வெள்ளோட்டம் வெல்லட்டும் – 6

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

மாநகராட்சியை அர்ச்சித்தபடி குண்டும் குழியுமான  நகரச் சாலைகளில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? அப்படி வாகனம் ஓட்டுவது எவ்வளவு சிரமம் என்பது பலருக்கும் தெரியும்.  வாகன அதிர்வுகளில் ஓட்டுபவருக்கும் உடன் பயணிப்பவருக்கும் உடலியல் பாதிப்புகள் ஏற்படும். வாகனத்தின் பாகங்களின் ஆயுள் காலமும் குறையும். அப்படிப்பட்ட பயணங்களில் விபத்துகள்  நிகழவும் அதிக வாய்ப்புகள் உண்டு.

அதைப்போல மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய சாலைகளில் வாகனம் செலுத்துவதும் கொடுமையானது. என்ஜின் அணைந்து வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் வாகன ஓட்டிகளைப் பார்த்திருக்கிறோம். பராமரிப்பு பணிகளைச் சரிவர செய்யாத பொறியாளர்களை, மேற்பார்வை செய்யாத ஆட்சியாளர்களை அந்த நேரத்தில் திட்டித்தீர்த்து அடுத்த தேர்தலுக்குள் மறந்து விடுகிறோம்.

சாலைகளை குண்டு குழியில்லாமல் பராமரிப்பதும், தண்ணீர் தேங்காமல் வழிசெய்வதும்  மாநகராட்சி பொறியாளர்களின் கடமை. ஆனால் குண்டும் குழியுமான சாலைகளை வடிவமைத்து அமைப்பதும் பொறியாளர்களின் பணி என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம். அப்படி வடிவமைத்து அமைக்கப்படும் சாலைக்கு ‘சித்ரவதை சாலை’ (Torture Track) என்று பெயர்.

சித்ரவதை சாலைகள்

குண்டும் குழியுமாக, பள்ளம் மேடாக அமைக்கப்படும் ‘சித்ரவதை சாலைகள்’ எதற்காக? இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை சோதிப்பதற்காக. வாகனங்களை வடிவமைக்கும் பொறியாளர்கள் அவ்வாகனங்கள் நடைமுறையில் சந்திக்கும் எல்லா சூழல்களையும் கருத்தில் கொள்வது அவசியம். அவல நிலையிலுள்ள சில நகரச்சாலைகளில் வாகனங்கள் எப்படி செயல்படும் என்பதை சோதித்து பார்க்க வேண்டியதும் அவசியம். அப்படி சோதித்து பார்க்கவே ‘சித்ரவதை சாலைகள்’ பயன்படுகின்றன.

சாலைகள் இல்லாத எல்லைப்பகுதியில் கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் ராணுவ வாகனங்களை சோதிக்கவும் ‘சித்ரவதை சாலைகள்’ பயன்படுத்தப்படுகின்றன. ராணுவ வாகனங்களை வடிவமைக்கும் ‘வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ (Vehicle Research and Development Establishment -VRDE), மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் அஹமதுநகரில் உள்ளது. டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தை சார்ந்த இந்த ஆய்வுக்கூடத்தின் சித்ரவதை சாலைகள் சிலவற்றில் நான் பயணம் செய்திருக்கிறேன்.

சித்ரவதை சாலைகளில் வாகனம் எப்படி செயல்படுகிறது? வாகன பாகங்களின் தேய்மானம் எப்படி இருக்கிறது? போன்றவற்றை பொறியாளர்கள் சோதித்துப் பார்ப்பார்கள். அலைகளைப் போல மேலும் கீழுமாக வளைந்த சாலைகளும் உண்டு. இச்சாலைகளில் வாகனம் செலுத்தப்படும் போது எந்த அளவுக்கு தளர்ச்சியை (Fatigue) தாங்குகிறது என்பதும் சோதிக்கப்படும்.

பிரேக் பிடித்தவுடன் எவ்வளவு தூரம் சென்று வாகனம் நிற்கிறது என்பதைச் சோதிக்க சோதனைச் சாலைகள் உண்டு. வேறுபட்ட உராய்வு தன்மை கொண்ட தார்ச்சாலை, கான்கிரீட், கருங்கல் சாலைகளில் வாகனம் எப்படி பிரேக் பிடித்தவுடன் நிற்கிறது என்பதை சோதிக்கும் சோதனைச் சாலைகள் உள்ளன. வாகனத்தின் சக்கரத்துக்கும் சாலைக்கும் இடையேயுள்ள உராய்வுத்தன்மை, உராய்வுக்கெழு (Coefficient of friction) என்ற அளவீட்டில் கணக்கிடப்படுகிறது. 0.15 முதல் 0.9 வரையிலான உராய்வு அளவுகளில் வாகனங்களை சோதிக்கும் சோதனை சாலைகள் இந்தியாவில் உள்ளன.

