‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’

நூல் வெளியீட்டு விழா

விஞ்ஞானி பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதிய “இந்தியா 75 – போர் முனை முதல் ஏர் முனை வரை” என்ற சிறப்பான நூல் வெளியீட்டு விழா, 27.8.2022 சனிக்கிழமை, மாலை 5.00 மணியளவில், சென்னை, பிராட்வே, தூய கபிரியேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைெபற்றது. தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை A.சகாயராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

இந்த சிறந்த நிகழ்விற்கு தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்கள். தனது தலைமையுரையில் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள வாழை மரத்தின் பயன் தன்னை மிகவும் ஈர்த்ததாகக் கூறினார். வாழை மரம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது என்பதை எடுத்துக் கூறியபோது, வாழை மனிதரை வாழ வைக்கிறது; அதேசமயம் பெரும் மழையால் ஏற்படும் சேதத்தால் வீழவும் வைக்கிறது. அறிவியல் அறிஞர்கள் இந்தச் சேதத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு முனைந்திருப்பதைப் பாராட்டினார்.

கொரோனா காலத்தில் மனிதர்கள் கொடூரமாகக் கைவிடப்பட்டார்கள். இதுபோன்ற ஒரு சூழல் இனி உலகில் ஏற்படாமல் அறிவியல், மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நூலைப் பற்றிய அறிமுக உரையை, காவல் துறை உயர் அதிகாரி டாக்டர் சாமூண்டேஸ்வரி ஐ.பி.எஸ். அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த இந்தியா-75 என்ற நூல் குறிப்பாக மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மிகவும் ஒரு வழிகாட்டியாக உள்ளது என்பதை எடுத்துச் சொன்னார்கள்.

“இந்த நூலை டாக்டர் வி. டில்லிபாபு, தான் படித்த பள்ளியில் வெளியிட்டதோடு, தன் பெற்றோர்களையும், கற்றுத் தந்த ஆசிரியர்களையும் கௌரவித்து, மரியாதை செய்ததன் மூலம் மாணவர்கள் உங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு முன் மாதிரியைக் காட்டியுள்ளார்” என்று வாழ்த்தினார். டிரோன்களின் பயன்பாடுகள், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ், தூக்கி எறிந்து எதிரிகளைக் கண்காணிக்கும் (Throw Robot), வாழை இலையிலிருந்து ஆடைகள் தயாரித்தல் இப்படி எண்ணற்ற புதிய தொழில் நுட்பங்களை இந்த நூலிலிருந்து அறிய முடிகின்றது. இந்தத் தொழில்நுட்பங்களில் பல சாதாரண மக்களுக்கும், தொழில் துைறயினருக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைகின்றது.

“மாணவர்கள் பள்ளியிலிருந்து கல்லூரி நோக்கிச் செல்லும் போது என்ன படிக்கலாம்? எப்படிப் படிக்கலாம்?” என்பதற்கும் வழிகாட்டியுள்ளார்கள் இந்த விஞ்ஞானிகள். இருவரது எல்லா நூல்களிலும் ஒரு ஒற்றுமையை நான் காண்கின்றேன். அதாவது ஒவ்வொரு கட்டுரையிலும் இன்றைய தொழில்நுட்பத்தையும், வரப்போகும் தொழில்நுட்பத்தையும் விவரிக்கிறார்கள். அந்தத் தொழில்நுட்பம் என்ன விளைவுகளை உருவாக்கும்; அதனை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிமுறைகளையும் அருமையாகத் தருகின்றார்கள். இதன்மூலம் நூலைப் படிப்பவர்கள் அதைத் தங்களுக்குப் பயனுள்ள ஒன்றாக மாற்றிட வழிகளைத் தருகின்றார்கள் என்று பேசினார்.

மேலும் இந்த நூலில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மாணவர்களுடைய மனக்குரலைக் கண்டுணர்ந்து, பல பதில்களைத் தந்துள்ளார் என்று விரிவாக எடுத்துரைத்தார்.

ெதாடர்ந்து நூலின் சிறப்புகளை வாழ்த்திப் பேசினார் விஞ்ஞானி. டாக்டர் நம்பிநாராயணன் அவர்கள், “நூலைப் படித்த போது, இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் சொற்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அடடா நானும் கூட அறிவியல் கருத்துக்களை எழுதிச் சமூகத்துக்கு உதவியிருக்கலாமே, என்ற ஏக்கத்தைக் கொடுத்தது’’ என்று வாழ்த்தினார். மாணவர்கள் எதை அதிகம் விரும்புறீர்களோ, அதை முதலில் கண்டுகொண்டு, அதற்கான தேடலைச் செய்து, தொடர்ந்து முயன்றால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்” என்றார்.

