வெற்றித் திசை


முத்து ஆதவன் வை.காளிமுத்து

மிதிவண்டிக்கு காற்று பிடிக்கும் கடைக்கு ஒரு இளைஞர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார். நல்ல படித்த இளைஞர். நவீன மிதிவண்டி அது. கடைக்காரர் வேறொரு மிதிவண்டிக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்தார். ‘‘ஐந்து நிமிடம் பொறு தம்பி நான் காற்றுப் பிடித்துத் தருகிறேன்’’ என்றார்.

அந்த இளைஞர் இரண்டு நிமிடம் காத்திருந்தார். பிறகு ‘ஐயா நானே பிடித்துக் கொள்கிறேன்’ என்றார். ‘உனக்குத் தெரியாது தம்பி சற்று பொறு வருகிறேன்’ என்றார். அதற்கு அந்த இளைஞர் ‘‘என்ன ஐயா இது பெரிய கம்பு சுழற்றும் வேலையா? இதுக்கு போய் காத்துகிட்டு இருக்கணுமா? காற்று பிடிக்கக்கூட கத்துகிட்டா வரணும்? காற்று ஓஸை எடுத்து மவுத்தில் வைத்து அழுத்தினால் புஸ் என்று காற்று ஏறிவிடும் இதுக்கு போயி… நீங்க உங்க வேலைய பாருங்க நான் காற்று பிடித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

‘சரி தம்பி பிடித்துக் கொண்டு போங்க’ என்றார்.கடைக்காரர். அந்த இளைஞர் குனிந்து காற்று ஓஸை எடுத்து மவுத்தில் வைத்து அழுத்தி பிடித்தார்.உஸ்… என்று மெல்லிய சத்தத்துடன் காற்று ஏறிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் *ட…ம்ம்…* என்ற பெரிய வெடிச்சத்தம். அனைவரும் ஆடிப் போய்விட்டனர். அந்த இளைஞரின்  முகத்திற்கு மிக அருகில் டயர் வெடித்துச் சிதறியது. கடைக்காரர் ஏளனமாய் அந்த இளைஞரை பார்த்தார். அந்த இளைஞன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் விழித்துக் கொண்டிருந்தார். ‘என்ன தம்பி பெரிய கம்பு சுழட்டுற வேலையா?’ என்றாயே! ‘‘ஆமாங்கய்யா என்னை மன்னித்து விடுங்கள், எந்த ஒரு வேலையையும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. நாம் டிப்டாப்பாக இருக்கலாம், நிறைய படித்திருக்கலாம் ஆனாலும் எப்படிப்பட்ட சாதாரணமான வேலையாக இருந்தாலும் அதற்கும் சில நுட்பங்கள் இருக்கும், முறை என்று ஒன்று இருக்கும் அதெல்லாம் பார்த்து தான் செய்ய வேண்டும், எந்த வேலையையும் அலட்சியமான வேலையாக நாம் பார்க்க கூடாது, அந்த தொழில் செய்பவர்களையும் அலட்சியமாக பார்க்கக் கூடாது. அந்தந்தத் தொழில் செய்பவர்களை மதிக்க வேண்டும், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்’’ ஐயா என்றார்.

‘‘நல்லது தம்பி! இந்த டியூப்பின் கொள்ளளவு எவ்வளவு? எவ்வளவு நேரம் காற்றுப் பிடித்தால் காற்று போதுமானதாக இருக்கும்? அளவுக்கு அதிகமாக காற்று நிரப்பினால் என்ன ஆகும்? என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும், அதனால் எந்த வேலையும் சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது, அதற்காக செய்யவே முடியாத வேலை என்றும் எதுவும் இல்லை. எதற்கும் பழக்கம் ஒன்று இருந்தால் போதும், இப்பவே நீயும் இந்த வேலையைக் கிட்டத்தட்ட கத்துக்கிட்ட மாதிரி தான், வேண்டுமென்றால்  முன்னாடி டயருக்கும் காற்று பிடித்துப் பாரேன்..’’ என்றார்.

‘‘ஐயா! ஆளை விடுங்க இந்த டயரையும், டியூப்பையும் மாற்றி கொடுங்க…இந்தக்காசைப் பிடிங்க’’ என்று நடையைக்கட்டினார் அந்த இளைஞர்.

அதனால் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எந்த தொழிலானாலும் பழக்கத்தால் கற்று கொண்டு விட முடியும். அதற்கு முன்னால் இதுதானே, என்னால் முடியாதா? என்று அலட்சியமாக அந்தத் தொழிலை செய்ய நினைத்தால் அது இயலாது என்ற உண்மையை புரிந்து கொள்வதன் மூலம் அந்த தொழில் செய்கிறவர்களை குறைவாக எடை போடக்கூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, இது சாத்தியமேயில்லாதது, முடியவே முடியாதது என்று நாம் நினைக்கின்ற விசயங்களைக்கூட, திட வைராக்கியமிருந்தால், என்னால் இது முடியும் என்ற மன உறுதியிருந்தால், சாத்தியமாக்க முடியும் என்பதை இனிவரும் ஒரு நிகழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

“அருமை உடைத்துஎன்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”

இந்த செயல் அரிய செயல்,என்னால் இது முடியாதது என்று எண்ணி மனத்தளர்ச்சி கொள்ளக்கூடாது. நாம் எந்த ஒரு செயலிலும் ஊக்கத்தோடு இறங்கி முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குத்தக்க பெருமை வந்தே தீரும் என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.

