வெற்றித் திசை


முத்து ஆதவன் வை.காளிமுத்து

நாம் யாரையும் அளவுக்கு அதிகமாக புகழத் தேவையில்லை. நம்மை யாரும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் அவர்களிடம் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 நாம் செய்கின்ற நல்ல செயல்களைக் காணும் சில நண்பர்கள் நம்மிடம் வெளிப்படையாக ஒரு வாழ்த்தோ அல்லது ஒரு பாராட்டோ கூட சொல்ல மாட்டார்கள்.நாம் அவர்களைப் பற்றித் தவறான கண்ணோட்டம் கொள்ளத் தேவையில்லை.

சில நண்பர்கள் நம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் நல்ல எண்ணத்தை நம்மிடம் அவர்கள் காட்டிக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவ்வாறு காட்டிக் கொண்டால் நம் நண்பர் நம்மை சம்பிரதாயத்துக்காக பாராட்டுகிறார் என்று எண்ணிவிடக்கூடும் என்ற உணர்வில் தான் அவ்வாறு செய்வார்கள்.

 நான் சில நண்பர்களைப் பார்த்திருக்கிறேன் அவர்கள் நம்மைப்பற்றி, நம்முடைய செயல்களைப் பற்றி நம்மிடம் ஏதும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிப் பெருமையாக பேசிக்கொள்வார்கள். இந்த நண்பர் உங்களைப் பற்றி இப்படி பெருமையாக கூறினார் என்று நம்மை பார்க்கும் போது அந்த நண்பர் கூறும் போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

 சில நண்பர்கள் அப்படியே தலைகீழ். நாம் ஒரு புத்தகம் வெளியிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த புத்தகத்தை நாம் வெளியிட்ட தகவலை அவர் தெரிந்து வைத்திருப்பார். அதை வைத்துக் கொண்டே நம்மை சந்திக்கும் போது ‘‘உங்க புத்தகம் ரொம்ப அருமைங்க சார் நல்லா எழுதியிருக்கீங்க” என்று ஆகா, ஓகோ என்பார். அவ்வளவும் பொய், ஒரு பக்கத்தைக் கூட அவர் படித்திருக்க மாட்டார் அல்லது அந்த புத்தகமே அவர் கையில் இருக்காது .இப்படியும் சிலர் இருப்பார்கள்.

ஆக ஒருவர் நம்மை புகழ்வதையோ அல்லது புகழாமல் இருப்பதையோ வைத்து எந்த ஒரு நண்பரையும் எடை போட்டு விடக்கூடாது. நாம் நம்முடைய கடமையைச் செய்கின்றோம், நமக்கு விருப்பமானதைச் செய்கின்றோம் அல்லது சமுதாய நன்மைக்காக் செய்கின்றோம் என்று நம்முடைய ஆத்ம நிறைவுக்காக மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்து மகிழ வேண்டுமே அல்லாமல் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் அல்லது புகழ வேண்டும் என்பதற்காகச் செய்யக்கூடாது  என்பதில் நாம் கவனமாக இருந்தால் இன்னும் நிறைய தூரம் நம்மால் பயணம் செய்ய முடியும்.

 நாம் செய்கின்ற ஒரு செயல் நமக்குப் பெரிதாக அல்லது ஒரு சாதனையாக தெரியும் அவ்வாறே அதை மற்றவர்கள் கருத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வாறு கருதவும் மாட்டார்கள். அவரவர்கள் செய்கின்ற வேலைகள் தான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியும். மற்றவர்கள் வேலை அவர்களுக்கு ஒரு  பொருட்டல்ல.

அதனால் நம் வழியில் நாம் நம் பணியை தொய்வின்றி செய்து கொண்டே போக வேண்டும். ஒருவர் நம் வேலையை, செயலை நம் சாதனைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காக நம் செயல்கள் சிறுத்துப் போகாது.

யாரும் சட்டை செய்யவில்லை என்பதற்காக அந்த செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காமலும் போகாது. ஒரு நாள் இல்லையானாலும் ஒரு நாள் அதன் பயனை நாம் அனுபவிப்போம்.

‘‘வெற்றிச் சிந்தனைகள்’’ என்ற தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்ற நூல் ஒன்றை 2017 ஆம் ஆண்டு வெளியிட்டேன். அந்த நூல் கடைகளிலே நன்றாக விற்பனையாகி ஆறு மாதத்தில் ஆயிரம் பிரதிகள் தீர்ந்து விட்டன. பிறகு அதை நான் மறுபதிப்பு செய்யவில்லை.

ஆனால் தற்போது 2022 ஜூலையில் மதுரையில் ஒரு புத்தக விற்பனையாளரிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. உங்களின் ‘‘வெற்றிச் சிந்தனைகள்’’ நூல் 950 பிரதிகள் உடனே அனுப்ப இயலுமா? ஒரு சுயநிதிக் கல்லூரியில் கேட்கிறார்கள் என்று கேட்டார்கள். 15 நாட்கள் அவகாசம் கேட்டு 950 பிரதிகளை அச்சிட்டு அனுப்பி வைத்தேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவைகள் உயர்வான மற்றும் விருப்பமான எண்ணங்களாக இருந்தால் உடனே அவற்றை நாம் செயல்களால் நடைமுறைப்படுத்திவிட வேண்டும். அதை மற்றவர்கள் பாராட்டுகிறார்களா இல்லையா? வரவேற்கிறார்களா இல்லையா?என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது.

