வெற்றித் திசை


முத்து ஆதவன் வை.காளிமுத்து

நாம் எப்பொழுதுமே நம்முடைய மனதை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்க வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை உடையதாக நம்முடைய மனதை நாம் வைத்திருக்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் எதுவுமே எழுதப்படாத ஒரு கரும்பலகை போல நம்முடைய மனம் இருக்க வேண்டும்.

 ஒரு நாளைக்கு நாம் நம்முடைய எண்ணத்தால், சொல்லால், செயலால் செய்கின்ற அனைத்தும் நம்முடைய மனதிலே பதிவாகி விடுகின்றன. இந்த மனம் ஒரு எழுதப்பட்ட கரும்பலகை போன்றது. ஒரு கரும்பலகையில் ஒரு செய்தியை தெளிவாக எழுத வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்ற செய்திகளை அழிப்பானைக் கொண்டு நன்றாக அழித்து சுத்தமாக வைத்திருந்தால்தான் புதிதாக நாம் எழுத நினைத்ததை அழகாக எழுத முடியும். எப்பொழுதுமே நம்முடைய மனதை எழுதிய கருப்பலகையாக வைத்திருந்தால் புதிதாக எதையும் நம்மால் அதில் எழுத முடியாது.

அது போலத் தான் எத்தனையோ விசயங்களை நாம் நம்முடைய மனதிலேயே எழுதி வைத்திருக்கின்றோம். எழுதிக் கொண்டே இருக்கின்றோமே தவிர, அவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பதில்லை எழுதப்பட்ட கரும்பலகை மேலேயே மேலும் மேலும் எழுதினால் என்னவாகும்? குழப்பமே மிஞ்சும். நாம் புதிதாக எழுதியதும் தெரியாது, ஏற்கனவே இருக்கின்ற எழுத்தும் புரியாது. இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் மலிந்து கிடக்கின்றன. நம்முடைய வாழ்க்கை சிக்கல்கள் இல்லாத நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்றால் நாம் நம்முடைய மனதை எப்படி பராமரிக்கின்றோமோ, அதற்கு தக்கபடி தான் நாம் சிக்கலற்ற, மகிழ்வான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் தகுதியானவர்களாக ஆகின்றோம்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழி நாம் அறிந்ததே.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்                        (குறள்-706)

கண்ணாடி எவ்வாறு தன்னை அடுத்த பொருட்களை எல்லாம் தனதாக்கி காட்டுகின்றதோ அதைப்போல நம் மனதிலே உள்ளவற்றையெல்லாம் நம் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால்  காணப் படும்”      (குறள்-298)

இந்தக்குறளையும் நாம் சிந்திக்க வேண்டும். நம் உடம்பில் உள்ள அழுக்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம். நீரைக் கொண்டு சுத்தம் செய்த உடம்பை பார்த்தாலே அதன் தூய்மை நமக்குத் தெரியும்.

ஒருவருடைய மனம் தூய்மையாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்றால் ஒருவருடைய வாயிலிருந்து வரக்கூடிய உண்மையான சொற்களின் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

மனம் தூய்மை இல்லாதவர்கள் வாயில் இருந்து ஒரு நல்ல சொல்லும் வராது. பொய்மையும், கபடமும், வஞ்சமும் நிறைந்த சொற்களை மட்டுமே எப்போதும் பேசிக் கொண்டிருப்பார்கள். இதிலிருந்து அவர்கள் மனத்தூய்மை அற்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மை பேசுகின்றவர்கள் தூய மனத்தினர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இதைத்தான் இந்த திருக்குறள் வலியுறுத்துகிறது.

மனதைப் பொருத்தவரை நமக்கு இரண்டு இன்றியமையாத கடமைகள் உள்ளன.

* முதலாவது கடமை நமது மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது.

* இரண்டாவது கடமை என்னவென்றால் மனதை வடிவமைப்பது.

நமது மனம் ஏற்கனவே வடிவமைக்கப் படவில்லையா? என்றால் நிச்சயமாக ஏற்கனவே அது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வடிவம் தான் நம்முடைய இன்றைய வாழ்க்கை.