மேலும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களை வாழ்த்தும் போது, “எங்களது இஸ்ரோவில் அவரை நிலா மனிதர், செவ்வாய் மனிதர் என்று அழைப்பார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு இனிமையான மனிதர். காரணம், அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது, நேரம் போவதே தெரியாது. அவருடைய அறிவியல் அறிவு, ஆர்வம் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும். கடும் வேலைகளுக்கு மத்தியிலும், ேநரத்தைக் கண்டறிந்து எழுத்துப் பணியிலும் சேவை செய்துள்ளதை எண்ணிப் பாராட்டுகிறேன்” என்று வாழ்த்தினார்.

ெதாடர்ந்து ‘‘விஞ்ஞானி வி. டில்லிபாபு என்னிடம் ஒரு நேர்காணலுக்கு வந்த போது அரை மணிநேரம் பேச விரும்புவதாகக் கூறிவிட்டு, பல மணிநேரம் ஆர்வமாய் பேசிச் சென்றார். தனது பணியில் ஆர்வமுடன் அவர் உள்ளதைக் கண்டு நான் மகிழ்ந்தேன்’’ என்று வாழ்த்தினார்.

இங்கே நாங்கள் மூன்று விஞ்ஞானிகள் வரிசையாக அமர்ந்துள்ளோம். எங்களுக்குள் மூன்று ஒற்றுமைகள் உள்ளது. முதலாவது நாங்கள் மூவரும் பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள். மூவரும் ஏழ்மையான, நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மூவரும் இந்த சமூகத்துக்காக, தேசத்துக்காகத் தங்களால் ஆன சாதனைகளைத் தந்துள்ளவர்கள் என்பதைக் கூறி, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டினார்.

நிகழ்வில் தொடர்ந்து நூலாசிரியர் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். ‘‘அறிவியல் இராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடும் நாங்கள் ஏன் தமிழில் புத்தகங்களை எழுதுகிறோம்? என்று நீங்கள் ெதரிந்து கொள்ள வேண்டும்.

1967-ஆம் ஆண்டு முதல் நாள் ‘ஆங்கிலம்’ உலகின் அறிவியல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், தங்கள் தாய்மொழியில் இருந்த அறிவியலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். காரணம், அதற்குத் தான் அங்கீகாரம் கிடைத்தது. இணையத்தில் சென்று கூகுளில் ‘SCIENCE’ ‘அறிவியல்’ என்று தேடினால் கோடிக்கணக்கில் தகவல்கள் வருகின்றது. உலகிலுள்ள ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை ஒருபுறமும், பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை ஒருபுறமும் வைத்துப் பார்த்தால், ஆங்கிலத்தினை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அறிவியலில் ஒரு நபருக்கு 17 பதிவுகளும், ஜெர்மனி மொழியாளர்களுக்கு இரண்டு பதிவுகளும், இரஷ்யா மொழிக்கு இரண்டு பதிவுகளும், சீன மொழிக்கு ஒன்றரைப் பதிவுகளும் தொழில்நுட்பத்தில் வருகின்றது. ஆனால் தமிழில் பார்த்தால் நபருக்கு 0.36 பதிவுகளே உள்ளது வேதனை தருகிறது. இந்தப் பின்புலத்தில் தான் நாங்கள் நள்ளிரவிலும், விமானப் பயணத்திலும், ஓய்வுநேரத்திலும் கட்டுரைகளை எழுதி தமிழை வளர்க்கிறோம்” என்று கூறினார். மேலும் “போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் செல்லாது” என்று தன் தந்தை அடிக்கடிக் கூறியதை நினைவுகூர்ந்து உழைப்பின் அவசியத்தையும் உணர்த்தினார்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “இது வெறும் நூல் அல்ல; உணர்வுகளின் சங்கமிப்பு. இந்தியா 75-ஆம் சுதந்திர ஆண்டில் மகிழும் போது, ஒரு இந்தியனாக நான் இந்த இந்தியா 75-ற்கு என்ன செய்துள்ளேன் என்பதைக் கவனிக்கும் விதமாகவும், என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் களமாகவும் இந்த நூலை எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார்”.

“சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்களுக்கும், கிடைத்த சுதந்திரத்தை 75 ஆண்டுகள் பேணிக் காத்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த நூலை அமைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் இந்த இரண்டிலும் ஈடுபட்டுள்ள பெரும் தலைவர் தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் இவ்விழாவுக்குத் தலைமை ஏற்றிருப்பது சிறப்பான ஒன்றாக இருக்கின்றது”.

