புதிய தொடர்

 

டாக்டர் அமுதா B. பாலகிருஷ்ணன் – ஒரு அறிமுகம்

டாக்டர் அமுதா B. பாலகிருஷ்ணன் அவர்கள் அமுதா ஹார்டுவேர்ஸ், அமுதா ஏஜென்சீஸ், அமுதா அரங்கம் A/c, அமுதா பதிப்பகம் ஆகியவற்றின் உரிமையாளர். அமுதா கல்வி அறக்கட்டளையின் தலைவர், அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொழிலதிபர், கவிஞர் என்று பன்முகத் திறன் கொண்ட பண்பாளர்.

நமது ‘ஆளுமைச்சிற்பி’ மாத இதழின் அட்டைப்பட நாயகராக ஜனவரி 2021-இல் டாக்டர் அமுதா B. பாலகிருஷ்ணன் அவர்களது பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. நமது ஆளுமைச்சிற்பி இணையதளத்தில் முழு நேர்காணலையும் காணலாம்.
(www.aalumaisirpi.com) கடும் உழைப்பாலும், நேர்மையான விடாமுயற்சிகளாலும் உயர்நிலை அடைந்துள்ள பெருமகனார். ஏராளமான இலக்கிய ஆர்வலர்களை ஊக்கமூட்டி உதவி வரும் கொடையாளர்.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அவை முன்னவர், அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர், அண்ணாநகர் நலச் சங்கத்தின் துணைத் தலைவர், அண்ணா நகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர், உரத்த சிந்தனை அமைப்பின் துணைத் தலைவர், அண்ணா நகர் வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவர், மத்திய சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றச் செயலாளர் என்று இன்னும் பல பொறுப்புகளில் ஈடுபட்டு நற்பணி செய்து வருகின்றார். உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று வந்த பேரனுபவம் பெற்றவர்.

குரு சிவசந்திரன் அன்பாலயத்தின் மாநிலத் தலைவர், அண்ணாநகர் வசந்தம் லயன்ஸ் கிளப்பின் தலைவராகவும், சவுத் இந்தியாவின் சானிடரிவேர்ஸ் டீலர்ஸ் அசோசியேஷனின் இணைச் செயலாளராகவும், ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளராகவும் பணி செய்தவர். பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், மாத இதழ்கள் வழங்கிய ‘வாழ்நாள் விருது’ பெற்றவர்.

சென்னை மாநகரத் தமிழ்சங்கம் வழங்கிய, ‘மொழிக்காவலர் விருது’ அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் வழங்கிய ‘தமிழ் சான்றோர் விருது’ ஆகியவற்றைச் சமீபத்தில பெற்றவர். ஏராளமான விருதுகளையும், பாராட்டுதல்களையும் பெற்ற புகழுக்கு உரியவர். இவரது பல நூல்களும் பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ள பாராட்டுக்குரியன.

நமது இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, வாசகர்களுக்கு ஒரு தொடரை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, “வா இளைஞனே, வியாபாரி ஆகலாம்” என்ற தொடரை வழங்க முன்வந்துள்ளார். ஐயா அவர்களை கரம் கூப்பி, நன்றியோடு வரவேற்கின்றோம். இந்தத் தொடரை வழங்குவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதால் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இந்தத் தொடர் தொழில் செய்து முன்னேறலாம் என்ற உந்துதலை விளைக்கும் என்பதில் பேரானந்தம் அடைகிறது ஆளுமைச் சிற்பி.