனைக்குப் பின்பு நீர் ஏவுகணைகள் மீட்கப்பட்டு மறுபடியும் அடுத்த சோதனைக்கு பயன்படுத்தப்படும்.

50 மீட்டர் நீளமுள்ள இந்த சோதனைக் கப்பல், மணிக்கு 15 கடல் மைல் வேகத்தில் செல்லும். ராணுவ விஞ்ஞானிகளும் கடற்படை வீரர்களும் இந்தக் கப்பலில் நீர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்தக் கப்பல் தொடர்ந்து 4 நாட்கள் இயங்கும். ஏறக்குறைய 2000 கடல் மைல் தூரம் தொடர்ந்து பயணிக்க வல்லது. இந்தக் கப்பல், ‘நீர் ஏவுகணை செலுத்து மற்றும் மீட்பு கப்பல்’ (Torpedo Launch Recovery
Vessel (TLRV) என்ற தொழில்நுட்பப் பெயரில் அழைக்கப்ப்டுகிறது.

இப்படியெல்லாம் சோதிக்கப்பட்டு செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பின்பே, கடற்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன நீர் ஏவுகணைகள்.

அது சரி, வான் ஏவு கணைகள் (Missiles) எப்படிச் சோதிக்கப்படுகின்றன?

(சோதனை தொடரும்)