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவர் ஒரு தமிழறிஞர், அவர் முனைவர் பட்டமெல்லாம் பெற்றவர். பல விருதுகளை வாங்கியவர்.  என்னிடம் மிக நன்றாக, இனிமையாக பேசுவார். நம் மீது அக்கறை கொண்டவர்.  நீண்ட நாட்களாக பழகுகிறோம் என்று ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன். அந்த நூல் திருக்குறள் சார்ந்தது. அவர்தான் நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை என்ற அளவில் அவரை முதுமைப்படுத்தி இருந்தேன். விழாவிற்கு முன்னிலை வகிப்பவர்கள் தலைமை மற்றும் நூல் பெறுவோர் என பல சிறந்த தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

 அந்த நூலை வெளியிட்டுப் பேச வேண்டிய அந்த தமிழறிஞர் நூலைப் பற்றி நிறை குறைகளை பேசுவார், பேச வேண்டும் நானும் வளரும்  எழுத்தாளன், ஆனால் அந்த அறிஞரோ நிறை என்று ஒன்றுகூட பேசாமல் குறைகளை அடுக்கினார். அந்த குறைகளுக்கு அவர் ஏதேதோ பொருள்களை கற்பித்து பேசினார். முடிவில் உனக்கு எதற்கு இந்த வேலை? திருவள்ளுவரை, திருக்குறளைப் பற்றி எழுத உனக்கு என்ன தெரியும்? அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோமே என்றெல்லாம் பிதற்றினார்.மேடையில் இருந்த தமிழ் அறிஞர்கள் எல்லாம் அவர் பேச்சை இரசிக்கவில்லை. ஒரு வளரும் கலைஞனை ஊக்கப்படுத்த வேண்டுமே அல்லாமல் இப்படியா சபை நாகரிகம் இல்லாமல் பேசுவது? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பிறகு பேச வந்த தமிழறிஞர்கள் அனைவரும் அந்த நூலைப் பற்றி சிறப்பாகப் பேசியதோடு மேடையிலேயே கூடுதலாக ஐந்து பிரதிகள், பத்து பிரதிகள் என்று பணம் கொடுத்து வாங்கி ஊக்கப்படுத்தினார்கள்.

பொதுவாக விழா எடுப்போர், பெரியவர்களை அழைப்பது அதன் மூலம் அப்பெரியார்க்கு மரியாதை செய்யும் பொருட்டும்,மேலும் அவர் கூறும் சிந்தனைகள் பலரைச்சென்றடையும் நோக்கிலும், அவரின் அனுபவங்கள் அவரை அழைத்தோர்க்குப் பயன் நல்கும் நோக்கிலேயாம்.

“குணம் நாடி குற்றமும்நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

  ஒருவரின்  குறை, நிறை இரண்டையும் ஆராய்ந்து எது மிகையாக இருக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  திருவள்ளுவர் கூறுகிறார், ஐயா அவர்கள் என் நூலில் ஒரு நிறையையும் காணாவிட்டாலும் அவரின் வசவையும் வாழ்த்தாக ஏற்கிறேன்’’ என்று கூறி முடித்தேன்.

 பிறகு அந்த நூல் அனைத்தும் வெளியிட்ட வேகத்தில் விற்றும் தீர்ந்தன. ஒருவர் நம்மிடம் மிக இனிமையாக பேசுவதற்கும், அதேநேரம் நம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்”

கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாக பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன் எல்லோராலும் இகழப்படுவான் என்று திருவள்ளுவர் கூறும் வாய்மை இங்கு நினைவுகூறத்தக்கது.

உறுதிசெய்னைப் பேணுங்கால் நாணலும்,
திறன் வேறு கூறின் பொறையும்…..”

என்ற சங்கப்பாடல் ஒன்று பிறர் நம்மைப் புகழும் போது நாணப்பட வேண்டும், புகழாமல் திறன் வேறு கூறினும் அதாவது நம்மை பிறர் இகழ்ந்தாலும் அதற்காக வருந்தாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது.

” புகழ்ச்சியில் மயக்கறு;
புன்மையை உதறு;
இகழ்ச்சியைத் தாங்கு;
எள்ளலை எடுத்தெறி;
நிகழ்ச்சியை வரிசைசெய்;
நினைவினை உறுதிசெய்;
மகிழ்ச்சியும்,துயரமும்
மனத்தின் செயல்களே!”

என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வைர வரிகள் என்றும் நம் நெஞ்சில் தாங்கத்தக்கவை.

*      பிறரின் புகழுரைக்கு மயங்கிவிடாதே

*      தீய எண்ணங்களை உதறிவிடு

*      பிறர் இகழ்ந்தால் பொறுத்துக்கொள்

*      பிறரின் கேலி,கிண்டல்களை மனதில் கொள்ளாதே

*      செய்து முடிக்க வேண்டியவற்றை பட்டியல் இடு

*      அவற்றைச் செய்து முடிக்க வேண்டுமென்று உறுதி எடு

*      நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், துயரமாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

இந்த வைர வரிகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டால் புடமிட்ட தங்கமாக ஒளிரலாம் என்பதில் எந்த ஐயமுமில்லை.   சிந்திப்போம்!