இன்றைய வாழ்க்கையே சிறப்பாக இருக்கிறது என்றால் நம்முடைய மனதின் வடிவத்தை மேலும் அழகாக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நம்முடைய வாழ்க்கை சலிப்பும், துன்பமும், துயரமும், நிறைந்ததாக இருந்தால் நாம் நம்முடைய மனதின் வடிவமைப்பை மாற்றி அமைத்திட வேண்டும். மனதை உடைய ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வாய்ப்பு இயற்கையில் வழங்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இதைப் புரிந்து கொண்டு தனது மன அமைப்பை மாற்றி அமைத்தார்களோ அவர்களெல்லாம் வெற்றி பெற்றவர்களாக உலகத்தால் அறியப்படுகிறார்கள்.

யாரெல்லாம் மனதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் மனதை பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கிற்கு விட்டுவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களெல்லாம் தொடர்ந்து துன்பமான, துயரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை.

மனதை மாற்றி அமைக்கும் மூன்று முக்கிய விசயங்கள்:

1.விளக்கம்
2.பழக்கம்
3.வழக்கம்

மனம் மாற்றப்பட முடியாதது அல்ல. மனதை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

மனதை நிலத்திற்கு ஒப்பாகச் சொல்வார்கள். நிலமானது இரண்டு வகைப்பட்டது. ஒன்று பண்படுத்தப்பட்ட நிலம் மற்றது பண்படுத்தப்படாத நிலம். நிலத்தை நன்றாக உழுது, உரமிட்டு, விதைத்து ,பாத்தி கட்டி, நீர் விட்டு கண்காணித்து வந்தால் அந்த நிலம் நமக்கு மிகுந்த விளைச்சலைக் கொடுத்து நாம் வளமாக வாழ்வதற்கு வழி செய்கிறது.

 பண்படுத்தப்படாத நிலம் புல்லும், முள்ளும் மன்றி ஒன்றுக்கும் பயன்படாத நிலமாக மாறிவிடுகிறது. அது போல் தான் நமது மனமும். மனத்தை நன்றாக பண்படுத்தி தன் வசத்தில் வைத்திருக்கும் மனிதனுக்கு அவன் மனமானது அனைத்து நன்மைகளையும் செய்து அவனை மேன்மை அடைய வைக்கிறது . பண்படுத்தப்படாத மனம் அந்த மனிதனை அதன் போக்கிலே இழுத்துச் சென்று ஒரு நெறியற்ற வாழ்க்கையை வாழ்வதற்கும் அதன் மூலமாக இன்னல்களை அடைவதற்கும் காரணமாக இருக்கிறது.

 நம் மனம் பண்பட வேண்டும் என்றால் முதலில் மனம் விளக்கம் பெற வேண்டும். மனதிற்கு சில விசயங்களை நாம் விளங்க வைக்க வேண்டும் .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் மனதைப் பற்றிய ஆராய்ச்சியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 மனம் என்பது என்ன? அது எப்படி இயங்குகிறது? மனதை அதன் போக்கிலே விட்டால் நமக்கு என்ன  தீமை செய்கின்றது? மனதை நம் வசப்படுத்தி நாம் கையாண்டால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்பதைப் பற்றி எல்லாம் நாம் சிந்தித்து விளங்கி ஒரு தெளிவைப் பெற வேண்டும் இதுதான் மனதைப் பற்றிய விளக்கமாகும்.

இதுவரை நாம் அடைந்த அனைத்தும் நம் செயல்களால் நாம் அடைந்தன என்பதைத் தெரிந்து கொண்டால், இனி நாம் அடையப் போகின்ற நன்மைக்கும், தீமைக்கும் காரணமாக இருக்கப் போவதும் நம்முடைய செயல்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டால், அந்த செயல்கள் நம்முடைய மனதில் இருந்து தோன்றியன என்பதை விளங்கிக் கொண்டால், மிக எளிதாக நாம் மனதை மாற்றி அமைத்து விடலாம்.

 மனதை மாற்றியமைப்பது என்பது மனம் ஏற்கனவே பழக்கப்பட்ட பழக்கப் பதிவில் இருந்து மனதை மீட்டுப் புதிய பழக்கங்களை மனதிற்கு தொடர்ந்து ஊட்ட வேண்டும். புதிய பழக்கங்களை தொடர்ந்து ஊட்ட, ஊட்ட அதுவே மனதின் வழக்கமாக ஆகிப்போகும். எந்தப் பழக்கத்தை நாம் திரும்பத் திரும்ப செய்கின்றோமோ அந்த பழக்கமே நமக்கு வழக்கமாகி போகும். இதுதான் நாம் நம்முடைய மனதை மாற்றி அமைக்கும் நுட்பமாகும்.