நாற்பது அடி உயர கொடிமரம் அது. இரும்புக்குழாயால் ஆனது. அடுத்த நாள் கொடியேற்று நிகழ்வு. இன்று பார்த்தால் அந்தக் கொடி மரத்தின் பழைய கயிறு அறுந்து போய் இருந்தது. அந்த அறுந்து போன பழைய கயிற்றுக்கு பதிலாக புதிய கயிறு ஒன்று வாங்கி தயாராக இருந்தது. அந்த கயிற்றின் ஒரு நுனியை கொடி மரத்தின் உச்சி நுனியில் உள்ள ஒரு வளையத்தில் நுழைத்துக் கொண்டு வந்து கயிற்றின் இரண்டு நுனிகளையும் இணைக்க வேண்டும். தரையில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் குழாயோடு கொடிமரம் நான்கு போல்ட் நட்டுகளால் பொருத்தப்பட்டிருந்தது.

அந்தப் போல்ட்டுகளைக் கழற்றி கொடி மரத்தை கீழே சாய்த்து எடுத்து கயிற்றைப் பொருத்தி மீண்டும் போல்டால் இணைத்தால் சரி.

 ஆனால் அந்த நான்கு போல்ட்களும் நீண்ட நாட்கள் ஆனதால் துரு ஏறி என்னமுயன்றும் கழற்ற முடியாத  நிலையில் இருந்தது. நாளை காலை கொடியேற்றும் விழா. என்ன செய்வது? அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த நேரம் அந்த இடத்தில் கூடியிருந்தவர்களில் சில சிறுவர்களும் இருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் ‘‘ஐயா கைற்றின் நுனியை கொடுங்கள், நான் ஏறி கட்டி விடுகிறேன்’’ என்றான். ‘‘வேண்டாம் தம்பி வேறு சிந்திப்போம்’’ என்று அங்கு உள்ளவர்கள் கூறினர். ‘‘உயரமான மரம் வழு, வழு இரும்பு பைப் என்பதால் வழுக்கும், மேலும் உயரம் என்பதாலும் நுனிப்பகுதி சிறிய குழாயின் இணைப்பு என்பதாலும் வளையும், இப்படியும், அப்படியும் சாய்ந்து அசையும் உனக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றனர். ஆனால் அந்த சிறுவன் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நானும் முயற்சிக்கிறேன் என்று பிடிவாதமாக இருந்தான். கிட்டத்தட்ட பாதிவரை சென்றான். அவனுக்கு வழுக்கும் குழாய் என்பதால் சரியாக பிடித்தம் கிடைக்கவில்லை. அவனால் அதற்கு மேல் ஏற முடியவில்லை. கீழே இருந்தவர்கள் ‘‘வேண்டாம் தம்பி கீழே இறங்கி வா!’’ என்று கூறினர். இவர்கள் சத்தத்தால் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி விட்டான் அந்த சிறுவன்.

அடுத்து இன்னொரு சிறுவன்  பதின்மூன்று வயது இருக்கும். நான் முயற்சிக்கிறேன் என்று அடம்பிடித்தான். ‘‘அப்பா!..சாமி!.. அதெல்லாம் ஒன்றும்  வேண்டாம்  வேறு வழியில் யோசிக்கலாம்’’ என்று அனைவரும் கூறினார்.  ஆனால் அந்த சிறுவன் அதையெல்லாம் காதில் வாங்காமல் ஒரு பெரியவரின் கையிலிருந்த  கயிற்றை பிடுங்கிக் கொண்டு விருட்டென்று மேலே ஏறிவிட்டான். பாதிக்கு மேல் ஏற முடியாமல் சற்று தடுமாறினான். கீழே இருந்தவர்கள் இட்ட கூச்சலையெல்லாம் அவன் பொறுப்பெடுத்தவில்லை. மீண்டும் முயற்சித்து மெல்ல, மெல்ல மேலே குழாயைப் பற்றி ஏறினான். இறுதியில் அந்த வளையத்தில் கயிற்றின் நுனியை நுழைத்தேவிட்டான். பிறகு மெது, மெதுவாக கீழே இறங்கி வந்தான். அனைவரும் நிம்மதி அடைந்ததார்கள்.

உடல் பலம் மனிதனுக்கு ஒருபொருட்டல்ல. உள்ளத்தின் பலமே பொருட்டாகும் என்பதற்கு நம்தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மெலிந்த உடல், மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு எளிமையிலும் எளிமை இந்த உருவம் தான் தனது மனோ பலத்தால் ‘எமது சாம்ராஜ்யத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லை’ என்று கொக்கரித்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டி அடித்து பாரதத் தாயின் அடிமை விலங்கை ஒடித்து எறிந்தது.

புதிய இந்தியாவைப் படைக்க அந்தக் கொடிமரத்தில் நெஞ்சுரத்தோடு ஏறி சாதித்த சிறுவனைப்போல வினைத்திட்பம் வாய்ந்த நூறு இளைஞர்களைத்தான் அன்று சுவாமி விவேகானந்தர் கேட்டார். அவர் கனவு இன்றைக்குப் பலித்திருக்கிறது. இன்றைக்கு நூறல்ல லட்சக்கணக்கான இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள் புதிய ஒளிக்கீற்றுகளாக என்பது மகிழ்ச்சிக்குரியதே; சிந்திப்போம்!=