வாகனம் எவ்வளவு வேகமாகச் செல்லும், எவ்வளவு எரிபொருள் செலவாகும் போன்றவற்றை அளவிட அதிவிரைவு சோதனைச் சாலைகள் (High Speed Tracks) உண்டு.

சரிவான மலைச்சாலைகளில் வாகனம் எப்படிச் செயல்படும் என்பதை சோதிப்பதற்காக சரிவானச் சோதனைச் சாலைகள் (Gradient tracks) உண்டு. பல ஏற்ற இறக்க சரிவுகளில் வாகனங்கள் சோதிக்கப்பட்டு சாய்மானத்தின் (Gradability) அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.

சரிவு சோதனைச் சாலைகள்

ஈரமான சாலைவளைவுகளில் வாகனங்கள் சறுக்கி விபத்துகள் நிகழும். இதையும் சோதனைச் சாலைகளில் பரிசோதிப்பார்கள். இதற்கென ஈர வளைவு சாலைகள் (Circular Wet Pad) உண்டு. தேங்கிய தண்ணீரில் வாகனங்களின் இயக்கத்தை சோதிக்கும் (Water wading tests) நடைமுறைகளும் உண்டு. இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாலை உண்டு. தண்ணீர் தேங்கும்  வகையில் சாலையை வடிவமைப்பதும் பொறியாளர்களின் வேலை தான்!

 வாகன என்ஜின் ஏற்படுத்தும் இரைச்சல், வாகனச்சக்கரம் சாலையில் உராய்வதால் ஏற்படும் இரைச்சல் என ஒலியை அளவிடும் சோதனைகளும் உள்ளன. சாலையைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு வாகனத்தினால் ஏற்படும் ஒலி பாதிப்பை மட்டுப்படுத்த இவ்வகை சோதனைகள் அவசியம்.

மின்காந்த பாதிப்பு

மின்சாதனங்கள், மின்னணு சாதனங்கள் மின்காந்த அலைகளை எழுப்பும். ஒரு சாதனத்தின் மின்காந்த அலை அருகிலிருக்கிற மற்றொரு சாதனத்தின் இயக்கத்தை பாதிக்கும். இதற்கு மின்காந்த குறுக்கீடு (Electro Magnetic Interference-EMI) என்று பெயர். ஒரு காலத்தில் வீட்டில் மிக்ஸியை இயக்கினால் தொலைக்காட்சித்திரையில்  மாறுபாடுகள் தெரியும். இப்படிப்பட்ட சிக்கல்கள் வாகனங்களில் தவிர்க்கப்பட வேண்டும். வாகனத்தில் இருக்கும் மின், மின்னணு சாதனங்கள் ஒன்றையொன்று பாதிக்கக் கூடாது. பிற வெளிப்புற சாதனங்களின் மின்காந்த அலை வாகனத்தின் இயக்கத்தை பாதிக்கக்கூடாது. இதற்காக மின்காந்த இசைவு (Electro Magnetic Compatibility-EMC) சோதனை செய்யப்படும். பிரத்யேக எதிரொலியில்லா அறையில் (Anechoic Chamber) வாகனங்களை நிறுத்தி இச்சோதனை செய்யப்படும்.

வாகனங்கள் இப்படிப் பல கட்ட சோதனைகளைச் கடந்த பிறகு தான் பொதுவெளியில் புழக்கத்துக்கு வருகின்றன. வாகன சோதனைக்கூடங்கள் நேட்ரிப் (National Automotive Testing and R&D Infrastuction Project-NATRiP) என்ற திட்டத்தின் மூலம் சென்னை, ஹரியானா, பிதம்பூர், சில்சர், பூனா, அஹமதுநகர் ஆகிய இடங்களில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனப் பாதுகாப்புச் சோதனைகள்

விபத்துகளில் சிக்கினால் எந்த விதமான பாதிப்புகள் வாகனங்களுக்கு ஏற்படுகின்றன? இருக்கைப்பட்டை அணிவதால் எப்படி பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது? எனப் பல சோதனைகள் உள்ளன. அவை என்னென்ன?

(சோதனை தொடரும்)