இவ்வாறு நாம் அடைய வேண்டிய வெற்றியை,மகிழ்ச்சியை அதை நோக்கி இலக்கைத் தீர்மானித்து, அதற்கு ஏற்றவாறு மனதை தினந்தோறும் பழக்கும்போது அந்த பழக்கமே மனதின் இயல்பாக மாறி நாம் எண்ணியதை எண்ணியவாறு அடையக்கூடிய ஆற்றலை நம் மனம் நமக்கு வழங்கும்.

இன்னுமொரு சிந்தனையை நாம் செய்வது நம் அறிவிற்கு விருந்தாக அமையும்.இப்போது இப்படி சிந்திக்கலாம்.

நாம் வேறு; நம் மனம் வேறா?

இதுதான் அந்த சிந்தனை. சாதாரணமாக பார்த்தால் நாம் வேறு நம் மனம் வேறாக தான் தெரிகிறது. இதுதான் நமக்கும் நமது மனதிற்குமான முரண்பாடு. இந்த முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான் நம்முடைய வாழ்க்கை. உண்மையில் நாமும் நம் மனமும் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும், எது நடக்க இருக்கின்றதோ அதை மட்டுமே நினைப்போம். ஆனால் இப்போது அப்படி இல்லை நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. நாமும் நம் மனமும் ஒன்று என்றால் அதிகாலையில் நாம் எழ வேண்டும் என்று விரும்பி  5 மணிக்கு அலாரம் வைத்து படுக்கிறோம். ஆனால் அதிகாலையில் 5 மணிக்கு அலாரம் அடிக்கும் போது நாம் அலாரத்தை அமர்த்தி விட்டு மீண்டும் தூங்கி விடுகிறோம்.

‘நாளை முதல் இதை செய்ய மாட்டேன்’ என்று ஒரு உறுதி எடுக்கிறோம். ஆனால் நாளை மீண்டும் அதையேதான் செய்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு நேரம் நம் மனம் நினைத்ததை செயல்படுத்த நம் உடல் மறுக்கிறது. ஒரு நேரம் உடல் சொல்வதை ஏற்க மனம் மறுக்கிறது. அப்படி என்றால் நாமும் நம் மனமும் ஒன்றாக இருக்க வேண்டியது போய் நாமும் நம் மனமும் வேறு வேறாக இருக்கின்றோம்.

” யோகம்” ” யோகி” என்ற வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் யார் யோகி? என்றால் தானும், தன் மனமும் முரண்படாமல் ஒன்றிணைந்து செயல்படும் நிலையை அடைந்தவர்களுக்கு யோகி என்ற பெயர். யோகம் என்றால் மனமும் அந்த மனிதனும் ஒன்றுபட்ட நிலையில் செய்கின்ற ஓர்மைப்பட்ட செயலுக்கு யோகம் என்று பெயர்.  மனிதனையும் மனதையும் இணைத்து வைக்கக்கூடிய ஒரு நுட்பமான கலைக்குப் பெயர் தான் யோகம் என்பது.

 மனம் என்பது அலையும் தன்மையுடையது. எனவே மனம் எதையாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு அதன் வழியிலேயே நம்மை இழுத்துச்சென்றுவிடும். அந்த வழிக்கு நம்மை இழுத்துச் செல்ல எல்லா முயற்சிகளையும் செய்யும். சாதாரணமாக நாம் சொல்லுவோம் ‘‘எவ்வளவோ முயற்சி பண்றேங்க ஆனா என்னால நினைக்கிற மாதிரி நடக்க முடியல’’ என்கிறோம். இப்ப இந்த மனசை அதனுடைய அலையும் தன்மையை குறைத்து நமக்கு உதவிகரமான ஒரு பொருளாக நாம் மாற்ற வேண்டுமென்றால், அந்த மனதிற்கு ஒரு நுட்பமான பயிற்சியின் மூலமாக மனதின் ஓட்டத்தையும், அலையும் தன்மை நாம் குறைக்க வேண்டும். மனதின் அலையும் தன்மையை குறையும்போது அது நமக்கு நன்மை செய்யக் காத்திருக்கும். யோகிகள், மகான்கள் எல்லாம் இந்த மனிதனுடைய மனதை மனிதனுக்கு பயன்படும் வகையிலே மாற்றி அமைப்பதற்கு அவர்கள் அறிந்திருந்த பயிற்சி முறையை நமக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்தப் பயிற்சிதான் தியானம், தவம், மூச்சுப் பயிற்சி என்பதெல்லாம்.

