வெள்ளோட்டம் வெல்லட்டும் – 8

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

யணங்களில் நமது தேவைக்கேற்ப உடைமை களையும் பொருட்களையும் கூடவே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வாகனத்தில் பெட்டி உள்ளிட்ட சாமான்களை  ஏற்றிக் கொண்டு பயணம் செய்கிறோம். அந்தப் பெட்டிகளால் பயணிகளுக்கு ஆபத்துகள் ஏற்படவும்  வாய்ப்புண்டு. எப்படி?

சாமான் மோதல் சோதனை

காரின் பின் பகுதில் (Boot Space) பெட்டி உள்ளிட்ட சாமான்களை வைக்கும் வசதி உண்டு. வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகனம் திடீரென நிற்கவோ (Sudden Brake) அல்லது எதன் மீதாவது மோதவோ நேரிடலாம். அந்த சமயங்களில் பின் பகுதியில் உள்ள பெட்டிகள் காரின் பின் இருக்கையில் வேகமாக மோதி அதை சேதப்படுத்தவும், உட்கார்ந்திருக்கும் பயணிகளின் மீது மோதி அவர்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு. இந்த பாதிப்பை அறிவதற்காக சாமான் மோது சோதனைகள் (Luggage Impact Tests) செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் முடிவுகளை ஆராய்ந்து அதற்கேற்ப காரின் பின் இருக்கை பலப்படுத்தப்படும்.

நெடுஞ்சாலைத் தடுப்பு சோதனை:

நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது இரு பக்கங்களிலும் பாதுகாப்புத் தடுப்புகளை (Crash Barrier / Guard Rails) நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் பாதுகாப்புத் தடுப்புகள், பாதை விலகும் வாகனங்களின் மோதலைத் தாங்கி, அந்த வாகனங்கள் சாலைக்கு வெளியே உள்ள மரங்களில், பாறைகளில்  மோதாமல் அல்லது நீர் நிலைகளில் நுழையாமல் தடுக்கும். பாதுகாப்புத் தடுப்புகள் மோதலின் விசையை தாங்குகிறதா என்பதை அறியவும் பல சோதனைகள் உண்டு. கார், பேருந்து என எடையில் வேறுபட்ட வாகனங்கள் பல கோணங்களில் (Angles) தடுப்புகளில் மோதுவதால் ஏற்படும் பாதிப்புகளை சோதனைகள் மூலம் உறுதி செய்வார்கள். இதற்காக சோதனைச் சாலைகளில் பாதுகாப்புத் தடுப்புகளை அமைத்து அதில் வாகனங்களை மோதச்செய்து சோதிப்பார்கள்.

பாதுகாப்புத் தடுப்புச் சோதனை

மத்திய பிரதேசத்தின் இந்தூருக்கு அருகில் உள்ள நாட்ராக்ஸ் என்ற தேசிய வாகன சோதனை சாலைகள் (National Automotive Test Tracks – NATRAX) நிறுவனத்தில் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. 900 கிலோ எடையுள்ள கார் முதல் 13000 கிலோ எடையுள்ள பேருந்து வரை, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் 15 முதல் 20 டிகிரி கோணத்தில் பாதுகாப்புத் தடுப்பில் மோதினால் ஏற்படும் விளைவுகள் பல சோதனைகளில் ஆராயப்பட்டுள்ளன.

பேருந்து சரிவு சோதனை

பயணங்களில் ஜன்னலோர இருக்கை பலருக்கு பிடித்தமானது. அதிலும் மலைப்பாதையின் வளைவுகளில் பேருந்தின் ஜன்னலோரப் பயணம் அழகானது. பிற வாகனங்களை சோதிப்பது போலவே பேருந்து பயணத்தை பாதுகாப்பாக்க பல சோதனைகள் உண்டு. பேருந்து வளைவுகளில் திரும்பும் போது சாய்ந்து சரிந்து உருளுமா? என்பதையும் சோதிக்கிறார்கள். எப்படி? பேருந்தை ஒரு மேடையில் நிறுத்தி, அந்த மேடையை ஒரு புறமாக சரிப்பார்கள். பேருந்து எவ்வளவு கோணம் வரை தனது சமநிலையை தக்க வைக்கிறது (Tilt Stability) என்பதையும், அப்படி சரிந்து உருண்டால் (Rollover Test) பேருந்தின் சுற்றுச்சுவரும் கூரையும் பாதிப்பை எப்படி தாங்குகின்றன என்பதையும் இந்த சோதனையின் மூலம் உறுதி செய்வார்கள். ஏறக்குறைய 60 டிகிரி வரை பேருந்தை சாய்த்து சோதிப்பார்கள். இந்த சோதனை வசதிகள் இந்தியாவில் உண்டு. பூனேவிலுள்ள மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம்,  நாட்ராக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த சரிவு மேடை (Tilting Platform) சோதனை வசதி உள்ளது.

இப்படி பல சோதனைகளைக் கடந்த பின்பே பொதுவெளியில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

போர்க்கப்பல், நீர்மூழ்கிக்கப்பல் போன்றவை பெருங்கடல்களில் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. நிலத்தின் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கடற்பரப்பில், எல்லை பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, மீனவர் பாதுகாப்பு என நீளும் போர்க்கப்பல்களின் சேவை இன்றியமையாதது. அதிலும் விமானந்தாங்கி கப்பல் பெருங்கடல்களில் ஒரு மிதக்கும் நகரமாகவே நாட்டின் நம்பிக்கையை சுமந்து தேசம் காக்கிறது.

கப்பல்கள், நீர்மூழ்கிகள் இவைகளின் வடிவமைப்பிலும் உருவாக்கத்திலும் பல சவால்களும் சிக்கல்களும் உண்டு. கப்பல் கட்டும் தளத்திலும், கடலிலும் பல சோதனைகளைக் கடந்த பிறகே தேச சேவைக்கு இவை அர்ப்பணிக்கப்படுகின்றன. ஆழ்கடலாடும் இந்த ஆயுத மேடைகள் சந்திக்கும் சுவாரசிய சோதனைகள் என்னென்ன?

(சோதனை தொடரும்)