“சுதந்திரத்திற்குப் பின்னாலும் இந்தியா பேணிக் காக்கப்பட்டதால் தான், இன்று இந்தியனாகிய என்னைப் போன்றோரால், எந்த நாட்டிலும் நெஞ்சை நிமிர்த்திப் பேச முடியும் என்றால், அதற்கு இந்திய விண்வெளி மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒரு காரணமாக இருக்கின்றது. அந்த நிறுவனத்தை வளர்த்து அடித்தளமிட்டு, தடைகளைக் கடந்து பயணித்து, இன்று நம்மால் மங்கள்யான், சந்திராயன் என்று சாதிக்க முடிகிறது என்றால், அதற்கு விதைபோட்டு வளர்த்தவர்களில் ஒருவர்தான் இங்கே அமர்ந்திருக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள்” என்று கூறினார்.

“இந்தியா-75 என்ற இந்த நூல் சுதந்திர இந்தியா சுதந்திரம் பெற பட்ட பாடுகளையும் சுதந்திரம் பெற்ற பின்பு பெற்ற கஷ்டங்களையும், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் சவால்களையும் அந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய திட்டங்களையும் எடுத்துரைக்கும் நூலாக உள்ளது”.

“கோவையில் செம்மொழி மாநாடு 2010-இல் நடந்த போது நான் உரிமையுடன் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரிடம் கேட்டேன், “எங்கள் ஊரில் இம்மாநாடு நடக்கிறது. எனவே, அறிவியல் அரங்கை நான் முன்னெடுத்து நடத்துகிேறன்” என்று கூறினேன். அப்போது முதல்வர் கருணாநிதி, “இது வழக்கமாக நடப்பது தானே” என்றார். அப்போது நான் “வழக்கமாக நடந்த அறிவியல் அரங்கில் சங்கத் தமிழிலும், இலக்கியங்களிலும் அறிவியல் பற்றிப் பேசப்பட்டுள்ளது பற்றி விவாதிக்கப்பட்டது. இது உண்மையோ, இல்லையோ என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இந்த அரங்கில் தமிழகத்தில் வாழும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை, ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை தமிழர்களில் சாதித்த, பல்துறை சார்ந்த முப்பது இளைஞர்களைக் கொண்டு வந்து அரங்கை நடத்துகிறோம்” என்று கூறி அதை நிகழ்த்தினோம்” என்பதையும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

அனைத்துத் துறையிலும் இருப்பவர்கள் தங்களது துறைகள் சார்ந்து தமிழில் எழுத வேண்டும், தமிழில் பேச வேண்டும். அப்போது தமிழும் உயரும், தமிழனும் உயர்வான் என்பதையும் எடுத்துச் ெசான்னார்.

‘‘மாணவர்கள் தங்கள் இலக்கு என்பதை இயல்பாக அறியலாம். உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. இதற்கு புத்தகங்கள் பேருதவி புரிகின்றன. புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு பொறி  தட்டும். அதுபோல இந்த இந்தியா 75 – உங்கள் மனதில் ஒரு பொறியைப் பரப்பி, வெற்றி பெற வேண்டும் என்ற திரியைப் பற்ற வைக்கும்’’ என்று மிகச் சிறப்பான, நல்லதொரு ஏற்புரையை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் டாக்டர் மெ. ஞானசேகர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். ஆசிரியை திருமதி. ஆனி பிளாரன்ஸ் நிகழ்வினைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

சிறப்பான நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களும், விஞ்ஞானி வி. டில்லிபாபு அவர்களின் பெற்றோர்களும், அவரது முன்னாள் ஆசிரியர்கள் திரு. அருள் மரியதாஸ் மற்றும் திரு. அமலதாசன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

கல்வியாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய கபிரியேல் பள்ளியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என்று அரங்கம் நிறைந்த மிகச்சிறந்த, அறிவுக்கடலில் மூழ்கிடச் செய்த விழாவாக சிறப்பாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழா நிகழ்வுகளைப் பின்வரும் https://youtu.be/YBpN7cRcvN8 இணையத்தளத்தில் காணலாம்.

நூலைப் பெற விரும்புவோர், அமேசான் மூலமும், ஆளுமைச் சிற்பி மாத இதழ் அலுவலகம் மூலமும் தொடர்பு கொண்டு பெறலாம்.ll