நம்முடைய மனதிற்கும் நம்முடைய மூச்சிருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாம் நம் மனதின் ஓட்டத்தைக் குறைத்து அதை நிலைக்கச் செய்ய வேண்டும் என்றால், நாம் நம்முடைய மூச்சின் மீது மனதை செலுத்தி தியானம் செய்ய வேண்டும். அல்லது சில நுட்பங்களின் மூலமாக மூச்சை ஒழுங்குபடுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இவற்றின் மூலமாக நாமும் நம் மனமும் ஒன்றுபட்டு நாம் வாழ்வில் நமது தேவையான அனைத்து வளங்களையும், நலங்களையும் பெற்று ஒரு நிறைவான மகிழ்வான வாழ்வை வாழ முடியும். இந்த மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, தவப்பயிற்சி என்பதைப்பற்றி சரியாக புரிந்து கொண்டு அதற்கு சரியான நபர்களை தெரிந்து கொண்டு அல்லது சரியான நூல்கள் மூலமாக அறிந்து படித்து அதை செயல்படுத்த முனைந்தால் நாமும் நம் வாழ்வை நாம் நினைத்த மாதிரி வாழலாம்.

மூச்சுப்பயிற்சி

நம் மனத்திற்கும் நம் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது மூச்சு ஓடினால் மனம் ஓடும் . மூச்சை ஒழுங்கு படுத்தினால் மனம் ஒழுங்கடையும் சாதாரணமாக ஓரிடத்தில் அமர்ந்து அது காலையோ அல்லது மாலையோ அல்லது ஓய்வாக இருக்கும் போது ஒரு பத்து நிமிடம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய நம்முடைய மூச்சை நாம் கவனிக்க வேண்டும்.

 சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கின்ற மூச்சை நம் மனதால் கவனிக்க கவனிக்க நம்முடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய எண்ணங்கள் குறையும். நம்முடைய எண்ணங்கள் குறைய குறைய மனதினுடைய இயக்கத்தில் மாறுபாடு உண்டாகும். அலைபாய்ந்து கொண்டே இருக்கக்கூடிய மனமானது சற்றே அலைவதைக் குறைத்து ஒரு அமைதி நிலை அடையும். மனம் எப்பொழுது அலை நிலையில் இருந்து நிலை நிலைக்குத் திரும்பி ஒரு அமைதியை அனுபவிக்கின்றதோ அப்பொழுது நாமும் நம்முடைய மனமும் ஒரே நேர்கோட்டில் நிற்போம். இவ்வாறு நாமும் நம் மனம் ஒரு நேர்கோட்டில் இருந்து இணக்கத் தன்மையோடு செயலாற்றும்போது மனிதனால் அடைய முடியாத என்று எதுவுமே இல்லை.

இது ஒரு அறிவியல் பூர்வமான ஒரு நுட்பமாகும். இந்த மூச்சை கவனிக்கும்  பயிற்சி முறையில் தொடர்ந்து முன்னேறினால் மனம் அடைகின்ற அந்த அமைதி நிலைக்குத்தான் தியான நிலை, யோக நிலை என்று பெயர். இந்த மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவைகளை யாரோ ஒரு துறவியோ அல்லது சாமியாரோ செய்ய வேண்டியது என்று புறந்தல்லாமல் மனதை உடைய ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது என்பதையும் இதில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளையும் விளங்கிக் கொண்டால் மனதை நம் வசப்படுத்தி நாம் எண்ணியவற்றை எண்ணியவாறு அடையலாம்.

எனவே மனதை அதன் போக்கில் விடாமல் மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சிகளின் மூலமாக மனதின் வடிவமைப்பை நமக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா நிலைகளிலும் மிக எளிதாக நாம் வெற்றியடையலாம்.

மனமே நம் வாழ்வை வடிவமைக்கும் சிற்பியாக இருக்கிறது .மனமே நம் உயர்வுக்கான படிக்கட்டாக இருக்கிறது என்பதையும் மனதின் சிறப்பையும் உணர்ந்து கொள்வோம். வெற்றியடைவோம்! 